சிதைக்கப்படும் தமிழர் தாயகமும் அச்சுறுத்தப்படும் தமிழ்த்தேசியமும்

சிதைக்கப்படும் தமிழர் தாயகமும்
பி.மாணிக்கவாசகம்
தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல், அவர்களின் தாயகக் கோட் பாட்டிலேயே மையம் கொண்டிருக்கின்றது. வரலாற்று ரீதியிலான அவர்களின் வாழ்விடங்களாகிய வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தையே அந்தக் கோட்பாடு உள்ளடக்கி இருக்கின்றது. இது வெறுமனே தாயக மண்ணாக அல்லாமல், சமூக, கலை, கலாசார, வாழ்வியல் கூட்டுச் சேர்க்கையின் அரசியல் அடையாள மாகத் திகழ்கின்றது. இதுவே தமிழ்த் தேசியத்தின் அடி நாதம்.

இந்தத் தாயகப் பிரதேசத்தில் இறைமை சார்ந்த அரசியல் உரிமைகளுடன் தங்களைத் தாங்களே ஆளத்தக்க அதிகார பலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அவர்களின் அரசியல் கோரிக்கையாகும். இது சாதாரண அரசியல் கோரிக்கை அல்ல. அது இரத்தமும், சதையும் உள்ளடங்கிய உணர்வுக் கலவை சார்ந்த உயிர் மூச்சின் பிரகடனம் என்றே கூற வேண்டும்.

அத்தகைய உன்னதமான தாயகக் கோட்பாட்டு அரசியல் உரிமைக்காகவே அவர்கள் ஏழு தசாப்தங் களாகப் போராடி வருகின்றார்கள். தமிழ் மக்களின் தாயக மண்ணுரிமை சார்ந்த அந்த அரசியல் போராட்டத்தின் அடையாளமாக இலங்கையின் இனப்பிரச்சினை திகழ்கின்றது. புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இலங்கையின் பேரின அரசியல்வாதிகள் நாட்டம் இல்லாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

சிதைக்கப்படும் தமிழர் தாயகமும் அச்சுறுத்தப்படும் தமிழ்த்தேசியமும்

இனப்பிரச்சினை என்பது நாட்டின் தேசியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள போதிலும், பேரின ஆட்சியாளர்கள் அதனை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அரசியல் தீர்வுக்கான தமிழ் மக்களின் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி அதனை இல்லாமற் செய்வதே அவர்களுடைய அரசியல் நிலைப் பாடாக இருந்து வருகின்றது. இதுவே சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்கள் தொடர்பிலான அவர்களுடைய அரசியல் கொள்கை.

பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, மறைமுக அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் ஊடாக தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை இல்லாமற் செய்து விட வேண்டும் என்பதில் பேரினவாதிகள் குறியாக இருந்து செயற்பட்டு வருகின்றார்கள். இனப் பிரச்சினையின் அடிநாதமாகிய தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து அழித்து விட்டால், பிரச்சினைக்கே இடமில்லாமல் போய் விடும் என்பது அவர்களின் நம்பிக்கை.

இதன் அடிப்படையிலேயே வடக்கு கிழக்குத் தாயகப் பிரதேசத்தை அங்கீகரித்திருந்த 13ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தில் ஒரே மாகாணமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கையும், கிழக்கையும் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் பிரித்து, இரண்டு பிரதேசங்களையும் வேறு வேறு மாகாணங்களாக்கி, அவற்றுக்கான மாகாண சபைகளையும் ஆட்சியாளர்கள் தந்திரோபாய ரீதியில் உருவாக்கினார்கள்.

அந்த மாகாண சபைகளின் அதிகாரங்களை எந்தெந்த வகைகளில் இல்லாமற் செய்ய முடியுமோ அந்தந்த வழிகளில் அவற்றை இல்லாமற் செய்வதிலும் அவர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள். அது மட்டுமன்றி, இந்தியாவினால் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமற் செய்வதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

இது வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகப் பிரதேசத்தை உள்ளடக்கிய தமிழ்த் தேசியத்திற்கு விழுந்த பலமான முதலாவது அடியாக வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட சம்பவம் திகழ்கின்றது. இதன் மூலம் தமிழர்களின் தாயகப் பிரதேசத்தை இரு கூறாகப் பிளந்ததுடன் பேரினவாதிகள் நின்றுவிடவில்லை. அதற்கு முன்னதாகவே தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான அந்த வாழ்விடங்களை ஆக்கிரமித்து, அங்கு சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி, தமிழ் மக்களின் தனித்துவமான இனப் பரம்பல் நிலைமையை உடைத்தெறிந்தார்கள்.

இதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்கள் தமிழ் மக்களின் பிடியில் இருந்து பலவந்தமாகப் பறிக்கப்பட்டு சிங்கள மக்களின் குடிப்பரம்பல் அதிகரிக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த மட்டில், தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை வீழ்ச்சி அடையச் செய்து, சிங்கள மக்களின் இன விகிதா சாரத்தை அவர்கள் வெற்றி கரமாக அதிகரித்திருக்கின்றார்கள்.

இதனால் இன ரீதியிலான குடிப் பரம்பல் நிலைமை மட்டு மல்லாமல், அரசியல் ரீதியிலான தமிழ் மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவமும் படுமோசமாக வீழ்ச்சி அடைந்திருக்கின்றது. இது தமிழ்த் தேசியத்தின் மீது விழுந்த இரண்டாவது அடியாகும்.

தேசியப் பாதுகாப்புப் போர்வையிலான ஆக்கிரமிப்பு

சிதைக்கப்படும் தமிழர் தாயகமும்1கிழக்கு மாகாணத்தைத் தமிழ் மக்களிடம் இருந்து கபளீகரம் செய்ததுடன், வடக்கு கிழக்கு இணைந்த தாயக நிலைப்பாட்டைத் தகர்ப் பதற்காக வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் வடமத்திய மாகாணத்தின் எல்லையில் வெலி ஓயா என்ற சிங்களக் குடியேற்றப் பிரதேசத்தை உருவாக்கி, வடக்கு கிழக்கு இணைப்பின் ஆதாரமாகிய நிலவழித் தொடர்புக்கு சிங்களக் குடிசனப் பரம்பலின் ஊடாக ஆப்பு வைத்தனர்.

இது போதாதென்று தமிழ் மக்களின் முப்பது வருடகால அரசியல் உரிமைப் போராட்டத்தின் ஆணி வேராகிய ஆயுதப் போராட்டத்தை – யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், வடக்கிலும், கிழக்கிலும் பல்லாயிரக் கணக்கான நிலப் பகுதிகளைத் தேசியப் பாதுகாப்புத் தேவை எனக் கூறி, இராணுவத்தினர் ஆக்கிரமித் திருக்கின்றனர். குறிப்பாக கிழக்கிலும் பார்க்க, வடக்கில் இந்த இராணுவ ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.

தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விட உரிமை சார்ந்த காணிகள் இந்த இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் கையகப்படுத்தப் பட்டிருக்கின்றது. யுத்த மோதல்களின் போது பாதுகாப்புக்காக மக்கள் வெளியேறிய பிரதேசங்களையும், இராணுவத்தினர் வலிந்து வெளியேற்றிய தமிழ் மக்களின் வாழ்விடப் பிரதேசங்களையும் இராணுவத்தினர் ஆக்கிரமித்தி ருக்கின்றனர்.

தமிழ் மக்களின் வாழ் விடங்கள் மட்டு மல்லாமல், அவர்களின் செழுமையான விவசாயக் காணிகளையும் இராணுவத்தினர் கையகப்படுத்தி உள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் நவீன வசதிகளுடன் இராணுவ முகாம்களும், இராணுவக் குடியிருப்புக்களையும் அரசாங்கங்கள் உருவாக்கி இருக்கின்றன. நவீன வசதிகள் மிக்க இராணுவ முகாம்களும், இராணுவக் குடியிருப்புக்களும் தேசியப் பாதுகாப்புக்கு அவசியம் என்ற போலிச் சாட்டுக்கு அப்பால், தமிழ் மக்களின் தாயக மண்ணில் சிங்களவர்களைக் குடியிருக்கச் செய்வதன் ஊடாக, தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதே அவர்களின் பிரதான நோக்கம்.

யுத்தம் காரணமாகவும், இராணுவத்தினரால் விரட்டப் பட்டதன் காரணமாகவும் இடம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் அகதி முகாம்களிலும், வாடகை வீடுகளிலும், நண்பர்கள் உறவினர்களின் இடங்களிலும் அல்லல்களுக்கு மத்தியில் குடியிருந்து வருகையில், அவர்களுடைய ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினர் சொகுசு விடுதிகளையும் கட்டிடத் தொகுதிகளையும் அமைத்து, நிரந்தரமாக நிலை கொண்டிருப்பதுடன், தமிழ் மக்களின் செழுமையான காணிகளில் இராணுவத்தினர் மிளகாய் உற்பத்தி உள்ளிட்ட விவசாயச் செய்கையிலும் ஈடுபட்டி ருக்கின்றனர்.

தமிழ் மக்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்து அவற்றில் சொகுசு வாழ்க்கை நடத்துவதும், இராணுவத்தினருக்குத் தொழில் ரீதியாக சம்பந்த மில்லாத நிலையிலான விவசாய முயற்சிகளில் ஈடுபடுவதும் தான் வட மாகாணத்தைப் பொறுத்த மட்டில் பேரின ஆட்சியாளர்களின் தேசியப் பாதுகாப்பு கொள்கையாகத் திகழ்கின்றது.

ஆக்கிரமிக்கப் பட்டுள்ள பிரதேசங்களின் நலன்களை தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தினர் அனுபவிக்கின்ற அதே வேளை, அந்தப் பிரதேசங்களைத் தமது சொந்த மண்ணாகக் கொண்ட இடம் பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் அகதிகளாக அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக் கின்றார்கள். இந்த நிலைமை முப்பது வருடங்களாகத் தொடர்கின்றது. இத்தகைய இராணுவ ஆக்கிரமிப்பு, தமிழ்த் தேசியத்தின் மீது விழுந்துள்ள மூன்றாவது முக்கிய அடியாகும்.

தமிழ் அரசியலைச் சிதைக்கும் முயற்சி

தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைத் தகர்த்து சிதைக்கின்ற சிங்களப் பேரின வாதிகளின் நடவடிக்கைகள் இந்த மூன்று முக்கிய படிமுறைகளில் மாத்திரம் மட்டுப்படுத்தப் படவில்லை. இவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களின் ஒன்றிணைந்த அரசியல் அமைப்பாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கின்ற அரசியல் நடவடிக்கைகளிலும் அவர்கள் கட்சி அரசியல் நடவடிக்கைகளின் ஊடாக மேற்கொண்டி ருக்கின்றனர்.

காலம் காலமாகவே தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களப் பேரின பிரதான அரசியல் கட்சிகளாகிய ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் வேரூன்று வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ள போதிலும், அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. சிறிய அளவில் தமிழ் மக்களைத் திசை திருப்பி ஒன்றிரண்டு நாடாளுமன்ற பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனரே தவிர, நிரந்தரமாக அரசியல் ரீதியாக இந்தப் பிரதேசங்களில் அவர்களால் நிலை கொள்ள முடியவில்லை.

ஆனாலும் ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா அம்மான் என்ற தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் போன்றவர்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கொண்டுள்ள ஆதரவுப் போக்கின் மூலம் அந்தக் கட்சி, வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கால் வைக்க முடிந்திருக்கின்றது. அதே போன்று மகிந்த ராஜபக்சவினரின் ஆதரவுப் போக்கைக் கடைப் பிடித்துள்ள அங்கஜன் ராமநாதனின் ஊடாகவும் பேரினவாதிகள் தமிழ்ப் பிரதேசத்தில் செல்வாக்குப் பெற முயன்றுள்ளனர். மேலும் மகேஸ்வரன், விஜயகலா மகேஸ்வரன் போன்ற தமிழ் அரசியல்வாதிகளின் மூலமாக வடக்கில் நிலை கொண்டிருந்தது. எனினும் அவற்றால் நிரந்தரமாகவும், தனித்துவமாகவும் தமிழ்ப் பிரதேசங்களில் நிலை கொள்ள முடியவில்லை.

ஆனாலும் தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்திச் செயற்பாடுகள், வேலையற்ற இளைஞர் யுவதி களுக்கான வேலை வாய்ப்பு போன்ற செயற் திட்டங்களின் ஊடாக நாட்டின் பிரதான கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற முயற்சிகளை மேற் கொண்டு வந்திருக்கின்றன. இதன் வழியில் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் முக்கிய அரசியல் குடும்பமாகிய ராஜபக்சக்களின் வாரிசாகிய நாமல் ராஜபக்ச விளையாட்டுத் துறை அமைச்சர் என்ற போர்வையில் வடக்கில் தனது அரசியல் செல்வாக்கை நிலை நாட்டுவதற்கான நேரடி முயற்சிகளில் ஈடுபட்டி ருக்கின்றார்.

சிதைக்கப்படும் தமிழர் தாயகமும்4கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம், விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் நேரடி அபிவிருத்தித் திட்டங்களின் ஊடான அரச செயற்பாடுகளை நடைமுறைப்படுத் தும் நோக்கில் நாமல் ராஜபக்ச வடக்கில் தமிழ் மக்களைத் திசை திருப்பி அவர்களது மனங்களில் இடம் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிகின்றது.

கௌதாரி முனையின் சீன கடலட்டைப் பண்ணை

இத்தகைய பின்புலத்தில் தான் சீனர்களும், பாகிஸ்தானியர்களும் வடக்கில் நிலை கொள்வதற்கு அரசாங்கத்தினால் அனுமதி அளிக்கப் பட்டிருக்கின்றனர். இது பற்றிய தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

வடபகுதி மக்களுடைய வாழ்வாதாரத்தில் கடல் வளம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் கடற் தொழிலையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வாழ்வாதாரத்தின் மூலம் இலங்கை மக்களுக்கு வட பகுதியின் கடலுணவு கிடைக்கின்றது. அத்துடன் வடபகுதி கடலுணவு ஏற்றுமதியின் ஊடாக அவர்கள் தேசிய வருமானத் திற்கும் பெருமளவில் உதவி வருகின்றார்கள்.

ஆனால் அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும் வகையில், தென்பகுதி மீனவர்களும், அதே போன்று தமிழக மீனவர்களும் எல்லை கடந்து, வட கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தப் பிரச்சினை நீண்ட காலமாகத் தீர்வு காணப்படாமல் இழுத்தடிக்கப் படுகின்றது.

சிதைக்கப்படும் தமிழர் தாயகமும்3இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேசத்தின் கௌதாரிமுனை கடற்பரப்பில் சீனப் பிரசை ஒருவருக்கு கடலட்டைப் பண்ணை தொழில் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு, தொழில் நடந்து வருகின்றது. இதற்கு ஆதாரமாக யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சீன அலுவலகம் ஒன்றும் இயங்கி வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பூநகரிப் பிரதேசத்தைச் சேர்ந்த உள்ளுர் மீனவர்களுக்குக் கடலட்டைத் தொழில் செய்வதற்கு அனுமதி மறுக்கப் பட்டு, தொலைவில் உள்ள சீனதேசத்து குடிமகன் ஒருவருக்கு கடலட்டைப் பண்ணைத் தொழிலுக்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கின்றது. மீன்பிடித் தொழிலுக்கு குறிப்பாக கடலட்டைத் தொழிலுக்கு அனுமதி வழங்கப்படுகின்ற நியம நடைமுறைகளை மீறிய வகையில் இந்த அனுமதி, அடையாளம் தெரியாதவர்களினால் வழங்கப் பட்டிருக்கின்றது. இதற்கு பொறுப்பு கூற வேண்டிய மீன்பிடித் துறை அமைச்சு அதிகாரிகளும், அரசாங்கமும் இது விடயத்தில் மௌனம் காத்து வருகின்றார்கள்.

எவ்வாறு எதிர் கொள்வது?

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, வடபகுதித் தமிழ் மக்களின் பிரதேச அடிப்படை உரிமை மீறலாக அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. அதே வேளை வடபகுதி மக்களுடைய வாழ்வாதாரத்தில் அடாவடியாக ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டிருக்கின்றது என்றே கூற வேண்டும்.

சீனா என்பது சாதாரண நாடல்ல. உகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட அது ஒரு பெரிய தேசம். இலங்கை என்பது ஒரு சின்னஞ்சிறிய தீவு. மடுவுக்கும் கடுகுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கொண்ட நிலையில் இந்த சின்னத் தீவின் வடபகுதியில் சிறிய இடத்தில் சீனக் குடிமகன் ஒரு கடலட்டைப் பண்ணையை வரையறைகளை மீறிய வகையில் நடத்துகின்றார் என்றால், அது சாதாரண விடயமல்ல. இதன் பின்னணியில் பெரியதோர் அரசியல் சூழ்ச்சி இருப்பதாகவே கருத வேண்டி உள்ளது.

கடற் தொழிலில் முன்னேற்ற மடைந்துள்ள சீனாவின் குடிமகன் ஒருவர் இங்கு வந்து கடலட்டைப் பண்ணை நடத்த வேண்டிய அவசியம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதுடன், இலங்கையின் சிக்கல்கள் மிகுந்த இப்போதைய வெளி விவகார அரசியல் நிலைமையில் இந்தக் கடலட்டைப் பண்ணை என்பது சீனர்கள் வடகடலில் ஆதிக்கம் பெறுவதற்கானதொரு கபட முயற்சியாகவே தோன்றுகின்றது.

அது மட்டுமல்லாமல், இலங்கைக்கான பாகிஸ்தானிய தூதுவர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, யாழ். மாவட்ட அரச அதிபர் தலைமையிலான அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகளை நடத்தியதுடன், மண்டைதீவுப் பகுதியில் பொழுதைக் கழித்து, அங்குள்ள நிலைமை களையும் நேரில் பார்த்துச் சென்றுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் கலாசாரத் தலைமைப் பிரதேசமாகிய வடமாகாணத்தில் ஆக்கிரமிக்கின்ற அதே வேளை, சீன மற்றும் பாகிஸ்தானியர்களையும் இந்தப் பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்கு அனுமதியளித்திருப்பது தமிழ்த் தேசியத்திற்கும், தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டிற்கும் விழுந்துள்ள மிகப் பலமானதோர் அடி யென்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அரசியல், சமூக, கலை, கலாசார ரீதியில் வட மாகாணத்துடனும், அங்குள்ள மக்களுடனும் எந்த விதத் தொடர்புகளுமற்ற ஒரு நாட்டின் இலங்கைக்கான தூதுவர் இவ்வாறு விஜயம் செய்து யாழ். மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியது எந்த வகையிலும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. அதேவேளை மண்டை தீவுப் பகுதியில் பாகிஸ்தானின் உல்லாச விடுதியொன்றை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அந்தப் பிரதேசத்து மக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்து, அதனை முறியடித்துள்ள பின்னணியில் பாகிஸ்தானிய தூதுவரின் விஜயம் நடைபெற்றிருக்கின்றது.

சிதைக்கப்படும் தமிழர் தாயகமும்2பாகிஸ்தானும் சீனாவைப் போலவே வட பகுதியில் ஆக்கிரமிப்பு ரீதியில் அடியெடுத்து வைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. இலங்கையின் பேரின ஆட்சியாளர்கள் பேரின ரீதியில் தமிழ் மக்களின் அரசியல் கலாசாரத் தலைமைப் பிரதேசமாகிய வடமாகாணத்தில் ஆக்கிரமிக்கின்ற அதே வேளை, சீன மற்றும் பாகிஸ்தானியர்களையும் இந்தப் பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்கு அனுமதியளித்திருப்பது தமிழ்த் தேசியத்திற்கும், தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டிற்கும் விழுந்துள்ள மிகப் பலமானதோர் அடி யென்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

தமிழ் மக்களின் தாயகப் பிரதேசத்தின் மீதான இந்த ஆக்கிரமிப்பையும், அதன் ஊடான தமிழ்த் தேசியத்தின் மீதான அப்பட்டமான அச்சுறுத்தலையும் தமிழ் மக்களும், தமிழ்த் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகக் கூறுகின்ற அவர்களின் அரசியல் தலைவர்களும் எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றார்கள் என்பது சிக்கல் மிகுந்ததோர் கேள்வியாக தமிழ் அரசியலில் எழுந்து நிற்கின்றது.

இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி கிடைக்காத இனப்படுகொலை

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 சிதைக்கப்படும் தமிழர் தாயகமும் அச்சுறுத்தப்படும் தமிழ்த்தேசியமும்