Home செய்திகள் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற பெயரில் ஒட்டுக்குழுச் செயற்பாடுகளை அனுமதிக்க வேண்டாம் 

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற பெயரில் ஒட்டுக்குழுச் செயற்பாடுகளை அனுமதிக்க வேண்டாம் 

ஒட்டுக்குழுச் செயற்பாடுகளை அனுமதிக்க வேண்டாம்

ஒட்டுக்குழுச் செயற்பாடுகளை அனுமதிக்க வேண்டாம்: “’ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று சிங்கள பௌத்த இனவாதியான ஞானசார தேரரின் தலைமையில் இயங்கும் இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள ஆணைக்குழு, கடந்த நவம்பர் 21 ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் என்ற பெயரில் இயங்கும் குழு சார்பாக ஐந்து பெண் உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு குறித்த சங்கத்தின் இயக்குநர்களான லீலாதேவி ஆனந்தநடராசா உள்ளிட்டோரால் பணிக்கப்பட்டுள்ளார்கள்”என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதன் மூலம் இலங்கை அரசு முன்னெடுக்கும் உள்ளகப் பொறிமுறைகளில் பாதிக்கப்பட்ட தரப்புகளும் பங்கேற்றுள்ளன என்று இலங்கை அரசு கணக்குக் காட்டுவதற்கும் சர்வதேச நீதிக்கான முன்னெடுப்புகளை மறுப்பதற்குமான ஆதாரப்புகைப்படங்களாகவும் இக்கூட்டத்தில் ஐவரின் பங்கேற்பு ஞானசார தேரரின் ஆணைக்குழுவால் பயன்படுத்தப்படுகிறது.

01-12-2021-enforced-disappeared-statement-final

இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்குமாறு தூண்டிவிட்ட சங்கத்தை வழிநடத்தும் புலம்பெயர் மற்றும் தாயக இயக்குநர்கள் மற்றும் சில அரச ஊடகவியலாளர்கள் இந்தப் பலிக்கடாச் செயற்பாட்டுக்குப் பொறுப்பாகிறார்கள்.

ஏற்கனவே, இதுபோன்ற உள்ளகப் பொறிமுறைக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்க முயலும் சதி நடவடிக்கைகளுக்கு குறித்த சங்கத்தினர் பலிக்கடா ஆக்கப்பட்ட வரலாறு தெரிந்தும், மீண்டும் மீண்டும் அதே நடவடிக்கைகள் தொடருவதால், இந்தப் போக்கின் ஆபத்தைப் பொதுவெளிக்குக் கொண்டுவரவேண்டிய தேவை எமது அமைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதேவேளை, மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவிற்குக் காலம் தாழ்த்தி நியமிக்கப்பட்ட தமிழ் உறுப்பினரான அரச ஆதரவு முன்னாள் யாழ் நகராதிபதி யோகேஸ்வரி பற்குணராசா, தற்போது இந்த ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ எனும் ஆணைக்குழுவிலும் காலந்தாழ்த்தி நியமிக்கப்பட்ட தமிழ் உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார். இது சர்வதேச மனித உரிமை விவகாரங்களை உள்ளகப் பொறிமுறைகள் மூலம் நீர்த்துப்போகச் செய்யும் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமே இந்த நியமனம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

எமது உறவுகள் வலிந்து காணாமலாக்கப்பட்டதை இலங்கை அரசு திட்டமிட்டு முன்னெடுத்துவரும் இன அழிப்பு வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாகத் தமிழ்த் தேசியச் சக்திகள் அணுகிவரும் சூழலில், அதை மறுதலித்து, கண்துடைப்பு நிதி நிவாரணத்தின் ஊடாகக் கையாள இலங்கை அரசு முயல்கிறது. இதற்குப் பாதிக்கப்பட்ட தரப்புகளை ஒத்துப்போகச் செய்யும் வகையிலான அரசியலை வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் என்ற பெயரில் இயங்கும் இந்தக் குழு ஒட்டுக்குழு அரசியல் போலத் தழுவியுள்ளதா என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளது. இந்த இரட்டை முகவர் செயற்பாடுகளுக்குள் காணாமலாக்கப்பட்ட உறவுகள் பலியாகாது சரியான பாதையில் சரியான அமைப்பின் கீழ் பயணிக்கத் தயாராக வேண்டும்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version