Tamil News
Home செய்திகள் இலங்கை நெருக்கடி – புதிய பிரதமராக பதவியேற்ற ரணிலுக்கும் மக்கள் எதிர்ப்பு

இலங்கை நெருக்கடி – புதிய பிரதமராக பதவியேற்ற ரணிலுக்கும் மக்கள் எதிர்ப்பு

இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஆட்சியாளர்களை வெளியேறுமாறு கோரி காலி முகத்திடலில் தன்னெழுச்சி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 9ம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்திதார். இதையடுத்து, வெற்றிடமான பிரதமர் பதவிக்கு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

எனினும், புதிதாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கும் மக்கள் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களினால் முழுமையாக நிராகரிக்கப்பட்டு, தேசிய பட்டியலின் ஊடாக பாராளுமன்ற பிரவேசத்தை பெற்ற ஒருவருக்கு எவ்வாறு பிரதமர் பதவியை வழங்குவது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்த சந்தர்ப்பத்தில், இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற மாபெரும் நிதி மோசடியுடன், ரணில் விக்ரமசிங்க தொடர்புப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

ஊழல், மோசடிகளின் ஊடாக பெற்றுக்கொண்ட பணத்தை மீள கையளிக்குமாறே தாம் கோரி வருவதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். எனினும், தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்கவை கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நன்றி- பிபிசி தமிழ்

Exit mobile version