வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை- மட்டு மாநகர சபை எச்சரிக்கை

வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளவர்

மாநகரசபையின் செயற்பாடு அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதன் காரணமாக எவரும் வேலை நிறுத்தம் செய்ய முடியாது என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை யெடுக்கப்படும் என்பதுடன் மாநகரசபையின் செயற்பாடுகளை சுமுகமான நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர் ஒருவர் மாநகர முதல்வரினால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறி இன்று காலை முதல் மட்டக்களப்பு மாநகரசபையின் வாயில் கதவினை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டதுடன் மாநகரசபையின் உத்தியோகத்தர்களும் உள்செல்ல அனுமதிக்கப் படாத காரணத்தினால் மாநகரசபை முற்றாக செயலிழந்தது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனிடம் கேட்டபோது,

“ஏற்கனவே மாநகரசபையின் ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது பிழையான முறையில் வழங்கப்பட்ட நியமன கடிதத்தினை வாபஸ்பெற்றுக்கொண்டு,ஊழியர்கள் அனைவரையும் கடமைக்கு அழைக்குமாறு மாநகரசபை ஆணையாளருக்கு உள்ளுராட்சி ஆணையாளரால் அறிவுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாநகரசபை ஆணையாளரும் வேலை நிறுத்ததில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்பதாக எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதி ஆணைளாரை உடனடியாக கதவினை திறந்து அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும்,பகிஸ்கரிப்பில் உள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மாநகரசபையில் இயல்பு நிலையினை ஏற்படுத்தவேண்டிய தேவையுள்ளது. உள்ளுராட்சி அதிகாரசபைகளின் செயற்பாடுகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒருவரும் வேலை நிறுத்தம் செய்யமுடியாது” என்றார்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை- மட்டு மாநகர சபை எச்சரிக்கை