Home செய்திகள் வவுனியா புகையிரத நிலைய வீதியில் பழமையான நிழல் தரு மரங்கள் அழிப்பு

வவுனியா புகையிரத நிலைய வீதியில் பழமையான நிழல் தரு மரங்கள் அழிப்பு

பழமையான நிழல் தரு மரங்கள் அழிப்பு

பழமையான நிழல் தரு மரங்கள் அழிப்பு: வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்பட்ட பழமையான நிழல் தரு மரங்கள் பல அழிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை சுதந்திர தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் போது தற்போது மரநடுகை அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பதிலீடான எந்தவொரு மர நடுகையுமின்றி வவுனியா புகையிரத நிலைய வீதியில் இலங்கை வங்கி முன்பாக காணப்பட்ட பழமையான மரங்கள் பல கடந்த சில நாட்களாக வெட்டப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன.

பயணிகளுக்கு பயன்பட்ட வீதியோர நிழல் மரங்களே இவ்வாறு வெட்டிச் செல்லப்படுகின்றன. வவுனியாவிற்கு அழகு சேர்ப்பதாகவும், அடையாளங்களாகவும் காணப்பட்ட பழமையான மரங்களே இவை.

குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயம் ஒன்றின் தேர் பாதையில் காணப்பட்ட மரம் ஒன்று வெட்டப்பட்டபோது வவுனியா பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் ஆலய நிர்வாகத்தினர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப் பட்டிருந்தனர். ஆனால் இங்கு வீதியோரமாக காணப்படும் பாரிய மரங்கள் வெட்டப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றது. இது தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா நகரசபையினரை தொடர்பு கொண்டு கேட்ட போது, தம்மால் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை. குறித்த பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது எனத் தெரிவித்தனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, பதில் வழங்கக் கூடிய பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் எவரும் அலுவலகத்தில் இல்லை எனத் தெரிவித்தனர்.

வவுனியா பிரதேச செயலாளர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version