Notice: Undefined variable: _SESSION in /home/gi5h742vtw17/public_html/www.ilakku.org/index.php on line 1
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியச் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் ஸ்ரான் சுவாமியின் சாவு
Home ஆய்வுகள் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியச் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் ஸ்ரான் சுவாமியின் சாவு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியச் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் ஸ்ரான் சுவாமியின் சாவு

தமிழில்: ஜெயந்திரன்

இந்தியாவில், சிறையில், உடல் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்த போதிலும், பிணை மறுக்கப் பட்ட எண்பது வயதைக் கடந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவரின் சாவு, நாடு முழுவதும் எதிர்ப் பலைகளைத் தோற்றுவித் திருப்பதுடன், பயங்கர வாதத்துக்கு எதிரான சட்டங்களை மிகத் தவறாகப் பயன் படுத்துகின்ற தற்போதைய அரசின் நடவடிக்கையையும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி யிருக்கிறது.

எண்பத்து நான்கு (84) வயது நிரம்பிய பன்னாட்டுத் துறவற சபையான இயேசு சபையைச் சேர்ந்த ஸ்ரான் சுவாமி அவர்கள், மும்பாயில் உள்ள திருக் குடும்ப மருத்துவமனையில் (Holy Family Hospital)  கடந்த திங்கட்கிழமை மாரடைப்பின் காரணமாக இறந்ததாக அரச சட்டத்தரணி உச்ச நீதிமன்றில் அன்று மாலை தெரிவித்தார். அருட்தந்தையின் மருத்துவ நிலையைக் காரணங் காட்டி முன்வைக்க ப்பட்ட பிணை மனுவை கடந்த மார்ச் மாதம் நீதிமன்று ஏற்க மறுத்திருந்த நிலையில், அன்றைய தினம் அவசர அவசரமாக மீண்டும் முன்வைக்கப்பட்ட ஒரு பிணை மனுவை நீதிமன்று விவாதித்துக் கொண்டிருந்தது.

பார்க்கின்சன் (Parkinson’s disease) நோயால் நீண்ட காலம் பாதிக்கப் பட்டிருந்த சுவாமி, அண்மையில் கோவிட்-19 தொற்றுக்கும் உள்ளாகியிருந்தார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற சுவாமியின் பிணை மனுவின் மீதான விசாரணையின் போது, சுவாமிக்கு காது கேட்பதில் கடுமையான சிக்கல் இருந்ததாகவும், அதே வேளையில் உடல் ரீதியாக அவர் மிகவும் பலவீனமடைந் திருப்பதாகவும் நீதிமன்றில் சுட்டிக் காட்டப் பட்டிருந்தது.

இந்தியாவில் வாழும் ஏழை மக்கள் மற்றும் பூர்வீகக் குடிகளின் மனித உரிமை களுக்காக பல தசாப்தங்களாக அவர் போராடி வந்தது மட்டு மன்றி, சாதியை மையமாக வைத்து இக்குறிப்பிட்ட மக்கள் மீது மேற் கொள்ளப்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராக மிகக் காத்திரமான முறையில் அவர்  பேசியும், எழுதியும் வந்தார்.

இந்தியாவில் நிலவுகின்ற சாதீய ஒழுங்கமைப்பு 1950ஆம் ஆண்டு உத்தியோக பூர்வமாக இல்லா தொழிக்கப்பட்டது. ஆனால் இரண்டாயிரம் வருடங்களாக நீடித்து வரும், பிறப்பை அடிப்படையாக வைத்து மக்களை உயர்வாகவும், தாழ்வாகவும் பாகுபடுத்துகின்ற இந்த   நடைமுறை, அங்கு வாழும் மக்களின் வாழ்வின் பல்வேறு அம்சங்களை இன்றும் பாதித்தே வருகின்றது. இந்துக்கள் பிறக்கும் போது சாதீயக் கட்டமைப்பு அவர்களை வகைப் படுத்துவதுடன் சமூகத்தில் அவர்கள் எந்த இடத்தில் இருப்பார்கள் என்றும் அவர்கள் எப்படிப்பட்ட தொழில்களை மேற்கொள்ளலாம் என்றும் யார் யாரை அவர்கள் திருமணம் செய்யலாம் என்பதையும் இந்தச் சாதீயக் கட்டமைப்புத் தீர்மானிக்கின்றது.

கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் சுவாமி கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களின் அடிப்படையில் அவர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டன. இப் பயங்கரவாதச் சட்டங்கள் மிகக் கொடுமையானவை என்று விமர்சகர்கள் ஏற்கனவே சாடியிருக்கிறார்கள்.

“தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய தாகவும், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வன்முறை நிகழ்வைத் தோற்றுவிக்கச் சதி செய்ததாகவும்  சுவாமியும் இன்னும் 15 செயற்பாட்டாளர்கள், கல்வியியலாளர்கள் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டதாக” அவரது கைதுக்குப் பின்னர் நாட்டின் பயங்கரவாதத்துக்கு எதிரான செயலணி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது.

பீமா கோரேகான் வழக்கு (Bima Koregaon Case) என்று அழைக்கப்படும் அந்த கலவரத்தின் போது, ஒடுக்கப்பட்ட சாதி எனக் கருதப் பட்டவர்களுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கின்ற ஏனைய பிரதேச குழுக்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

இந்தியாவின் சாதீயக் கட்டமைப்பில் மிகவும் கடை நிலையில் இருப்பவர்களாகக் கருதப்படும் பல்லாயிரக் கணக்கான தலித் இனமக்கள், அன்றைய பிரித்தானியக் காலனீய இராணுவத்தில் அங்கம் வகித்திருந்த நிலையில், உயர் சாதியைச் சேர்ந்த ஒரு ஆட்சியாளரை அவர்கள் தோற்கடித்த சண்டையின் 200ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக பீமா கோரேகான் கிராமத்தில் ஒன்று கூடியிருந்த போது, அங்கே அவர்கள் நடுவில் வன்முறை வெடித்தது.

இக்குறிப்பிட்ட வன்முறைக்குக் காரணமான அமைப்புடன் தொடர்புகளைப் பேணியதாக சுவாமியை அதிகாரிகள் குற்றஞ் சாட்டியது மட்டுமன்றி, நாட்டின் பாதுகாப்புக்கு மிக அதிக அச்சுறுத்தலாக விளங்குகின்ற மாவோயிஸ்ட் போராளிகளுடன் அவர் தொடர்புகளை வைத்திருந்தாகவும் குற்றம் சுமத்தினார்கள். இச்சம்பவங்களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், கலவரம் நடந்த குறிப்பிட்ட இடத்துக்குத் தான் ஒரு போதும் செல்லவில்லை என்றும், தான் கைது செய்யப் படுவதற்குச் சில நாட்களுக்கு முன் பதிவு செய்த காணொளி ஒன்றில் சுவாமி குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஒக்ரோபர் மாதம் அவர் கைது செய்யப்பட்ட போது, உலகளாவிய ரீதியில் அதற்கு எதிராகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு மனித உரிமைக் குழுக்களும் குரலெழுப்பின.

சிறையில் சாவதையே விரும்புகிறேன்

சுவாமியின் உடல் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டிருந்தது. கடந்த மாதம் கோவிட் தொற்றுக்கு அவர் ஆளான போது, அவரது உடல் நிலை மேலும் அதிக பாதிப்புக்கு உள்ளானது. அப்படி இருந்த போதும், சுவாமி தனது இல்லத்துக்குச் சென்று, அங்கே நோய்க்கான சிகிச்சையைப் பெறும் நோக்குடன் வழக்குக்கு முன்னரான பிணையில் செல்ல அவரை அனுமதிக்குமாறு அவரது சட்டத்தரணி முன்வைத்த பிணை மனுவை அதிகாரிகள் தொடர்ந்து நிராகரித்து வந்தனர்.

சுவாமிக்கு எதிராக முன்வைக்க ப்பட்ட குற்றச் சாட்டுகளின் பாரதூரத் தன்மையைக் சுட்டிக் காட்டி, மருத்துவ காரணங்களுக்காக முன் வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை ஏற்க முடியாது என்று அவரது வழக்குக்குப் பொறுப்பாக இருந்த தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்ததுடன், சிறையில் அவருக்கு உரிய பராமரிப்பு வழங்கப் பட்டு வருவதாகவும் அந்த அமைப்பு  மேலும் தெரிவித்தது.

அவரது நடமாடும் இயல்பு சிறையில் நாளுக்கு நாள் கணிசமான அளவு பாதிக்கப்பட்ட வேளையில், ஒரு ஸ்ட்ரோ (straw) மூலம் பானங்களை அருந்த தனக்கு அனுமதி அளிக்குமாறு சுவாமி கோரியிருந்தார். அதற்குக் கூட அவருக்கு அனுமதி வழங்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. “இந்தக் குற்றச்சாட்டு சரியானது அல்ல என்றும் தவறான நோக்கங் கொண்டது” என்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான செயலணி கடந்த வருடம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் மறுத்திருந்தது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை விடுத்து, சிறையில் இருந்தபடி சாவதையே நான் விரும்புகிறேன்

“மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் படுவதை விடுத்து, சிறையில் இருந்தபடி சாவதையே நான் விரும்புகிறேன்” என்று சுவாமி நீதிமன்றுக்குத் தெரிவித்திருந்ததாக நீதிமன்ற ஆவணங்களை ஆதாரங் காட்டி சிஎன்என் செய்திச் சேவை குறிப்பிட்டது.

மே மாதத்தின் இறுதிப் பகுதியில் நீதிமன்றின் கட்டளையின் பேரில் சுவாமி திருக்குடும்ப மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

“உரிய சட்ட நடை முறைகளுக்கு அமைவாகவே சுவாமி கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப் பட்டிருந்ததாக” இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தி அறிக்கை தெரிவித்தது.

“மோசமடைந்து கொண்டிருந்த சுவாமியின் உடல் நிலையின் காரணமாக, வேண்டிய மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்காக ஒரு தனியார் மருத்துவ மனையில் அவர் சேர்க்கப் பட்டதாகவும் மே மாதம் 28ஆம் திகிதியிலிருந்து தேவையான சிகிச்சை அவருக்கு அளிக்கப் பட்டது” என்று அந்த அமைச்சின் அறிக்கை மேலும் தெரிவித்தது.

சுவாமியின் சாவு தொடர்பாக, எதிர்க் கட்சி அரசியல் வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியியலாளர்கள்  அதிகளவானோர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அத்துடன் அவரைக் கைது செய்யவும் பிணை வழங்காது தொடர்ந்து அவரைத் தடுத்து வைக்கவும் பயன்படுத்தப்பட்ட சட்டங்கள் தொடர்பாகத் தமது கோபத்தையும் சமகாலத்தில் அவர்கள் வெளிப்படுத்தி யிருக்கின்றனர். இந்திய அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களின் குரல்களை நசுக்குவதற்கு பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களை அரசு அண்மையில்  அதிக அளவில்  பயன்படுத்தி வருவதாக விமர்சகர்கள் அரசைக் குற்றஞ் சாட்டுகின்றனர்.

“சுவாமியின் கைது மிகவும் வேதனை தரும் ஒரு நிகழ்வு”  என்று மும்பாய் பேராயர் கருதினால் ஒஸ்வால்ட் கிரேசியஸ் ஆண்டகை (Oswald Cardinal Gracias) கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

“குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதியே” என்று அவரது அறிக்கை சுட்டிக் காட்டியது. அருட்தந்தை ஸ்ரான் சுவாமியின் வழக்கு விசாரணைக்குக் கூட எடுக்கப் படவில்லை என்பதை பேராயர் குறிப்பிடத் தவறவில்லை.

“இந்தியாவில் வாழும் ஏழை எளியவர்களும், சமூகத்தால் ஒதுக்கப் பட்டவர்களும் தமது மாண்பைக் கண்டு கொள்ளவும் வாழ்வில் முன்னேற்றம் அடையவும் சுவாமி முழுமையாக உழைத்தார்” என்று பேராயர் குறிப்பிட்டதோடு, “முற்று முழுதாக ஏழைகளுக்காகவே அவர் பணியாற்றினார்” என்று போராயர்  தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

“நீதியுடனும் மனித நேயத்துடனும் சுவாமி நடத்தப் பட்டிருக்க வேண்டும்”  என்று இந்தியாவின் எதிர்க் கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ருவிற்றரில் மேற் கொண்ட தனது பதிவில் எழுதியிருந்தார்.

“சுவாமியின் சாவு நாட்டுக்கு ஒரு துன்பியல் நிகழ்வு” என்று இந்தியாவின் ஒரு முன்னணி மனித உரிமை ஆர்வலர் ஹாஷ் மண்டர் (Harsh Mander) குறிப்பிட்டார்.

“அவரது குரலை மௌனிக்கச் செய்வதற்காக கொடூரமான ஓர் அரசு அவரைச் சிறையில் அடைத்தது. நீதியமைப்புகளோ அவரை விடுதலை செய்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை” என்று ருவிற்றரில் வெளியிட்ட செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

பன்னாட்டு ரீதியாக முக்கிய ஆளுமைகளும் சுவாமியின் கைது மற்றும் சாவு தொடர்பாகக் தமது கருத்தை வெளியிட்டிருக்கின்றார்கள். “பூர்வீகக் குடிமக்கள் உரிமைகளின் பாதுகாவலர்” என்று சுவாமியை அழைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி, சுவாமியின் வழக்கு தொடர்பாகக்   குறிப்பிட்ட அதிகாரிகளிடம் தொடர்ச்சியாகத் தாம் விளக்கம் கேட்டு வந்ததாகவும் குறிப்பிட்டார்.

“சுவாமியின் கைது, எம்மை வெட்கி நாண வைக்கும் கொடூர நிலையையும், மனித உணர்வுகளை அணுவளவும் மதிக்காக ஒரு தன்மையையும் கோடிட்டுக் காட்டுகிறது” என்று மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளரான மீனாட்சி கங்குலி (Meenakshi Ganguli) கூறினார்.

“பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் மிக மிகக் கொடூரமானது. அமைதியான வழியில் அரசை விமர்சிப் பவர்களுக்குப் பிணை வழங்காது அவர்களைச் சிறையில் அடைப்பதற்கு இந்தச் சட்டம் எந்த வரையறையுமின்றிப் பயன்படுத்தப் படுகிறது” என்று கங்குலி குறிப்பிட்டார். “சுவாமி உண்மையிலேயே குற்றவாளியா என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்தைச் சார்ந்தது. சுவாமிக்கான பிணையை தொடர்ச்சியாக மறுத்து வந்ததன் மூலம் மிகவும் பலவீனமாகவும், கடுமையாக நோயுற்று நலிவுற்ற நிலையிலும் இருந்த ஒரு செயற்பாட்டாளரை பாதுகாப்பதில்லை என்ற முடிவையே அதிகாரிகள் தேர்ந்தெடுத் திருக்கிறார்கள்”.

நன்றி: சிஎன்என்.கொம்; cnn.com

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version