பொருளாதார நெருக்கடியில் பாதுகாப்புச் செலவினம் எழுப்பியுள்ள கேள்வி – பி.மாணிக்கவாசகம்

இலங்கையில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி பல்வேறு விடயங்களிலும் பல்வேறு துறைகளிலும் பல வழிகளில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. பல்வேறு சிந்தனைகளையும் ஊக்குவித்து வருகின்றன. ஒரு வகையில் பழைய மரபுவழி அரசியல் சிந்தனையையும்கூட அது ஆட்டி அசைத்திருப்பதைக் காண முடிகின்றது.

உதாரணமாக அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து பொருளாதார நெருக்கடியின் விளைவாக எழுந்த வாழ்க்கைச் சுமைகளைத் தாங்க முடியாத மக்கள் தன்னெழுச்சி கொண்டு போராட்டத்தில் குதித்ததையடுத்து, காலமுகத்திடலில் உருவாகிய போராட்ட களத்தில் தமிழ் மக்களின் அவல அரசியல் நிலைமை எதிரொலித்ததைக் காண முடிந்தது. அங்கு சிங்கள மக்களும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்ததையும் உலகமே கண்டு வியந்தது.

சிங்கள பௌத்த பேரின தேசியத்தில் ஊறிக்கிடந்த சிங்கள மக்கள் பன்மைத் தன்மை கொண்ட அரசியல் கட்டமைப்பு குறித்து காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் கோடி காட்டியிருந்ததையும் மறந்துவிட முடியாது. சிங்களவர்களுக்கு – குறிப்பாக பௌத்த சிங்கள மக்களுக்கு மட்டுமே இந்த நாடு சொந்தம் என்ற பேரினவாத அரசியல் வெறித்தனப் போக்கில் மாற்றுச் சிந்தனையை இது வெளிப்படுத்தியிருந்தது. ஆனாலும் பௌத்த சிங்களப் பேரின அரசியல் வெறித்தனமும் பௌத்த சிங்கள மதவெறியும் முற்றாக மறைந்துவிட்டதாகவோ அல்லது அந்த அரசியல் சிந்தனை முழுமையாகக் கைவிட்டுப் போனதாகவோ கருதிவிட முடியாது.

சிங்கள மக்களை ஏறக்குறைய முழு அளவில் ஆக்கிரமித்துள்ள சிங்களப் பேரினவாத அரசியல் உளவியல் நிலைமை இன்னும் முழுமையாக அற்றுப் போகவில்லை என்பதை கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியம். ஆயினும் இனவாத மதவாத வெறித்தனம் கொண்ட அந்த அரசியல் மனப்பாங்கு குறிப்பிடத்தக்க அளவில் ஆட்டம் காணத் தொடங்கியிருக்கின்றது. இதற்கு முழு முதற் காரணம் நாட்டின் பொருளாதார நெருக்கடி என்பதை மறந்துவிடக் கூடாது. சில வேளைகளில் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டால் பழைய குருடி கதவைத் திறடி என்பதற்கமைய சிங்கள பௌத்த பேரினவாதம் புத்துணச்சி பெற்று சீறிப்பாய்ந்தாலும் பாயக்கூடும். எதனையும் நிச்சயமாக முன்கூட்டியே கூறிவிட முடியாது.

இத்தகைய பின்புலத்திலேயே பொருளாதார நெருக்கடிச் சூழலில் நாட்டின் பாதுகாப்புச் செலவினத்துக்கென அதிக அளவில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு வருவதைக்,குறித்து சிங்கள ,புத்திஜீவிகள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. பொருளாதார நெருக்கடிக்கும் டொலர்n பற்றாக்குறை மற்றும் திறைசேரியின் வெறுமை நிலைமைக்கும் போர்க்கால கடன்களும் போருக்குப் பிந்திய காலத்துப் புனரமைப்புப் பணிகளுக்கான கடன்களும் முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.

அதேவேளை, ஜனாதிபதி கோத்தாபாய அரசாங்கத்தின் பொறுப்பற்ற கொள்கைப் போக்கும் ஊழல் மோசடிகள் நிறைந்த ஆட்சிப் போக்கும் முக்கிய காரணம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. ஆனால் இப்போது இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு முன்னுரிமை நிலையில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் ஒரு காரணம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

யுத்த காலத்தில் இரு நாடுகளுக்கிடையிலான ஒரு ஆயுத மோதல்களின்போது நிலவுவதைப் போன்றதொரு நெருக்கடி நிலைமையை இலங்கை அரசு எதிர்கொண்டிருந்தது. விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாக மிகப் பலம் வாய்ந்தவர்களாக பல்வேறு சமயங்களில்; யுத்தமோதல்களின் செயல் நிலைமையைத் தீர்மானிக்கின்ற வலிமையான சக்தியாகவும் தங்களை நிரூபித்திருந்தார்கள். அரச படைகள் தாக்குதல்களுக்காக இராணுவ நகர்வுகளை மேற்கொண்ட போதிலும் குறுகிய நேரத்திலேயே அவர்கள் போர்முனைகளில் தொடர்ந்து செயற்பட முடியாமல் தமது நிலைகளுக்குத் திரும்ப வேண்டிய சூழலை அவர்கள் ஏற்படுத்தி இருந்தார்கள். இதனால் அரசாங்கம் விடுதலைப்புலிகளைப் போர்முனைகளில் தங்களுக்கு இசைவான முறையில் கையாள முடியாமல் திண்டாட நேர்ந்திருந்தது.

இத்தகைய கடினமான ஒரு நிலைமையில்தான் இராணுவ நடவடிக்கைகளை முழு வீச்சில் அதீத சக்தியுடன் முன்னெடுப்பதற்காக அயல் நாடுகள் பலவற்றிடமும் அரசு கண்மண் தெரியாத வகையில் கடன்பட்டிருந்தது. இந்தக் கடன்கள் அழிவுக்காகப் பயன்படுத்தப்பட்டதே தவிர ஆக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. இதனால் அந்தக் கடன்களை மீள செலுத்துவதற்கு நீண்ட கால அவகாசம் அரசுக்கு தேவைப்பட்டது, எனினும் யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் கண்டு யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் அரவணைத்து அழிந்துபோன பொருளாதாரத்தையும் இன நல்லுறவு, இன ஐக்கியத்தையும் மீளக்கட்டியெழுப்பி நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னோக்கி நகர்த்திச்  செல்லப் பேரினவாத அரசியல்வாதிகள் தவறிவிட்டார்கள்.

நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும், இராணுவ ரீதியாக மௌனிக்கப்பட்ட விடுதுலைப்புலிகள் மீண்டும் உயிர்பெற்று விடுவார்கள் என்ற அச்சத்தில் அத்தகைய ஒரு நிலைமை உருவாகிவிடக்கூடாது என்ற சிந்தனையில் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களை இராணுவ மயமான ஒரு சமூக பொருளாதார அரசியல் சூழமைவில் இறுக்கி வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனைப் போக்கிலேயே ஆட்சியாளர்கள் செயற்பட்டிருந்தார்கள்.

கடனில் மூழ்கிக்கொண்டிருந்த நாட்டை மீட்டெடுத்து தேசிய அளவில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற மிக முக்கிய தேவையை அவர்கள் கருத்திற் கொள்ளவில்லை. அத்துடன் ஊழல் மோசடிகள் நிறைந்த, தண்டனை விலக்கீட்டுக் கலாசாரத்தின் அடிப்படையில் இராணுவ மயச் செயற்பாடுகளையே முன்னெடுத்து வந்தார்கள். குறிப்பாக ராஜபக்சக்களின் ஆட்சிக்காலம் இத்தகைய போக்கிலேயே செயற்பட்டிருந்தது.

ஆயினும் 2015 ஆம் ஆண்டு ராஜபக்சக்களை நிராகரித்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆட்சி அதிகார அந்தஸ்தை வழங்கியபோது உருவாகிய நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்;திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்கூட ராஜபக்சக்களின் ஊழல் ஆட்சிப் போக்கில் இருந்து பெரிய அளவில் மாறுபட்டிருக்கவில்லை. அதன் விளைவாகவே நாடு மீள முடியாத வகையிலான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்றது.

யுத்தகாலத்தில் தேசிய பாதுகாப்புக்கான பாதுகாப்புச் செலவினங்களுக்கான அதிக அளவில் நிதியொதுக்கீடு செய்ததை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. யுத்தத்தைத் தவிர்த்திருக்காலம். யுத்தம் மூண்டிருந்தாலும்கூட அதனைத் தொடர்ந்து நடத்தாமல் அரசியல் ரீதியாக ராஜதந்திர வழிகளில் நிலைமையைக் கையாண்டு யுத்தத்தை இடைநிறுத்தி இருக்கலாம் என்பதெல்லாம் ஒரு ,புறமிருக்க மூண்டுவிட்ட யுத்தத்தைக் கொண்டு செல்வதற்கு முடிவு கட்டியபின்னர் யுத்தச் செலவினம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது.

யுத்த மோதல்கள் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனால் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த ஆண்டு வரையிலும் பாதுகாப்புச் செலவினங்களுக்கே நாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் அரச வரவு செலவுத் திட்டங்களில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. உதாரணமாக 2017 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் கடந்த ந்pலையில் அரச செலவினங்களில் ஒற்றைத் துறைக்காக 11 வீதம் செலவிடப்பட்டிருக்கின்றது. அந்த ஆண்டில் மட்டுமல்ல. தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும் இதே நிலைமையே தொடர்ந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. யுத்தத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாட்டில் தேசிய பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அரசு பிரகடனப்படுத்தி;யது. யுத்தம் முடிவுற்ற பின்னரான ஆண்டுகளிலும் பயங்கரவாதச் செயல்கள் எது,வும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் அரசாங்கம் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பாதுகாப்புக்காக அதிக அளவு நிதி ஏன் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது, ஏன் அதிக அளவில் நிதி செலவிடப்படுகின்றது என்பது குறித்து அரசாங்கமும்சரி பேரின அரசியல்வாதிகளும்சரி கேள்வி எழுப்பவே இல்ல. ஆய்வு செய்யவும் இல்லை. கிணற்றில் போட்ட கல்லாக பாதுகாப்புத் துறைக்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதிகளும் செலவு செய்யப்பட்டு வந்துள்ளன.

ஆனால் பொருளாதார நெருக்கடியினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள இந்த நிலையில் அதுபற்றிய கேள்விகள் தென்பகுதியில் எழுப்பப்பட்டிருக்கின்றன. முன்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்த்தரப்பைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே நாடாளுமன்றத்திலும் வெளியிலும் இதுகுறித்து கேள்விகளை எழுப்பியிருந்தனர் விமர்சனங்களை முன்னைவத்திருந்தனர்.

பெருமளவில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிகள், பசளை உற்பத்தி உட்பட பல்வேறு அரச அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஆயிரக்கணக்கான படைத்தரப்பினர் பயனப்டுத்தப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அத்துடன் படையினர் மரபு வழியாக பயிற்றப்படாத துறைகள் சார்ந்த பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது முறையான இராணுவப் பயிற்சிகளின் மூலம் நாட்டின் வளமாக உருவாக்கப்பட்டுள்ள படைத்தரப்பின் மனிதவலுவும் அந்தச் சொத்துமான அரச பலம் அநியாயமாக வீணாக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

மொத்தத்தில் பாதுகாப்புத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்வது மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த இராணுவ கட்டமைப்பின் பயன்பாடு குறித்து மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனையும் உருவாகியிருக்கின்றது.

இத்தகைய சிந்தனை எழுச்சியானது நாட்டின் இனவாத மதவாத அரசியல் போக்கிற்கு சாவு மணி அடிப்பதாகப் பரிமாணம் பெற வேண்டும். அதன் ஊடாக இந்த நாடு பன்மைத்துவ சமூக, பொருளாதார, அரசியல் நிலைமையில் புத்தெழுச்சி பெற வேண்டும். அதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் பொருளாதாரச் சிக்கல்களும் விரிவான வழிகளைத் திறந்துவிட வேண்டும்.