கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகள் மத்தியில் மாணவர்களின் கல்வி கருகிச் செல்கின்றதோ…? – பி.மாணிக்கவாசகம்

கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகள் மத்தியில் மாணவர்களின் கல்வி கருகிச் செல்கின்றதோகோவிட் 19 நெருக்கடி கல்வி கருகிச் செல்கின்றதோ? – பி.மாணிக்கவாசகம்

கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகள்

கோவிட் 19 நெருக்கடி கல்வி கருகிச் செல்கின்றதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் இப்போதைய கல்வி நிலைமைகள் இதற்கான சிந்தனையைத் தூண்டியிருக்கின்றன. கோவிட் 19 தாக்கத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை, முக்கியமாக சுகாதாரத்துறை, பொருளாதாரம் மட்டுமல்லாமல் கல்வி நிலைமைகளும் பெரும் சவாலுக்கு உள்ளாகியிருக்கின்றன.

கோவிட் 19 இன் தாக்கம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு மெய்நிகர் வழியில் கல்வி கற்க வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப் பட்டிருக்கின்றார்கள். பாடத் திட்டங்கள் உரிய காலக் கிரமத்தில் முடிக்கப்படாத காரணத்தினாலும், நோய்த்தொற்று அச்சுறுத்தலினாலும் பரீட்சைகளை நடத்த முடியாமல் கல்வி அமைச்சு தடுமாறுகின்றது.

கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகள் மத்தியில் மாணவர்களின் கல்வி கருகிச் செல்கின்றதோகோவிட் 19 நெருக்கடி கல்வி கருகிச் செல்கின்றதோ? பரீட்சைகளை நடத்துவதில் மட்டுமல்லாமல், பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதிலும் திண்டாட வேண்டிய நிலைமைக்கே கல்வி அமைச்சர் ஆளாகி யிருக்கின்றார். மறுபுறத்தில் நோய்ப் பேரிடர் பெருந் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், சாதாரண நிலைமைக்கு நாட்டைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.

கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகள் பொருளாதார நெருக்கடி, கடன் தொல்லை, நாட்டின் நிதி நிலைமைகளில் ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவு என்பன நாட்டை இயல்பு நிலைமைக்கு விரைந்து கொண்டுவர வேண்டிய அவசியத்தை அரசுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது. மக்கள் ஒன்று கூடுவதையும், பொது இடங்களில் நடமாடுவதையும் தடுப்பதற்காக முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அல்லது துறைகள் சார்ந்த நிலையிலோ கட்டுப்பாடுகளையும், தடைகளையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாய நிலைமைக்கு அரசு ஆளாகி இருக்கின்றது.

கோவிட் 19 இன் தாக்கம் ஏனைய துறைகளைப் போலவே கல்வித்துறையை கோவிட் தொற்றுப் பேரிடர் மிக மோசமாகப் பாதித்திருக்கின்றது. பாடசாலைகள் மூடப்பட்டதனால், மாற்று வழியில் மாணவர்களின் கல்வியைத் தொடர வேண்டிய கட்டாய நிலைமை உருவாகி இருக்கின்றது. இலங்கைக்கு மட்டுமன்றி கோவிட் தொற்றுப் பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் அனைத்துக்கும் இது பொதுவான பிரச்சினையாக, உலகளாவிய ரீதியில் காணப்படுகின்றது.

மெய்நிகர் வழியில் மாணவர்களின் கல்வியைத் தொடர்வதற்கான வழிமுறைகளை பல உலக நாடுகள் மிகச் சாதுரியமாகக் கடைப்பிடித்திருக்கின்றன. இதனால் மாணவர்களின் கல்வியில் பெரும் வீழ்ச்சி ஏற்படாத வகையில் அந்த நாடுகள் பாதுகாத்திருக்கின்றன. எதிர்கால சந்ததியினராகிய மாணவர்களின் வருங்காலம் கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக இருள் சூழ்ந்ததாக மாறிவிடக் கூடாது என்பதில் அந்த நாடுகள் மிகவும் கவனமாகவும், தொலைநோக்குடனும் செயற்பட்டிருக்கின்றன.

ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசாங்கத்தினால் அத்தகைய கவனமும், கரிசனையும் கல்வியில் காட்டப்படவில்லை. இந்தப் பாரிய குறைபாட்டை கல்வித்துறையைக்  கல்வி அமைச்சு கையாள்கின்ற வழிமுறைகளில் இருந்து தெளிவாகக் காண முடிகின்றது.

கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகள் மத்தியில் மாணவர்களின் கல்வி கருகிச் செல்கின்றதோகோவிட் பெருந் தொற்று நெருக்கடிகள் காரணமாக ஏற்பட்ட பேரிடரினால் ஏற்பட்டுள்ள புறப் பாதிப்பு நிலைமைகள், மாணவர்களின் கல்வியில் தாக்கம் ஏற்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பில் இருந்து அரசு தவறி யிருக்கின்றது. நாட்டின் பலதுறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்தப் பாதிப்பு கோவிட் நோய்ப் பேரிடருக்கு மேலதிகமாக கல்வியில் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளில் கல்வி அமைச்சு போதிய அளவில் கவனம் செலுத்தவில்லை. இதனை ஆசிரிய சமூகம் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் தெளிவாகக் காட்டியுள்ளது.

ஏன் இந்தப் போராட்டம்?

ஆசிரியர்கள், அதிபர்கள் கல்வித்துறையின் பிரதான தூண்களாக விளங்குகின்றார்கள். இவர்களே வருங்கால சமூகச் சிற்பிகளான மாணவர்களை உருவாக்குகின்ற முக்கிய பணியாற்றுகின்றவர்கள். நாட்டின் எதிர்கால குடிமக்களை சிறந்தவர்களாகவும், வல்லவர்களாகவும் வடிவமைக்கின்ற அரும் பணியை ஆற்றுபவர்கள். ஆனால் அரச சேவையில் ஏனைய சிவில் சேவையில் உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது இவர்களுடைய மனக்குறையாகும்.

இந்த மனக்குறை மனதளவில் மாத்திரம் நிற்கவில்லை. இவர்களுடைய சம்பளத் திட்டங்களும் ஏனைய அரச சேவையாளர்களின் தரத்துக்கு அமைவானதாக உருவாக்கப்படவில்லை; உள்வாங்கப்படவில்லை என்பது அவர்களுடைய தொழில் ரீதியான குறைபாடாகும். இந்தக் குறைபாடு தொழிற்சங்கப் பிரச்சினையாகக் கடந்த 24 வருடங்களாகத் தொடர்கின்றது என்பது அவர்களுடைய கூற்று.

சம்பளத்துடன் அரச தொழில் ரீதியான தகைமைகளிலும் அரசுகள் தங்களை ஏற்றத்தாழ்வுடன் நடத்தி வருகின்றது என்பது அவர்களுடைய தொழிற்சங்க அரசியல் ரீதியான குற்றச்சாட்டாகும். இந்தச் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள்.

கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகள் மத்தியில் மாணவர்களின் கல்வி கருகிச் செல்கின்றதோகோவிட் பெருந்தொற்று நிலைமை இந்தப் போராட்டத்திற்குத் தூண்டுகோலாக – முக்கிய தூண்டுகோலாக அமைந்து விட்டது. பாடசாலைகள் மூடப்பட்டதனால், கல்வியில் கரிசனை கொண்டவர்களாக மெய்நிகர் வழியிலான கற்கைகளில் மாணவர்களை சொந்த முயற்சியில் ஈடுபடுத்தியிருந்தார்கள். இந்த முயற்சியை முன்னெடுத்திருக்க வேண்டிய அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்பதும் அவர்களது குற்றச்சாட்டாகும்.

மெய்நிகர் வழியில் தங்களுடைய நேரத்தையும், சக்தியையும், பணத்தையும் செலவு செய்து மாணவர்களுக்கான கல்வியூட்டலைத் தொடங்கியிருந்த இவர்களுக்கு அரசாங்கம் அடிப்படையில் அவசியமான உதவிகளைத் தன்னும் செய்யவில்லை என்று அவர்கள் தமது போராட்டத்தின் ஊடாக சுட்டிக்காட்டி உள்ளார்கள்.

மெய்நிகர் வழியில் பாடங்களைப் போதிப்பதற்கு திறன்பேசிகள் என்ற ஸ்மாட் போன் அவசியம். அத்துடன் இணைய தொடர்புகளுக்கான தொலைத்தொடர்பு வசதிகளும் தேவை. இவற்றுக்கு அவர்கள் தமது சொந்தப் பணத்தையே செலவு செய்துள்ளார்கள். மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு தாங்களாகவே இத்தகைய சேவையாற்றிய ஆசிரியர்களின் முயற்சிக்கு ஊக்கமளிப்பதற்கு அரச தவறிவிட்டது.

அரசின் அடக்கு முறைகளும் எகிறும் போராட்டங்களும்

ஆசிரியர்களுக்கான இணையவழி வசதிகளை ஏற்படுத்தா விட்டாலும்கூட, அந்த முறையில் கற்றலில் ஈடுபடுகின்ற வசதிகளற்ற வறிய மாணவர்களுக்கான தொலைபேசிகள் அல்லது டெப்கள் (Tab) என்பவற்றுடன் இணையவழி தொடர்பு களுக்கான இன்டநெட் வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் அரசு அக்கறை காட்டவில்லை. மாறாக பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்ற போதிலும், இணைய வழியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக அரசியல் ரீதியிலான பிரசாரத்தையே அரசு மேற்கொண்டிருந்தது.

சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வின்றி பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள், அதிபர்களை, இது சீண்டுவதாக அமைந்து விட்டது. அதனால் அவர்கள் இணைய வழிக் கல்விப் போதனையைக் கைவிட்டு, போராட வேண்டிய நிலைமைக்கு ஆளாகி இருந்தார்கள். இதற்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போன்று கொத்தலாவலை பல்கலைக்கழகச் சட்ட மூலத்தைக் கொண்டு வருவதற்கான அரசின் முயற்சி அமைந்து விட்டது.

கட்டண முறைமையிலான தனியார் கல்வி முறைக்கு ஊக்கமளிப்பதுடன், கல்வியில் இராணுவ வழிமுறையைப் புகுத்துவதற்கும் இந்தச் சட்டம் வழிவகுக்கும் வகையில் நாட்டின் இலவசக் கல்விக்கு ஆப்பு வைக்கின்ற முயற்சியாகவே இதனை ஆசிரியர், அதிபர் சமூகம் அதிர்ச்சியுடன் நோக்கியது. இதன் விளைவாக அவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொரோனா நோய்த் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தனிமைப்படுத்தல் சட்ட நடைமுறைக்கு உட்படுத்தி அவர்களைப் பழிவாங்குவது போன்ற செயற்பாட்டை அரசு மேற்கொண்டது. அதேவேளை இன்றைய நாட்டின் பொருளாதார நிலைமையில் ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கையை எந்தவகையிலும் நிறைவேற்ற முடியாது என்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், இந்தப் பிரச்சினைக்கு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. அது மட்டுமன்றி எவ்வாறு அந்தத் தீர்வு காணப்படும் என்பதை அது வெளிப் படுத்தவில்லை.

இந்த அடக்கு முறைக்கு எதிராக ஆசிரியர் அதிபர் சமூகம் நாடளாவிய ரீதியில் தமது போராட்டத்தை விரிவுபடுத்தியது. அந்தப் போராட்டத்தின் நியாயத் தன்மையையும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் சங்க முக்கியஸ்தராகிய ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வைத்து தண்டிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஆயினும் அவர்கள் நல்ல முறையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் பராமரிக்கப்படுவதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட கருத்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் மாற்றுடையின்றி படுக்கை விரிப்புக்களைப் பயன்படுத்த நேரிட்டிருந்த ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் உண்மை நிலையை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகள் மத்தியில் மாணவர்களின் கல்வி கருகிச் செல்கின்றதோஇந்த நிலைமைகள் ஆசிரியர் அதிபர் சமூகத்தின் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஏனைய தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகளோடு அரசியல் வாதிகள் உள்ளிட்ட பலதரப்பினரது ஆதரவையும் திரட்டித் தந்திருந்தன. இதனால் நாடளாவிய ரீதியில் விரிவடைந்த போராட் டங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு அரசு ஆளாகியது. அதே வேளை, கொத்தலாவலைப் பல்கலைக்கழக சட்டமூலத்தின் உண்மையான நோக்கத்தையும் பலதரப்பினரும் உணர்ந்து அதனையும் அவர்கள் எதிர்க்கத் தொடங்கினர். இது ஆப்பிழுந்த நிலைமைக்கே அரசாங்கத்தைக் கொண்டு சென்றிருக்கின்றது.

இதனால் அந்தச் சட்டமூலத்துக்கான நாடாளுமன்ற விவாதத்தை ஒத்திவைக்க வேண்டிய கட்டாய நிலைமைக்கு அரசு ஆளாகியிருக்கின்றது. அத்துடன், போராட்டக்காரர்களை நோக்கி அதிகாரத் தோரணையில் விளித்து எச்சரிக்கை செய்யும் போக்கில் கருத்துரைத்து வந்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தனது தொனியை மாற்றி, கோவிட் நோய்ப் பெருந்தொற்று நாட்டில் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தப் போராட்டத்தை அதிபர் ஆசிரியர்கள் கைவிட வேண்டும் என பணிவுடன் வேண்டுவதாக கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனாலும் பிரச்சினைகளுக்குத் தீரவு காணும் வகையில் தமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உறுதியாகத் தெரிவித்து ஒரு மாதத்திற்கு மேலாகத் தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றார்கள். இதனால் இணையவழி கற்பித்தல் நடவடிக்கை நிறுத்தப்பட்டு மாணவர்களின் கல்வி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றது.

மாணவர்களின் கல்வி கருகிச் செல்கின்றதோ…?

முன்னர் குறிப்பிட்டது போன்று வருங்கால சமுதாயத்தினராகிய இன்றைய மாணவர்கள் தமது கல்வியைப் பாதிப்பின்றி தொடர்வதற்கு வழி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். ஏனெனில் இளஞ்சிறார்கள் உள்ளிட்ட மாணவர்களின் கல்வி உரிமை என்பது மிக முக்கியமான அடிப்படை உரிமையாகும். நாட்டின் வருங்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள அவர்களுடைய அடிப்படை உரிமையில் கைவைப்பதற்கோ அதனை மீறுவதற்கோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. அருகதையும் கிடையாது.

கோவிட் 19 இன் தாக்கம் காரணமாக நாடு பல முனைகளில் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. ஆயினும் அந்த நெருக்கடிகள் மாணவர்களின் கல்வியைப் பாதிப்பதற்கு இடமளிக்க அனுமதிக்க முடியாது என்பதையும் அரசு முக்கியமாகக் கவனத்திற்கொள்ள வேண்டும்.

பொருளாதார நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றது

கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகள் மத்தியில் மாணவர்களின் கல்வி கருகிச் செல்கின்றதோநாடு மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி யிருக்கின்றது. அதற்கு சற்றும் குறைவில்லாத நிலையில் சுகாதார நிலைமைகளும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றது. பொருளாதார ரீதியில் செயலற்ற நிலைமைக்கு நாடு தள்ளப் பட்டிருப்பது போலவே, நாட்டின் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைகள் ஸ்தம்பிதம் அடைகின்ற ஆபத்தான நிலைமைகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

ஆயினும் இதேபோன்ற நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கின்ற ஏனைய நாடுகளில் மாணவர்களின் கல்வியைக் கட்டிக்காப்பதற்கு மேற்கொண்டிருக்கின்ற வழிமுறைகளைப் பின்பற்றி தனது நாட்டுக்கு உகந்ததொரு வேலைத் திட்டத்தை அரசு முன்னெடுக்க வேண்டும். இந்த முக்கிய பொறுப்பை அரசு தட்டிக் கழிக்க முடியாது.

நாட்டின் இலவசக் கல்விக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல கொத்தலாவலைப் பல்கலைக்கழக சட்டமூலத்தைக் கைவிடுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. அதனை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் தந்திரோபாய ரீதியில் அது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதேவேளை, இந்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறையில் 40 பில்லியனும், கல்வித்துறையில் 28 பில்லியனும் குறைமதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக இலங்கையின் முற்போக்கு சக்தியாகிய ஆசிரியர் மாணவர் பெற்றோர் பாதுகாப்பு குழு சுட்டிக்காட்டி இருக்கின்றது.

நாட்டின் கோவிட் 19 இன் தாக்கம் காரணமாக பெருந்தொற்று நிலைமைகளும், பொருளாதார நிலைமைகளும் நாளாந்தம் மோசமடைந்து சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ஆசிரியர் அதிபர்களின் போராட்டமும் முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மாணவர்களின் கல்வி நிலைமைகளும் மிகவும் மோசமடைந்திருக்கின்றது. இந்த நிலையில் நாட்டின் கல்வி நிலைமை இருண்ட யுத்திற்குள் பிரவேசிக்கின்றதோ என்றும் கல்வி கருகிச் செய்கின்றதோ என்றும் கவலையுடன் சிந்திக்கத் தூண்டி இருக்கின்றது.