Delta plus வைரஸ் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு (Delta plus) டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் 16 பேர் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படையாக குறையத் தொடங்கியுள்ள நிலையில், மூன்றாவது அலை விரைவில் தாக்கக்கூடும் என பலரும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்டா பிளஸ் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது.  இந்த வைரசுக்கு ‘பி.1.617.2’ டெல்டா என்று உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.

டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய மத்திய அரசு, குறித்த வைரஸ், கவலையளிக்கக் கூடியதாக உள்ளது என அறிவித்துள்ளது. மேலும், மேற்கூறிய மூன்று மாநிலங்களிலும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  எந்தெந்த மாவட்டங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதோ அங்கு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வகை வைரஸ், தடுப்பூசியின் வீரியத்தை குறைக்கக் கூடியது என்று அண்மையில் மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். டெல்டா வகை வைரஸ்க்கு எதிராக, கொரோனா தடுப்பூசிகள் பெரியளவில் பலனளிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.