Home ஆய்வுகள் இறால் பண்ணை என்ற பெயரில் பறிபோகும் வாகரை மண் – புலம்பெயர் மக்கள் தடுக்க முன்வருவார்களா?...

இறால் பண்ணை என்ற பெயரில் பறிபோகும் வாகரை மண் – புலம்பெயர் மக்கள் தடுக்க முன்வருவார்களா? | மட்டு.நகரான்

பறிபோகும் வாகரை மண்

மட்டு.நகரான்

இறால் பண்ணை: பறிபோகும் வாகரை மண்

வடகிழக்கு தமிழர்களின் தாயகப் பகுதியானது, இயற்கையாகப் பாதுகாக்கப்பட்டு, முறையான பொருளாதாரக் கொள்கையுடன் பயணிக்கும் போது, பாரியளவில் அபிவிருத்தியடைந்து, வறுமைகள் நீங்கி, முழுமையாக செழிப்பான மாவட்டமாக வளர்ச்சியடைவதற்கான முன்னெடுப்புகள் எதுவும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.

அதிலும் கிழக்கு மாகாணம் என்பது அனைத்து வளங்களும் கொண்ட பகுதியாகக் காணப்படுவதன் காரணமாக அந்த வளங்களைத் தமிழர்கள் முறையாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதுடன், எந்தவித திட்டங்களும் இன்றி செயலற்று காணப்படுகின்ற நிலையில், அவற்றினை அபகரித்து, தமது பொக்கட்டுகளை நிரப்புவதற்கான பாரியளவிலான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் நாங்கள் கிழக்கின் வளங்களைப் பயன்படுத்தி தொழில் துறைகளை ஆரம்பிப்பதற்கு, புலம்பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையினை இந்த இதழ் ஊடாக முன்வைத்து வந்தோம். இந்த வளங்கள் எதிர்காலத்தில் சூறையாடப்படக்கூடிய சூழ்நிலையுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தோம். ஆனால் அவை தொடர்பில் கரிசனைகள் செலுத்தப்பட்டதா என்றால், இல்லையென்றே கூறவேண்டிய நிலை காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாகப் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களினால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவே கிழக்கு வாழ் தமிழ் மக்கள் உணரும் நிலையுருவாகி வருகின்றது. கடந்த கால யுத்தத்தில் கிழக்கு மாகாணத் தமிழர்கள் இழந்த இழப்புகள் என்பது கணக்கிட முடியாதது. அந்த இழப்புகள் ஈடுசெய்ய முடியாதது. எனினும் யுத்தம் காரணமாக அதளபாதாளத்திற்குள் சென்றிருக்கும் அந்த மக்களைக் கைகொடுத்துத் தூக்கி விடுவதற்கு யாரும் இல்லையென்ற நினைப்பு அந்த மக்களின் மனங்களில் நீண்ட காலமாகப் புகைநிலையிலேயே உள்ளது.

கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசமானது 95வீதத்திற்கும் அதிகமாகத் தமிழர்கள் வாழும் பகுதியாகும். முற்றுமுழுதாக இயற்கை வளங்கள் கொண்ட பகுதியாகும். கடல், ஆறு, காடுகள், சதுப்பு நிலங்கள் என பல்வேறு வகையான இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகும். இதன் காரணமாகவே கடந்த காலத்தில் குறித்த பகுதி தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக காணப்பட்ட காலத்தில் இப்பகுதிக்கான தனியான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், கடந்த காலத்தில் தமிழர்களின் நிலங்களை சிங்கள அரசுகள் குறிவைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்ததும் இந்த இயற்கை வளங்களாகவே இருந்தன. கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் ஆட்சிக்காலத்தில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கே முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே கிழக்கில் ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள், தங்களது இருப்பிடங்களை காடுகளில் அமைத்து ஆட்சியதிகாரத்தில் இருந்துள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. இதனைப் போன்றே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்திலும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது தமிழர்களின் முக்கியத்தும் என்ற அடிப்படையில் இயற்கை பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்த இரு சந்தர்ப்பங்களும் இல்லாத காலப்பகுதியில்தான் கிழக்கில் சிங்களப் பேரினவாதிகள் தமது அத்துமீறிய செயற்பாடுகளைக் கொண்டு இயற்கை வளங்கள் கொண்ட பகுதிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். கிழக்கில் பல வளமிக்க பகுதிகள் கடந்த 50வருட காலப் பகுதியில் பெருமளவில் அபகரிக்கப்பட்டுள்ளன. யுத்த காலத்தில் மட்டுமே தமிழர்களின் இயற்கைப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டன.

ஆனால் யுத்தம் மௌனிக்கப்பட்டு 12வருட காலப்பகுதியில் பல பகுதிகள் அபகரிக்கப்பட்டுள்ளன, அபகரிக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் இயற்கை வளங்கள் கொண்ட பகுதிகளை முதலீடுகள் என்ற போர்வையில் அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் பகுதிகளில் காணப்படும் இயற்கை வளங்கள் கொண்ட பகுதிகள் அபகரிக்கப்பட்டு, அங்கு இயற்கை சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் மிக முக்கியத்துவமிக்க பகுதியாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் அடையாளப்படுத்தப்பட்ட வாகரை பிரதேசமானது, யுத்தம் மௌனிக்கப்பட்ட காலம் தொடக்கம் பல்வேறு வகையான அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகின்றது. மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் இப்பகுதியில் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அனைத்து வளங்களும் உள்ள பகுதியாக வாகரைப் பிரதேச செயலகர் பிரிவு காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் வறிய பிரதேச செயலகர் பிரிவாக தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்ட பகுதியாகவே இது காணப்படுகின்றது. இதன் காரணமாக தொழில்துறைக்கான முதலீடு என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலையேற்பட்டு வருகின்றது.

கடந்த நல்லாட்சிக் காலத்தில் சிங்கள மக்கள் வாகரை பகுதியிலிருந்ததாக கூறி, சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்களை குடியேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் இந்த ஆட்சியாளர்கள் பொறுப்பேற்ற காலம் தொடக்கம் அந்த செயற்பாடுகள் மீண்டும் முன்னெடுக்கப் பட்டுள்ளன. அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்புகள் காரணமாக அவ்வாறான நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படுகின்ற போதிலும், அவை நிறுத்தப்படவில்லை.

இவ்வாறான நிலையிலேயே வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரியளவிலான இயற்கை வளங்கள் கொண்ட பகுதிகளை இறால் பண்ணை அமைத்தல் என்னும் திட்டம் என்ற அடிப்படையில் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

வாகரைப் பிரதேசத்தின் திருமலை வீதி பக்கமாகவுள்ள புச்சாங்கேணி தொடக்கம் கொழும்பு பிரதான வீதியில் உள்ள காரமுனை வரையிலான சுமார் 3800 ஏக்கர் காணிகளை இவ்வாறு இறால் பண்ணை அமைப்பதற்காக பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் ஏற்பாட்டில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த செயற்பாடானது, ஒட்டுமொத்த வாகரை மண்ணையும் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடுகள் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் குறித்த பகுதி இருந்தபோது அப்பகுதியில் இறால் பண்ணை அமைக்க முடியும் என்றால், அமைத்திருப்பார்கள் எனவும் ஆனால் அவர்கள் குறித்த பகுதியை பாதுகாப்பதிலேயே அக்கறை காட்டியதாகவும் இன்று அப்பகுதியில் இறால் பண்ணை அமைக்கலாம் என்று மக்கள் மத்தியில் ஆசை வார்த்தை காட்டப்பட்டு வேறு பகுதிகளை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களுக்கு குறித்த பகுதியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பனிச்சங்கேணி ஆற்றினை அண்டியதாக இருக்கும் குறித்த பகுதியானது, இயற்கை வனப்பு கொண்ட பகுதி மட்டுமல்லாமல், வெள்ள காலத்தில் வெள்ள நீரை வெளியேற்றும் சதுப்பு நிலமாகவும் காணப்படுவதுடன், அதிகளவான வெளிநாட்டு பறவைகள் கூடும் பறவைகள் சரணாலயமாகவும் காணப்படுகின்றது.

அத்துடன் குறித்த பகுதியில் உள்ள காடுகளில் வரலாற்று ரீதியான அடையாளங்கள் பல காணப்படுவதுடன், பண்டைய கால வழிபாட்டு இடங்களும் காணப்படுவதாகவும், இந்த இறால் பண்ணைகள் அமைக்கப்படுமானால், அந்த வரலாற்று ரீதியான அடையாளங்கள் அழிக்கப்படும் நிலையும் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் சுமார் மூன்று மேய்ச்சல் தரை பகுதிகள் காணப்படுவதுடன், அப்பகுதியில் சுமார் 30,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் மேய்க்கப்படுவதாகவும் இறால் பண்ணையினால் அந்த நடவடிக்கைகள் முற்றாக அழிக்கப்படும் எனவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த பகுதியானது, இறால் பண்ணைக்கு எந்தவித பொருத்தமும் இல்லாத பகுதியென்பதுடன், அந்த பகுதியில் இறால் பண்ணை அமைக்கப்படுமானால், அது வாகரை பிரதேசத்தின் அழிவுக்கே காரணமாக அமையும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், இந்த செயற்பாட்டினை தடுக்கும் வகையில் வடகிழக்கு முன்னேற்றக்கழகம் என்னும் அமைப்பு தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

தமிழ் தேசியம் பேசும் எந்த அரசியல்வாதியும் இது தொடர்பில் மௌனமாக இருக்கும் நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு அதற்கு எதிராக போராடும் நிலை தற்போது ஏற்பட்டு வருகின்றது. இதற்கு ஆதரவாக தற்போது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கமும் தனது ஆதரவுக் கரத்தினை நீட்டியுள்ளது. எதிர்காலத்தில் இந்த திட்டங்கள் கைவிடப்படாவிட்டால் மக்கள் சக்தி ஒன்று திரட்டப்பட்டு மாபெரும் போராட்டமாக முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையிலேயே கிழக்கு மண்ணின் நிலங்களைப் பாதுகாக்க முன்வருவமாறு புலம்பெயர் தமிழர்களிடம் கிழக்கு மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இங்கு காணப்படும் வளங்களைக் கொண்டு உற்பத்திகளை மேற்கொள்ளும் வகையிலான முதலீடுகளை செய்வதற்கு புலம்பெயர் மக்கள் முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும்போதே வாகரை போன்று கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளை நாங்கள் பாதுகாக்க முடியும்.

Exit mobile version