எமது வளங்களால் வரும் வருமானத்தில் எம் தேசத்தை அபிவிருத்தி செய்யுங்கள்; கஜேந்திரன்

எமது வளங்களால் எம் தேசத்தை அபிவிருத்தி செய்யுங்கள்

மன்னாரில் எரிசக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எமது வளங்களால் எம் தேசத்தை அபிவிருத்தி செய்யுங்கள்: “மன்னாரில் எரிசக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நாட்டின் கடனை அடைக்க முடியும் என்ற கருத்து வலுச் சக்தி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. அது நல்ல விடயமே. எங்களின் தேசத்தில் கண்டுபிடிக்கப்படும் வளங்கள் மூலம் கிடைக்கும் வருமானம், எங்களின் தேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

எமது மக்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலைமை தொடரக்கூடாது. இல்மனைட் அகழப்படுகின்றது. அதனால் கிடைக்கும் வருமானம் முழுவதும் அந்தப் பிரதேசங்களுக்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றது” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மின்சக்தி மற்றும் எரிச்சக்தி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 27 ஆம் திகதி முல்லைத்தீவில் இருந்து புதுக்குடியிருப்புக்கு செல்லும் வீதியில் முள்ளிவாய்க்கால் பெயர்பலகையை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் ஒருவர் மீது இலங்கை இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்டள்ளது. இந்தத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தொடர்பில் கண்துடைப்பிற்றாக மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் தமிழர்கள் மீது கடந்த காலங்களில் இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய போர்க் குற்றங்கள் மற்றும் இனவழிப்புக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறல் இல்லாத காரணத்தினாலேயே இந்த சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்துகொண்டிருக்கின்றன. எங்களைப் பொறுத்தவரையில் இந்தக் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணைகளை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். அதேபோன்று நடந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

இதேவேளை 27 ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வுகளை செய்ய முற்பட்ட போது, சப்பாத்து கால்களுடன் இராணுவத்தினர் துயிலும் இல்லங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளதுடன், அங்கு முகாம்களையும் அமைத்துள்ளனர். அங்கிருந்த இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

இதேவேளை மின்சார சபையினால் வடக்குக் கிழக்கில் வீதி விளக்குகளை பொருத்தும் போது, ஒரு விளக்கொன்றுக்கு 3100 ரூபா தொடக்கம் 3400 வரையிலும் அறவிடப்படுகின்றது. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வந்திருந்தபோது இதுபற்றி கூறிய போது, தமது பிரதேசங்களில் இவ்வாறு அறவிடப்படுவதில்லை என்று கூறியுள்ளார். பழுதடைந்த மின்குமிழை மாற்றும் போதும் அந்தத் தொகை அறவிடப்படுகின்றது. அதனால் பிரதேச சபைகள் திருத்தும் பணிகளுக்காக மின்சார சபையின் அனுமதியுடன் தமது ஊழியர்களை சட்டத்திற்கு மாறாக ஈடுபடுத்தப்படுகின்றன. இதனால் பிரதேச சபைகள் ஆபத்தில் சிக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன.
அத்துடன் கைத்தொழில் முயற்சியாளர்கள் மின் இணைப்புக்காக விண்ணப்பிக்கின்ற போதும். 6 மாதங்கள் கடந்தும் அது வழங்கப்படாது இருக்கின்றன. இதில் அரசியல் காரணங்கள் இருக்கின்றனவா? அழுத்தங்கள் இருக்கின்றனவா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. தயவு செய்து இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு கேட்கின்றேன் என்றார்.

இதன்போது சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறுகையில்;

நான் நீங்கள் கூறிய விடயம் தொடர்பில் தற்போது ஆராய்ந்தேன். இனம், மதம், பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு மின்சார சபையினர் செயற்படுவதில்லை. மின்சார சபை ஒரே சட்டத்தை ஒரே முறையில் முன்னெடுக்கும் நிறுவனமாகும். இதனால் சம்பவங்களை கூறினால் தேடிப் பார்க்கலாம் என்றார்.

இதனை தொடர்ந்து உரையாற்றிய கஜேந்திரன் எம்.பி குறிப்பிடுகையில்,

மன்னாரில் எரிசக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நாட்டின் கடனை அடைக்க முடியும் என்ற கருத்து வலுச் சக்தி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. அது நல்ல விடயமே. எங்களின் தேசத்தில் கண்டுபிடிக்கப்படும் வளங்கள் மூலம் கிடைக்கும் வருமானம், எங்களின் தேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டும். எமது மக்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலைமை தொடரக்கூடாது. இல்மனைட் அகழப்படுகின்றது. அதனால் கிடைக்கும் வருமானம் முழுவதும் அந்தப் பிரதேசங்களுக்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிலைமை தேசங்களுக்கு இடையே இடைவெளியையே அதிகரிக்கும்.
காற்றாலை மின் உற்பத்தியிலும் வேலைவாய்ப்புகள் அந்தப் பிரதேசங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறுகையில்,

இந்த நாட்டில் உள்ள வளங்கள் நாட்டு மக்களுக்கே உரியாது. பிரதேசங்கள் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் இனம், பிரதேச அடிப்படையில் ஒதுக்க முடியாது. ஆனால் அந்தப் பிரதேசத்திற்கு விசேட அந்தஸ்து வழங்குவது அனைவரும் கலந்துரையாடி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் பிரதேச அடிப்படையில் அவற்றை ஒதுக்க முடியாது இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad எமது வளங்களால் வரும் வருமானத்தில் எம் தேசத்தை அபிவிருத்தி செய்யுங்கள்; கஜேந்திரன்