உடனடியாக செயல்பட முடியாவிட்டால் ஐ.நா.பாதுகாப்பு சபையை கலைத்து விடுங்கள்-உக்ரைன் அதிபர்

ஐ.நா.பாதுகாப்பு சபையை கலைத்து விடுங்கள்

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடரும் நிலையில் ஐ.நா. பாதுகாபு சபை கூட்டத்தில் காணொலி வாயிலாகப் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி, உடனடியாக செயல்பட முடியாவிட்டால் ஐ.நா.பாதுகாப்பு சபையை கலைத்து விடுங்கள் என்று   கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம்கடந்த 42 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற நகரங்கள் உருக்குலைந்துள்ளன.

இந்நிலையில் ஐ.நா. சபையின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ், “உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலால் உலகம் முழுவதும் 74 நாடுகளில் 1.2 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு, எரிபொருள், உர விலை உயர்வு ஆகியனவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போர் இப்போதே நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.

அதைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் காணொலி வாயிலாக  உக்ரைன் அதிபர்   ஜெலன்ஸ்கி  உரையாற்றிய போது,

“உக்ரைன் மக்கள் குடியிருப்புகளில், வீடுகளில் கொல்லப்பட்டுள்ளனர். சாலைகளில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய வீரர்கள் பொழுதுபோக்குக்காக எங்கள் மக்களைக் கொன்றுள்ளனர். கழுத்தறுத்து, நெற்றியில் சுட்டு கொலை செய்துள்ளனர். சிலரின் அங்கங்களை துண்டித்துள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும். இத்தனையையும் செய்வது ஐ.நா. பாதுகாப்பு சபையில் உள்ள உறுப்பு நாடு. அந்த நாடு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தனை தீர்மானங்களையும் தோற்கடிக்கிறது. இந்நிலையில், ஐ.நா.வுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்களால் உடனடியாக செயல்பட முடியாவிட்டால் ஐ.நா. பாதுகாப்பு  சபையை கலைத்துவிடுங்கள்”  என்று வலியுறுத்தியுள்ளார்.

Tamil News