மீனவர் பிரச்சினையை அரசியல் ஆக்க வேண்டாம் | யேசுராசா

மீனவர் பிரச்சினை

யேசுராசா

மீனவர் பிரச்சினையை அரசியல் ஆக்க வேண்டாம்

இராமேஸ்வரம் விசைப்படகுகள் சங்க தலைவர் யேசுராசா அவர்கள்  தமிழக – ஈழத்தமிழ் மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக உயிரோடைத் தமிழ் வானொலியின் தமிழக களம் நிகழ்ச்சிக்காக வழங்கிய சிறப்புச் செவ்வியின் முக்கிய பகுதிகள்.

கேள்வி:
இந்தப் பிரச்சினையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்:
கடல் தோன்றி மீன்பிடிக்க ஆரம்பித்த காலங்களிலிருந்து மாமன் மச்சான், அண்ணன் தம்பி என்ற முறையில் தான் கச்சதீவுப் பகுதியில் தொழில் செய்து வந்தோம். கச்சதீவுத் திருவிழாவை இரண்டு நாட்டு மீனவர்களுமே சந்தோசமான முறையில் கொண்டாடி வந்தோம். எங்கள் சாப்பாட்டை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் சாப்பாட்டை நாங்கள் சாப்பிட்டு, கடலில் ஒன்றாகச் சந்தித்துப் பேசி மகிழ்ந்த காலங்கள் நிறையவே உண்டு.

எப்போது இலங்கையில் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்குமிடையில் போர் மூண்டதோ 1983 இலிருந்து தமிழக மீனவர்கள் ஈழத் தமிழர்களுக்கு, விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்கின்றனர் என்ற நோக்கத்தில் இலங்கைக் கடற்படை இந்திய மீனவர்களை சுடுவது, கைது செய்வது, படகுகளை சிறைப்பிடிப்பது போன்ற எண்ணற்ற துன்பங்களை இலங்கைக் கடற்படை எங்களுக்குக் கொடுத்தார்கள். ஆனால் அந்த காலப்பகுதியில் ஈழத்தமிழர்கள் மீன்பிடித் தொழிலுக்கே வரவில்லை. அந்த நேரம் நாங்களும் மீன்பிடித்துக் கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து கொண்டு பிரச்சினையில்லாமல் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். போர் மூண்டதிலிருந்து சூழ்நிலை மாறியது. நாங்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றோம்.

மீனவர் பிரச்சினைபோர் முடிந்த பின்னர், இலங்கைத் தமிழ் மீனவர்களும் மீன்பிடிக்க ஆரம்பித்தனர். அவர்கள் சிறியரக படகுகளில் மீன் பிடித்தனர். சில இடங்களில் குருநகர், பேசாலை, மன்னார் போன்ற இடங்களில் சிறிய விசைப்படகுகளில் இழுவலை கொண்டு மீன்பிடிக்கின்றனர். நாங்கள் புதிதாக மீன்பிடிக்கப் போகவில்லை. எங்கள் முன்னோர்கள் மீன்பிடித்த பகுதிகளிலே தான் நாங்கள் மீன்பிடிக்கின்றோம். தற்போதைய தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததால், இந்திய மீனவர்களிடம் சிறந்த விசைப்படகுகள் இருக்கின்றன. எங்கள் விசைப்படகுகளால் இலங்கைத் தமிழர்களின் வலைகள் கிழிந்து போவதாகக் குற்றச்சாட்டுகள் வருகின்றன. அது மறுக்க முடியாத உண்மை. இரவு நேரங்களில் நாங்கள் மீன்பிடிக்கும் போது அவர்களின் வலைகள் சேதமடையக்கூடிய சூழ்நிலைகள் உள்ளன.

தமிழக அரசும், மீன்வளத்துறை அதிகாரிகளும் சரி தமிழக மீனவர்கள் இலங்கைக் கரையோரங்களில் இலங்கை மீனவர்களுக்கு யாரும் இடையூறாக தொழில் செய்யக் கூடாது   என்று கோரப்பட்டுள்ளது. அப்படி செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒரு சிலர் எல்லை தாண்டிப் போய் இலங்கை மீனவர்களுக்கு இடையூறாக தொழில் செய்யும் போது, இவ்வாறான விபரீதங்கள் ஏற்படுகின்றன.

அண்மையில் இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களின் படகுகள் முட்டி மூழ்கடித்ததாக செய்திகளிலும் வந்திருந்தது. மக்களும் தெரிவிக்கின்றனர். அது எங்களுக்கு வேதனையாக இருக்கின்றது. ஏனெனில், உயிரிழப்பு என்பது யாருமே ஏற்க முடியாத ஒரு செயல். இரவு நேரங்களில் கடலில் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாது. ஆனால் இந்தியப் படகு முட்டி அவர்களுக்கு சேதம் விளைவிக்கின்றது என்று சொல்வது எங்களுக்கு வருத்தம் அளிக்கின்றது. அந்த இறப்பிற்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படியான சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது. எங்களுடைய நிலைப்பாடு என்னவெனில், இதில் என்ன நடந்தது என்ற உண்மை நிலையைக் கண்டறிந்து, இருநாட்டு மீனவர்களும் அங்கும் இங்கும் போராட்டம் நடத்தாது, சுமுகமாகப் பேசி ஒரு தீர்வைக் காண வேண்டும். பாரம்பரியமாகத் தொழில் செய்யும் இடத்தில் இரண்டு பகுதியினருமே மீன்பிடிக்கலாம் என்பது எனது கருத்தாகும்.

கேள்வி:
இது தொடர்பாக இலங்கை மீனவர்களுடன் நீங்கள் ஏதாவது பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறீர்களா? அல்லது இது சம்பந்தமாக ஏதாவது அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறீர்களா?

பதில்:
அறிக்கை வெளியிட்டுள்ளோம். 1983இலிருந்து ஏறக்குறைய 400 மீனவர்கள் இலங்கை கடற்படையால் உயிரிழந்துள்ளனர். ஆயிரக் கணக்கான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. 200, 300 படகுகளை பறிமுதல் செய்தமையால், அந்த மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்து போயுள்ளது. இப்படி ஏகப்பட்ட பிரச்சினை நடந்துள்ளது. ஆனால் 2004இலிருந்து மீனவர் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து, இரு நாட்டு மீனவர்களும் பிரச்சினையின்றி மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சொல்லி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, 2004, 2010, 2011, 2012 ஆகிய காலங்களில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம்.

இதில் ஒரு பிரச்சினை என்னவெனில், எங்களை விசைப்படகுகளில் இழுவலை கொண்டு மீன்பிடிக்கக் கூடாது என்று இலங்கை மீனவர்கள் கட்டளையிடுகிறார்கள். ஆனால் எங்கள் நாட்டில் இழுவலை கொண்டு மீன்பிடிப்பது தடை செய்யப் படவில்லை. இலங்கையில் அது தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சட்டம். எங்கள் நாட்டில் கடலட்டை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதை பிடித்தால் தேசக் குற்றம் போல கைது செய்வார்கள். ஆனால் இலங்கையில் அதற்குத் தடை இல்லை. அப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சட்டதிட்டங்கள் இருக்கின்றது.

மீனவர் பிரச்சினைநாங்கள் சொல்வது என்னவென்றால், வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நாங்கள் அந்த பாரம்பரிய இடங்களில் தொழில் செய்வதற்கு அனுமதியுங்கள். இலங்கைக் கரையோரப் பகுதிகளில் நாங்கள் யாருமே தொழில் செய்ய வரமாட்டோம். அதற்கு அவர்கள் எங்கள் கடலில் நீங்கள் மீன்பிடிக்க உரிமையில்லை என்று சொல்கிறார்கள். இரண்டு பகுதியினருமே அண்ணன் தம்பி உறவுகளோடு அந்தக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இருபகுதியினரதும் வாழ்வாதாரம் அந்தக் கடலிலே தான் இருக்கின்றது.

கச்சதீவை இந்தியா இலங்கைக்குக் கொடுத்ததன் பின்னர் எல்லை குறைவாகப் போனது. தற்போது இராமேஸ்வரத்திலிருந்து வெறும் 12 கடல்மைல்களே எங்களுக்கு உள்ளன. 2 மணிநேரத்தில் எங்கள் படகில் கச்சதீவிற்கு வந்து விடலாம். கச்சதீவிற்கும் நெடுந்தீவிற்கும் இடைப்பட்ட கடல் பகுதயிலேயே மீன்கள் உற்பத்தியாகி இரண்டு பகுதிக்கும் பிரிந்து செல்கின்றன. கச்சதீவை இலங்கைக்குக் கொடுத்ததனால், மீன் உற்பத்தியாகும் பகுதியும் எங்களுக்கு இல்லாமல் போயுள்ளது. இதனால் எல்லை தாண்ட வேண்டிய சூழ்நிலை வருகின்றது என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் இழுவலையை நிற்பாட்ட வேண்டும் என்றே கூறிக் கொள்கிறார்கள். குறித்த 5 வருட காலத்திற்கு இழுவலையை நிறுத்தலாம் என்று சொன்னால், அவர்கள் அதற்கு ஒத்துக் கொள்வில்லை.

பேச்சுவார்த்தையில் முக்கிய பிரச்சினை என்னவெனில், இந்த தமிழகப் பேச்சுவார்த்தைக் குழுவில் இராமேஸ்வரம் முதல் நாகபட்டினம், காரைக்கால் வரை 10 உறுப்பினர்கள் தான் கலந்து கொள்வோம். எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், ஆள் மாற்றம் இன்றி கலந்து கொள்வோம். ஆனால் இலங்கைத் தரப்பில் ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்கும் 3பேர், 4பேர் மாறிவிடுவார்கள். பேச்சுவார்த்தை முடிவடையக் கூடாது என்ற ஒரு சூழ்நிலையாகவே நான் அதைக் கருதுகிறேன். இந்த வருடம் என்ன பேசியிருக்கிறோம். அடுத்த வருடம் என்ன பேசப்போகிறோம். எப்படி இந்தப் பேச்சுவார்த்தையை முடிக்கப் போகிறோம் என்று சொல்லி பேசிய நபர்கள் இருந்தால் மட்டும் தான் தெரியும். இதனால் இந்தப் பேச்சுவார்த்தை நிறைவு பெறவில்லை.  பின்னர் மீனவர்களிடையே மோதல்கள் வரும் போது, இரு நாட்டு அரசுகளும் தாங்கள் அரசாங்கங்களிடையே பேசிக் கொள்கிறோம் என்று கூறியது.

அண்மையில் நடைபெற்ற சம்பவத்திற்கும், மக்கள் அமைதி காக்க வேண்டும். மாறி மாறி போராட்டம் நடத்தினால், இருபகுதி மக்களுக்கும் கஸ்டம் ஏற்படும். கடலில் இரு நாட்டு மீனவர்களும் மோதும் நிலை வந்தால், இரு பகுதியினருக்குமே அது பாதிப்பாக இருக்கும். இரு நாட்டு தமிழ் மீனவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கு ஏதோ ஒரு அரசியல் கட்சி முடிவு பண்ணியிருக்கும் ஒரு சூழ்நிலையாகக் கருதுகிறோம். எனவே அமைதி காத்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காண்பதற்கு நாங்கள் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். நீங்கள் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துங்கள். இரு பகுதியினரும் பேசலாம். இரு நாட்டு அரசுகளும் பேசி ஒரு முடிவு சொன்னால் நமக்கு ஒரு முடிவு கிடைக்கும். இரண்டு பகுதியினரதும் வாழ்வாதாரங்களும் பாதுகாக்கப்படும். நாங்கள் அறிக்கை விட்டிருக்கிறோம். சங்கத் தலைவரிடம் பேசியிருக்கிறோம். எங்கள் அரசிற்கும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இலங்கை அரசிற்கும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.

Tamil News