Tamil News
Home செய்திகள் இனமானம் காக்க போராட்டக்களங்களில் எழுந்த புரட்சி முழக்கம்! தூரிகைப்போராளி ஓவியர் வீர.சந்தானம் – சீமான் 

இனமானம் காக்க போராட்டக்களங்களில் எழுந்த புரட்சி முழக்கம்! தூரிகைப்போராளி ஓவியர் வீர.சந்தானம் – சீமான் 

ஓவியர் வீர.சந்தானம் மறைவு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (13-07-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்த்தேசிய இனப் போராட்ட வரலாற்றில் தனது அளப்பரிய இனமான உணர்ச்சியால் தமிழினம் செழிக்கத் தளராமல் தொடர்ச்சியாகக் களத்தில் நின்ற தூரிகைப்போராளி எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ஓவியர் வீர.சந்தானம் அவர்கள் காலமான துயரச்செய்தி கேட்டு கலங்கி நிற்கிறேன். தனிப்பட்ட அளவில் எம் மீது பேரன்பும், பெருநம்பிக்கையும் கொண்டிருந்த ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் மறைவு எனது வாழ்வில் நான் அடைந்துள்ள பேரிழப்பாகும்.

தமிழின் செழுமையான ஓவிய வகைப்பாட்டில் நவீன ஓவியத் தொடர்ச்சிக்கும், மரபுசார் ஓவிய முறைமைக்கும் இடையே பாலமாய்த் திகழ்ந்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கிய தகைமையாளர் ஓவியர் வீர.சந்தானம் அவர்கள். ஈழ அழிவின் உதிரக் காட்சிகள் சிற்பங்களாய் உறைந்திருக்கும் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தூரிகைப்போராளி வீரசந்தானத்தின் பங்கு எதனாலும் ஒப்பிட முடியாதது.

காண்போர் கண்களைக் கலங்கச்செய்யும் முள்ளிவாய்க்கால் முற்றச் சிற்பங்கள் காலங்காலமாய் நம் இனத்தின் அழிவை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பது போலவே தூரிகைப்போராளி வீரசந்தானத்தின் கலைமேன்மையும் நமக்கு உணர்த்துவதாகத் திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தமிழின் ஆகச்சிறந்த ஓவியராக முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாது, தமிழின நலன் சார்ந்த எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் அழைப்போ, அழைப்பில்லையோ முதல் ஆளாக முன்வரிசையில் வந்து முழக்கங்கள் இட்ட இந்தப் போராட்டக்காரன் போல வேறு இன்னொருவரைத் தமிழின வரலாற்றில் காண முடியாது.

என்னை எங்குப் பார்த்தாலும் அன்பொழுக நோக்கிய அந்தக் கண்கள், என்னை ஆரத் தழுவி அரவணைத்து மாசற்ற அன்பை மழைபோலக் கொட்டிய அந்த இதயம், எப்போதும் என் தோள்களில் தழுவி என்னைத் தட்டிக் கொண்டே இருந்த அந்தக் கரங்கள், நம்பிக்கையுடன் என்னை நகர்த்திக் கொண்டே இருந்த அந்தச் சொற்கள் இவைகளையெல்லாம் இனி நான் எங்குக் காண்பேன் என்கின்ற துயரம் இதயத்தில் முள்ளாய் உறுத்துகிறது.

தூரிகைப்போராளியே! எந்த நோக்கத்திற்காக உனது கால்கள் களைப்படையாமல் அலைந்ததோ, எந்த இலட்சியத்திற்காக உனது இதயம் சலிப்படையாமல் துடித்ததோ, எந்தப் புனித நோக்கத்திற்காக உனது குரல் புரட்சி முழக்கங்களாய் வெடித்ததோ, எந்த இலக்கிற்காக உனது தூரிகை உதிரச்சொட்டுகள் நிறைந்த ஓவியங்களாய் வடித்ததோ அந்தப் புனிதக்கனவு நிறைவேறும்வரை எங்களது விழிகள் உறங்காது. இந்தப் புவியுள்ளவரை, எம் மொழியுள்ளவரை உனது புகழ் ஒருபோதும் மறையாது! மறையாது! ஓவியர் வீர.சந்தானம் அவர்களுக்குப் பெருக்கெடுக்கும் கண்ணீரோடு நாம் தமிழரின் புகழ் வணக்கம்!

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version