ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய

திருகோணமலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட தி/முத்து நகர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி இன்று (31) காலை பெற்றார்கள், மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். 

மாற்றாதே மாற்றாதே ஆசிரியரை மாற்றாதே, வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய், போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.

குறித்த பாடசாலையில் தரம் 09 வரை காணப்படுகின்றது. தற்போது ஆறு ஆசிரியர்களே கற்பித்து வருகிறார்கள் இந்த பாடசாலை பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இருக்கின்ற ஆசிரியர்களை இடமாற்றம் செய்து பதில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2019ல் இரு ஆசிரியர்கள், 2020ல் இரு ஆசிரியர்கள், 2021ல் மூன்று ஆசிரியர்கள் இடமாற்றப்பட்ட போதிலும் பதில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமையினாலும் அதிபரை இடமாற்றம் செய்து தற்போது பதில் அதிபர் ஆறு ஆசிரியர்களில் ஒருவர் கடமையாற்றுவதனாலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவனயீர்ப்பில் ஈடுபட்ட பெற்றார்கள் தெரிவிக்கின்றனர்.

IMG 20220331 WA0002 ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

தரம் 2,3 க்கான நிரந்தர ஆசிரியர்கள் பல மாதங்கள் இல்லாத நிலையிலும் கல்வி நடவடிக்கைகள் பின்னோக்கி செல்வதாகவும் இது தொடர்பில் உரிய கல்வி அதிகாரிகளுக்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மூலமாக தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பெற்றார்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

உரிய பாடசாலை தரம் 9 வரை தற்போது உள்ளது இதனை தரம் 11 வரையாவது தரமுயர்த்தியும் தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர். பின்தங்கிய இப்பாடசாலையில் தரம் ஒன்பது வரை கற்பித்து உயர் கல்விக்காக தூர இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்களுக்கு இதன் ஊடாக பாதுகாப்பின்மை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.