இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- வரும் நாட்கள் மேலும் ஆபத்தாக மாறலாம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதன் காரணமாக, எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கதாக மாறியுள்ளதென சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த மாதங்களில் மந்த நிலையில் காணப்பட்ட கொரோனா தொற்று, சில நாட்களாக வேகமாகப் பரவி வருகின்றது. இதன் காரணமாக இது வரையில் சுமார் பத்தாயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தும் நியைங்கள், கொரோனா சிகிச்சை மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் 19 பேர் வரையில் உயிரிழந்தும் உள்ளனர்.

இதையடுத்து நாடு முழுவதும் கடுமையான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பினராலும் எச்சரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த வைத்தியர் ஜயருவன் பண்டார, கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், வரும் நாட்களில் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளதோடு, தற்போது செயலிழந்து காணப்படும் பி.சி. ஆர் பரிசோதனை இயந்திரத்தை மீண்டும் செயற்படுத்துவதற்காகச் சீன விசேட வல்லுநர்கள் இன்று இலங்கை வரவுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தல் என்பது சிறை வாழ்க்கை அல்ல என்றும் அது இந்த சமூகத்தின் நலனைக் கருத் திற்கொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு விசேட செய் முறையெனவும்  அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதையடுத்து “நாட்டின் கொரோனா வைரஸ் நிலவரம் நம்பிக்கை தரும் விதத்தில் இல்லை” என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் பல நோயாளிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர் சங்க தலைவர் உபுல் ரோகண, கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த கரிசனைகள் உருவாகியுள்ளன என தெரிவித்துள்ளார்.

ஆனால் பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரம் ஒன்று பழுதாகியுள்ள நிலையில், கொழும்பு மாநகரசபைக்குள் பலர் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர்களை சோதனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பது கடினமாக காணப்படுகின்றது, குறிப்பாக மக்கள் நெரிசலாக வாழும் பகுதிகளில் இந்த நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் போதியளவு ஆய்வு கூட வசதிகள் இன்மையால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

போதியளவு ஆய்வு கூட வசதிகள் இல்லாததன் காரணமாக கொரோனா நோயாளிகள் என சந்தேகிக்கப்பட்ட பத்தாயிரம் பேரிடமிருந்து சேகரிக்கப்பட்ட பிசிஆர் மாதிரிகளை சோதனைக்குட்படுத்தி வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு மருத்துவமனைகள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளதால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன என்றும் கூறப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்குடன், நாடு முழுவதும் 117 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அவர்  தெரிவித்துள்ளார்.

அதன் படி கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும், குருணாகல் மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவுக்கு முன்னர் ஊரடங்கு சட்டம் அமுலி லிருந்த 68 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய பொலிஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட காலத்தில் அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோரைத் தவிர வேறு யாரும் மேல் மாகாணத்திற்குள் நுழையவோ வெளியேறவோ அனுமதிக்க மாட்டார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல, ஊடகங்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையில்,“கொரோனாவின் முதல் அலை நாட்டில் உருவானபோது அதைத் தோற்கடிக்க ஊடகங்கள் அதிக ஆதரவு வழங்கியது. அதே போல இம்முறையும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. எனவே அதிகபட்ச பங்களிப்பை ஊடகங்கள் வழங்க வேண்டும்”  என்றுள்ளார்.