செப்ரெம்பர் 13 காலை வரை ஊரடங்கு சட்டம் நீடிப்பு

செப்ரெம்பர் 13 வரை ஊரடங்கு சட்டம்செப்ரெம்பர் 13 வரை ஊரடங்கு சட்டம்: இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, செப்ரெம்பர் 13ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், நேற்று வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கொவிட் ஒழிப்புக்கான விசேட கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

மாகாண மற்றும் பிரதேச சுகாதாரப் பணிப்பாளர்களும், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு, கொவிட் ஒழிப்பு தொடர்பில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்களை முன்வைத்தனர்.

தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில், இதன்போது தீர்க்கமாகக் கலந்துரையாடப்பட்டதுடன், 20 – 29 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை, எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதிக்குள் முன்னெடுப்பதற்கான தேவை தொடர்பிலும், இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் மேற்கொள்ளப்படும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவிய சுகாதார, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும், ஜனாதிபதி அவர்கள் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.

சுகாதாரத் துறையினரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, தடுப்பூசி நிலையங்களுக்கான தடுப்பூசித் தொகை தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக முன்னெடுக்கப்படும் தடுப்பூசி ஏற்றல் பணிகளைப் புறந்தள்ளிவிட்டு, ஓரிரு தடுப்பூசி நிலையங்களில் இடம்பெறும் சில சம்பவங்களைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு ஊடகங்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் கவலைக்குரியனவாக உள்ளனவென்று, மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டினர்.

தடுப்பூசி ஏற்றலின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியுடன், புதிய பொதுமைப்படுத்தல் முறைமைக்கு ஏற்ப, நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்வதன் அவசியம் பற்றி, ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள போதிலும், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தின் வெற்றியுடன், ஏற்றுமதித் துறையில் ஈடுபடும் தொழிற்சாலைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடிந்தமையானது, பொருளாதாரத்துக்குக் கிடைத்த பெரிய ஆறுதலாக உள்ளதென்று, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான பஸில் ராஜபக்‌ஷ, கெஹலிய ரம்புக்வெல்ல, டலஸ் அழகப்பெரும, பவித்ரா வன்னியாரச்சி, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, ரமேஷ் பதிரண, நாமல் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, சிசிர ஜயகொடி, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதாரச் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன ஆகியோரும், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், கொவிட் ஒழிப்பு விசேட செயலணியின் உறுப்பினர்கள், மாகாணச் சுகாதாரணப் பணிப்பாளர்கள் ஆகியோரும், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021