Covid-19 தாக்கம்: விளிம்பு நிலை சமூகத் தோற்றம்

Covid-19 தாக்கம்

வேலம்புராசன் . விதுஜா, சமூகவியல் துறை நான்காம் வருடம் யாழ் பல்கலைக்கழகம்.

Covid-19 தாக்கம்: 2020 மார்ச் 11ஆம் திகதியன்று உலக சுகாதார நிறுவனம் Covid -19 இனை உலகளாவிய தொற்று நோயாக அறிவித்தது. வளர்ந்து வரும் சுற்றுலாத்துறையினாலும், ஏராளமான வெளிநாட்டவரினாலும் இலங்கையில் வைரஸ் பரவல் ஏற்பட்டு மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகக் காணப்பட்டது. முதல் தொற்றாளர் 2020 ஜனவரி 27ஆம் திகதியன்று இனங்காணப்பட்டதுடன், முதல் இலங்கை நாட்டவர் 2020 மார்ச் 10ஆம் திகதியன்று Covid -19 தொற்றாளராக இனங்காணப்பட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இலங்கை அரசாங்கமானது நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக அறிமுகப்படுத்தியதுடன், 2020 மார்ச் 16ஆம் திகதி நாடளாவிய முடக்கத்தை அறிமுகப்படுத்தியது.

Covid 19 தாக்கம்1 Covid-19 தாக்கம்: விளிம்பு நிலை சமூகத் தோற்றம்ஏற்கனவே நிதித் தடைகளை எதிர்கொண்ட வேளையில், இந்த தொற்று நோய் நாட்டின் மேலதிக வளக் கோரிக்கைகளை முன்வைத்தது. தோற்று நோயைக் கட்டுப்படுத்த நிதி, தொழில்நுட்ப மற்றும் கொள்முதல் உதவிகளைத் திரட்டுவதை விரைவாக ஒருங்கிணைப்பதே சவாலாக இருந்தது. Covid -19 இலங்கைப் பொருளாதாரத்தில் பெருமளவு பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. Covid -19 காரணமாக வேலை நாட்கள் குறைவடைதல், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம், அதிகரித்த மருத்துவச் செலவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பன ஏற்படுவதுடன் வைத்தியர்கள், தாதியர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுபவர்கள், மாணவர்கள் என அனைத்து பிரிவினர்களும் ஏதோ ஒரு விதத்தில் சமூகத்தின் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுகின்ற நிலை ஏற்படுத்தப்படுகின்றது.

22 ஆண்டுகளாக உலகளவில் தீவிர வறுமை குறைந்திருந்தது. Covid -19 இனைத் தொடர்ந்து பாரிய வேலை இழப்புக்கள், பொருளாதார சுருங்கல், வாழ்வாதார இழப்பு குறிப்பாக பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு அமைப்புகள் இன்மை என்பன ஏற்படுத்தப்படுகின்றது என Lead auther of UN Womens leatest Report and Data Specialist Ginette Azcona கூறியிருக்கக் காணலாம்.  UN இனால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி 2021ம் ஆண்டளவில் 96 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் தள்ளப்படுவர் என கூறுகின்றது. இவர்களில் 47 மில்லியன் பெண்கள் USD 1.90 அல்லது அதற்கும் குறைவான வருமானத்தில் வாழும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என குறிப்பிட்டு இருந்தது. அதிலும் ஆண்களை விட பெண்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர் என்பதுடன் 25-34 வயதிற்கு உட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

வேலை இழப்பு என்பது Covid -19 பின்னணியில் முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. இந்த வகையில் தொற்று நோய் மற்றும் அதன் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் சமூகத்தின் பல பிரிவினரிடையே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்துகின்றதுடன், ஒட்டுமொத்த வேலை நேரத்தையும் குறைக்கின்றது. உலகில் 3.3 பில்லியன் தொழிலாளர்கள் தொகுதியில் கிட்டத்தட்ட பாதி பேர் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். முறைசாரா பொருளாதாரத் தொழில்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பான்மையானோர் சமூகப் பாதுகாப்பு, தரமான சுகாதார பாதுகாப்பிற்கான அணுகலினை இழந்துள்ள நிலையில் இவர்கள் அதிக பாதிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றனர் என உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகின்றது. பூரண கதவடைப்பு காலத்தில் வருமானம் ஈட்ட வழி இன்றி தமக்கும் தமது குடும்பங்களிற்கும் உணவின்றி வாடுகின்றனர்.

எல்லை மூடல்கள், வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் என்பன விவசாயிகள் தங்கள் பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பது உட்பட சந்தைகளை அணுகுவதனையும், விவசாய தொழிலாளர்கள் பயிர்களை அறுவடை செய்வதனையும் தடுக்கின்றது. இதனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச உணவு விநியோகச் சங்கிலியை சீர்குலைத்து ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் மாறுபட்ட  உணவுகளுக்கான அணுகலைக் குறைக்கின்றது. உணவளிப்பவர்கள் வேலைகளை இழந்து நோய்வாய்ப்பட்டு இறக்கும் போது மில்லியன் கணக்கான பெண்கள் மற்றும் ஆண்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். குறிப்பாக இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள சிறிய அளவிலான விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்கள் போன்றோர் உள்ளடங்கிய விளிம்பு நிலை மக்களை கடுமையாக தாக்கியுள்ளது.

மாணவர்கள் எனும் அடிப்படையில் பார்க்கின்ற போது இன்று உலகளவில் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் கல்வி ரீதியாக பல தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டாலும், அதற்கு மாற்று நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இணையவழிக் கல்வி என்பது எந்த அளவிற்கு மாணவர்களிற்கு உரிய முறையில் சென்றடைகின்றது என்பது கேள்விக்குரியதாக காணப்படுகின்றது. இணைய வசதிகள் இன்மை, ஆசிரியர் மாணவர்களுக்கான போதியளலு இடைவினை இன்மை, நடைமுறை ரீதியான கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாமை, போதியளவு கவனிப்பற்ற மாணவர்கள் தவறான வழியில் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்தல் என்பன ஏற்படுகின்றன. இதனால் மாணவர்கள் அதிளவில் சமூகத்தின் விளிம்பு நிலைக்க தள்ளப்படுகின்ற நிலை ஏற்பபடுத்தப்படுகின்றது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகல் மிகச் சிறந்த வழி என்றாலும் Covid -19 நோயாளிகளுடன் நேரடித் தொடர்பு தேவைப்படும் சுகாதார பணியாளர்களிற்கு இதனை செயற்படுத்துவது எளிதானது அல்ல. முன்னணி சுகாதார வல்லுனர்கள் இத் தொற்று நோயை கட்டுப்படுத்தும் உறுதிப்பாட்டின் காரணமாக அதிகளவு பாதிப்படைகின்றனர். தொழில் முறை ரீதியான மன அழுத்தம், தொற்று நோய் குறித்த பயம், மற்றும் உதவியற்ற உணர்வு, இறப்பு என்பன அதிகளவு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. பணிச் சுமை மற்றும் அதனுடன் தொடர்புடைய மன அழுத்ததின் விளைவாக உடல் நல பாதிப்பு, வல்லுனர்களின் தூக்கமின்மை, தனிமை, தூக்கக் கோளாறு மற்றும் மன அழுத்தத்தினால் பாதிப்படைகின்றனர். இது மட்டும் இன்றி இவர்களிடம் அதிகளவு விரக்தியையும் ஏற்படுத்துகின்றது. அதே நேரம் இவர்கள் தமது குடும்பத்தில இருந்து பிரிந்திருக்க வேண்டிய கட்டாயமும் காணப்படுகின்றது. இது மேலும் இவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

Covid 19 தாக்கம்2 Covid-19 தாக்கம்: விளிம்பு நிலை சமூகத் தோற்றம்இது தவிர கூலித்தொழிலாளர்கள் அதிக பாதிப்பினை எதிர்கொள்பவர்களாகக் காணப்படுகின்றனர். சாதாரணமான நாட்களிலே கூலி வேலைக்கு சென்றால் மாத்திரமே ஒரு வேளை உணவு உண்ணக்கூடியதாக இருப்பவர்கள் கொரோனா தொற்றின் போதான ஊரடங்கு காலத்தில் அந்த ஒரு வேளை உணவினையும் கூட பெற்றுக்கொள்ள முடிவதில்லை. இவ்வாறான குடும்பங்களை சேர்ந்த பாடசாலை செல்லும் மாணவர்களினாலும் இக் குடும்பத்தவர்களினாலும் சுகாதார நடைமுறைகளை சரிவர பின்பற்ற முடியாது போவதுடன் ஆரோக்கியம் சார்ந்த சவால்கள், ஆரோக்கியமான உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமை, அதிகரித்த வறுமை, இறப்பு போன்ற பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்கின்ற நிலையில் இவர்கள் சமூகரீதியாக விளிம்பு நிலைக்கு பெரிதளவில் தள்ளப்படுகின்றனர். இவர்களுக்காக அரசினால் வளங்கப்படுகின்ற கொடுப்பனவுகளும் சரிவர கிடைக்கப்பெறாது போகின்ற போது உடல், உள, சமூக, பொருளாதார ரீதியாக பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

இந்த அடிப்படையில் ஒட்டுமொத்தமாக பார்வையிடுகின்ற போது சமூக மட்டத்தில் ஒவ்வொரு பிரிவினரையும் Covid -19 தாக்கம் என்பது விளிம்பு நிலைக்கு தள்ளியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad Covid-19 தாக்கம்: விளிம்பு நிலை சமூகத் தோற்றம்