காலி முகத்திடல் 16 ஆவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்-இலவச சட்ட அலுவலகம் திறப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலும், கொழும்பு காலி முகத்திடலிலும் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

இந்நிலையில்,   காலி முகத்திடல்  இன்றுடன் 16 ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு பல தரப்பினராலும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் குறித்த பகுதியில் இலவச சட்ட உதவி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதேனும் சட்ட ரீதியிலான சிக்கல்கள் ஏற்பட்டாலோ அல்லது ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கப்பட்டாலோ இந்த அலுவலகத்தின் ஊடாக இலவச சட்ட உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு உரத்தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்ற சுற்று வட்டப்பகுதியில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு , காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டு அதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News