Home செய்திகள் அமைதியாக இருக்கும் ஆலையடிவேம்பு மக்களை போராட்டகாரர்களாக மாற்றி விடாதீர்கள் -பொதுமக்கள் எச்சரிக்கை

அமைதியாக இருக்கும் ஆலையடிவேம்பு மக்களை போராட்டகாரர்களாக மாற்றி விடாதீர்கள் -பொதுமக்கள் எச்சரிக்கை

எரிபொருள் தட்டுப்பாடு

அமைதியாக இருக்கும் ஆலையடிவேம்பு மக்களை போராட்டகாரர்களாக மாற்றி விடாதீர்கள் என இன்று தர்மசங்கரி மைதானத்தில் எரிவாயுவிற்காக காத்திருந்து ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தில் எரிவாயு வழங்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து இன்று அதிகாலை 3 மணிமுதல் அரச உத்தியோகத்தர்கள் அன்றாட தொழிலாளர்கள் பெண்கள் சிறுவர்கள் வயோதிபர்கள் கர்ப்பிணிப்பெண்கள் என 500 இற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர்.

அத்தோடு நீண்ட வரிசையில் எரிவாயு சிலிண்டர்களோடும் காத்திருந்தனர். ஒன்று கூடிய மக்கள் நண்பகல் வரை காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.
எவ்வாறாயினும் எரிவாயு சிலிண்டகள் வழங்கப்படாது எனும் தகவலை அறிந்து மிகுந்த வேதனையோடு அவ்விடத்தை விட்டு நகராது காத்திருந்தனர். இதனால் குறித்த வீதியினுடான போக்குவரத்தும் தடைப்படும் நிலை உருவானது.

இந்நிலையில் அங்கு வருகை தந்த அக்கரைப்பற்று காவல் நிலைய போக்குவரத்து பிரிவினர் குறித்த நிலை தொடர்பில் மக்களுக்கு எடுத்துரைத்து வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கினர்.

ஆலையடிவேம்பில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடம்பெறவில்லை என்பதுடன் இதுபோன்ற இரு சம்பவங்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளதாக கூறினர்.

அயல் பிரதேசங்களில் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் கூட ஆலையடிவேம்பில் வழங்கப்படவில்லை எனவும் ஆலையடிவேம்பு மக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர். ஆகவே எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுவது தொடர்பில் முறையான அறிவித்தல் ஒன்றை சம்மந்தப்பட்டவர்கள் முன் கூட்டி அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதுவரையில் ஆலையடிவேம்பு மக்கள் அமைதியாகவே உள்ளதாகவும் நாளை தமக்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படவில்லையாயின் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி நிலை உருவாகும் எனவும் சுட்டிக்காட்டினர்.

மட்டக்களப்பில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் எரிபொருள் நிலையங்களுக்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version