Tamil News
Home செய்திகள் அதிகாரப் பரவலாக்கல்: பாராளுமன்ற கருத்தாடலும் நிலைமைகளும் -பி.மாணிக்கவாசகம்  

அதிகாரப் பரவலாக்கல்: பாராளுமன்ற கருத்தாடலும் நிலைமைகளும் -பி.மாணிக்கவாசகம்  

சும்மா சொல்லக் கூடாது. ரணில் விக்கிரமசிங்க தனது  சுயரூபத்தை பட்டவர்த்தனமாக இப்போது வெளிப்படுத்தி இருக்கின்றார். இதற்கு அவரது முன்னாள் அரசியல் அதிகார பங்காளியாகிய மைத்திரிபால சிறிசேன வழிதிறந்து விட்டிருக்கின்றார்.

அதிகாரப் பகிர்வின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மாவட்ட அபிவிருத்தி சபைகளே பொருத்தமானவை. அவற்றின் ஊடாக அதிகாரப் பகிர்வு செய்யலாம். பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணலாம் என்பது அவருடைய நிலைப்பாடாக வெளிப்பட்டிருந்தது.

மாவட்ட அபிவிருத்திச் சபைகள் இலங்கையைப் பொறுத்தமட்டில் நாற்பது வருடங்களுக்கு முன்பே தோல்வி அடைந்த ஓர் அரசியல் தீர்வு முயற்சியாகும். அதற்குப் பின்னர் தீவிரம் பெற்றிருந்த தனி நாட்டுக்கான ஆ,யுதப் போராட்டம் ஏற்படுத்திய அழுத்தம் காரணமாக நோர்வேயின் மத்தியஸ்தத்துடனான பேச்சுக்களில் சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வுக்கு உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. ஆயினும் துரதிஸ்டவசமாக ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய இறைமை வழியிலான அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தியல் மேலோங்கியுள்ள நிலையில் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் குறித்த கருத்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ் மக்களால் புறந்தள்ளப்பட்டு காலாவதியாகிப்போன மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் மூலம் அதிகாரப் பகிர்வு செய்ய முடியும் என்று கனவு காண்பது மிக மிக வேடிக்கையானது. நகைப்புக்குரியது. மாவட்ட அபிவிருத்திக்கான அதிகாரப் பகிர்வின் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முடியும் என்று நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன்பாடு தெரிவித்திருந்தமை வேடிக்கையிலும் வேடிக்கையாகும். அதேவேளை, அத்தகைய கருத்தை தான் முன்வைக்கவில்லை. ஊடகங்களில் அந்த விடயம் தவறாக வெளிவந்து சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் விளக்கமளித்திருக்கின்றது.

ஜனாதிபதி செயலகத்தின் விளக்கத்தில் மாகாண சபைகளுக்குக் கீழ் மாவட்ட அபிவிருத்தி குழுக்களை உருவாக்க முடியும். நிறைவேற்றுத் தீர்மானங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூட்சி மன்றங்களுக்கு இடையில் சரியான ஒருங்கிணைப்பைப் பேணுவதற்கான களமாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் செயற்படும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மாகாண சபைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஓர் அரசியல் நிர்வாகக் கட்டமைப்பாகும். அந்த சபைகளுக்கென பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சட்ட ரீதியான அதிகாரங்களை வழங்குவதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தயாராக இருக்கவில்லை. இந்த நிலையில் ஏனோ தானோ என்ற ரீதியிலேயே மாகாண சபைகள் செயற்பட்டு வருகின்றன. இந்த இலட்சணத்தில் மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கங்கள் பின்னடிக்கின்றன. காலம் கடந்த நிலையிலும் அந்தத் தேர்தல்களை நடத்துவதில் பொருளாதார நெருக்கடியை முன்வைத்து அரசு அக்கறையற்ற போக்கிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வு காண முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கையூட்டி அது குறித்த பேச்சுவார்த்தைக்கான திகதி உள்ளிட்ட காலக் கெடுவையும் வெளியிட்டிருந்தார். அரசியல் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வு எத்தகையது, எத்தகைய நிர்வாக மட்டத்தில் அது வழங்கப்படும் என்பது குறித்த விடயங்கள் தெளிவற்றிருக்கின்றன.

இந்தத் தருணத்திலேயே மைத்திரிபால சிறிசேன அதிகாரப் பகிர்வுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபை யோசனையை முன்வைத்திருக்கின்றார். அதனை உள்ளடக்குவதற்கு ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் காகம் இருக்க பனம்பழம் விழுந்ததைப் போன்று நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றியுள்ள ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதையே தனது முதன்மையான அரசியல் நடவடிக்கையாக வரித்துக் கொண்டிருந்தார்.

அந்த வகையில் பொருளாதாரப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதே அவருடைய தீர்க்கமான அரசியல் செயற்பாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

பொருளதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதே அரசாங்கத்தின் மிக உறுதியான இறுதிச் செயற்பாடாகக் காணப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அந்த நிபந்தனைகள் நாட்டில் நிலவுகின்ற எரியும் பிரச்சினைளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது முக்கிய அம்சமாக அந்த நிபந்தனைகளில் வெளிப்பட்டிருக்கின்றது.

பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்கின்ற ஒட்டு மொத்த முயற்சியின் ஓர் அங்கமாகவே அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வு காண்கின்ற விடயம் சேர்க்கப்பட்டிருக்கின்றது, ஆக பொருளாதாரப் பிரச்சினையைக் கையாள்வதற்கு உறுதணையாக அந்த முயற்சிக்கு ஓர் ஆதாரமாகவே அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவள்ளது என்பதும் தெளிவாகியிருக்கின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று, வரவு செலவுத் திட்டத்தையும் அவரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றார். அவருடைய வரவு செலவுத் திட்டத்தில் ஒரு விடயம் மறைநிலையாக இருந்த போதிலும் தூக்கலாகத் தென்படுகின்றது. பொருளதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதை இலக்காகக் கொண்ட இந்த வரவு செலவுத் திட்டம் ஏற்றுமதி பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. ஆனால் இதில் உள்ளுர் உற்பத்தி அபிவிருத்தி குறித்து கூடிய கவனம் செலுத்தப்படவில்லை.

இந்தப் பொருளாதாரக் கொள்கையானது 40 வருடங்களுக்கு முன்னர் திறந்த பொருளாதாரப் போக்கை நாட்டில் அறிமுகப்படுத்திய முன்னாள் ஜனாதிபதியும் அரசியலில் நரி என பெயர் பெற்றவருமாகிய ஜே.ஆர்.ஜயவர்னவின் கொள்கையைப் பின்பற்றியதாக அமைந்திருக்கின்றது.

பொருளாதாரக் கொள்கையை மட்டுமல்ல. அரசியல் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்திலும் தனது அரசியல் குருவாகிய ஜே ஆரின் வழிப்போக்கையே ரணில் விக்கிரமசிங்க உள்ளார்ந்த முறையில் பின்பற்றத் துணிந்திருக்கின்றார் என்பது மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பற்றிய நாடாளுமன்றக் கருத்தாடல்களின் மூலம் வெளிப்பட்டிருக்கின்றது.

மாவட்ட சபைகளின் பிதாமகராகிய ஜேஆரின் வழியிலேயே ரணில் விக்கிரமசிங்கவும் தனது அரசியல் பயணத்தைக் கொண்டு செல்ல முற்பட்டிருக்கின்றார் என்பது அவருடைய அரசியல் செயற்பாடுகளை கூர்ந்து கவனித்தால் புரிந்து கொள்ள முடியும். பொருளாதாரப் பிரச்சினை என்பது பல்வேறு விடயங்களுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் ரணில் விக்கிரமசிங்க அனைத்து விடயங்களுக்கும் – அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காணும் போக்கில் அரசியலில் அகலக் கால் வைத்திருப்பதைக் காண முடிகின்றது.

இவ்வாறு அகலமாகக் கால் வைப்பதன் மூலம் பலதரப்பினரையும் தன்பால் கவர்ந்திழுக்க முயற்சிக்கின்றார் என்பது தெரிகின்றது. எல்லோரையும் கவர்ந்திழுத்து திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம். அதிலும் குறிப்பாக பல்வேறு பிரச்சினைகள் ஊறிப் போய்க்கிடக்கின்ற இலங்கையின் அரசியலில் அது சாத்தியமாகாத காரியம். இங்குள்ள பிரச்சினைகள் வெறும் பிரச்சினைகளாக அல்லாமல் இனத்துவ அரசியலுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன. குறிப்பாக சிங்கள பௌத்தம் என்ற இனவாத அரசியல் நஞ்சு கலந்த தேசியத்துடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் படர்ந்திருக்கின்றன.

இந்த இனவாத தேசிய அரசியல் நாட்டில் ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி அவற்றைப் புரையோடச் செய்திருக்கின்றன. அந்த நிலையில் மருந்துக்கும் பன்முகத் தன்மை அற்றதோர் அரசியல் வழிப்போக்கில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கத்தக்க அரசியலைக் கொண்டு செல்வதென்பது தண்ணீருக்குள் நெருப்பை அணையாமல் கொண்டு செல்ல முற்படுகின்ற காரியமாகும்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டுமானால் முதலில் இதய சுத்தியுடனான அணுகுமுறை அவசியம். உண்மையாகவே அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியில்தான் அவர் ஈடுபட்டிருக்கின்றார் என்பதைப் பிறர் குறிப்பாக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற சிறுபான்மை இன மக்களும் அத்துடன் சர்வதேசமும் நம்ப வேண்டும். அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான முறையில் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த முயற்சி பலனுள்ளதாக அமையும். ஆனால் அத்தகைய காய்நகர்த்தல்களையும் அரசியல் அணுகுமுறைகளையும் அவரிடம் காண முடியவில்லை. நிலைமைக்கு ஏற்றவாறு மேலோட்ட நிலையிலான நல்லிணக்க நகர்வுகள் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு உதவமாட்டாது.

அவருடைய நல்லெண்ணச் செயற்பாடுகள் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளே என்ற ஐயப்பாடு பாதிக்கப்பட்ட மக்களுடைய மனங்களில் ஆழப் புதைந்திருக்கின்றன. அவரது கடந்த கால அரசியல் செயற்பாடுகளும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் அவர் கைக்கொண்டிருந்த இராஜதந்திர நடவடிக்கைகளும் இந்த ஐயப்பாட்டுக்கு உரம் சேர்த்திருக்கின்றன

இந்த நிலையில் ஆழமறியாமல் காலை விடுவது தமிழ்த் தரப்புக்கு நல்லதல்ல. அதேவேளை அவரது நகர்வுகளின் உள்ளார்ந்த உண்மையான நிலைமைகளை அரசியல் ரீதியாக உய்த்துணர்ந்து அதற்கேற்ற வகையில் தமிழ்த் தரப்பில் காய் நகர்த்துவதற்கான ஆளுமை மிக்க அரசியல் தலைமைகள் இல்லை என்பதும் கவலைக்குரியது. தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்பது நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றி அந்த சபையில் கர்ச்சித்து வருகின்ற அளவிலேயே மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதற்கும் அப்பால் அவர்களால் செயற்பட முடியாத பலவீனமான அரசியல் நிலைப்பாடே நிலவுகின்றது.

இத்தகைய நிலையிலேயே அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வு காணும் முயற்சியை மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அல்லது மாவட்ட அபிவிருத்தி குழுக்கள் என்ற வரையறைக்குள் திணிப்பதற்கான முயற்சியே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

Exit mobile version