கோவிட்-19 உம் புலம்பெயர் வாழ்வில் உளநலமும் – ஜெயந்திரன்

”உடல் நோய்களுக்கான பரிகாரங்களை நாம் உடனடியாகவே தேடிக் கொள்கின்றோம். ஆனால் அதுபோல உளரீதியான பிரச்சினைகளுக்கான பரிகாரங்களை நாங்கள் தேடிக் கொள்வதில்லை.இதன் விளைவுகளை மனதை உருக்கும்,மனதை உலுக்கும் சம்பவங்களாக இன்று எமது சமூகத்தில் காண்கிறோம்.”

இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு மலர்ந்த போது, இந்த ஆண்டு எப்படியெல்லாம் அமையப் போகின்றது என்று எங்களையே நாங்கள் பல கேள்விகள் கேட்டிருப்போம். ஆனால் அது இப்படித்தான் இருக்கும் என்று எங்களில் யாருமே கனவு கூடக் கண்டிருக்க மாட்டோம்.

வருடத்தின் ஆரம்பத்தில் சீனாவில் கொரோனா  நுண்ணுயிரியின் பரவல் பற்றி நாம் அறிந்த போதும் அது நாம் வாழும் நாடுகளுக்கெல்லாம் வந்து, எமது அன்றாட வாழ்வையே கேள்விக்குறிக்குள்ளாக்கும் என்று நாங்கள் யாருமே நினைத்திருக்க மாட்டோம்.

கடந்த ஆறு மாதங்களில் கொரோனா நுண்ணுயிரி இல்லாத நாடே இல்லை என்று சொல்லுமளவுக்கு இந்த நுண்ணுயிரியினால் தோற்றுவிக்கப்படும் கோவிட்-19 என்ற நோயின் தாக்கம் உலகம் முழுவதையும் பாதித்திருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் கோவிட்-19 இன் தாக்கம் அமெரிக்க, தென் அமெரிக்க நாடுகளிலும் இந்தியா போன்ற நாடுகளிலும் அதிகமாக இருப்பதை செய்திகள் மூலமாக நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

தாயகத்திலும், புலம் பெயர்ந்து நாம் வாழும் பல நாடுகளிலும், கோவிட்-19 இன் தாக்கம் கணிசமான அளவு குறைந்திருக்கின்ற போதிலும், இந்த நுண்ணுயிரி எம் எல்லோரதும் நாளாந்த வாழ்வையே புரட்டிப் போட்டிருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

ஒரு புறம் இந்த நுண்ணுயிரியினால் ஏற்படுத்தப்படும் நோயிலிருந்து எம்மைப் பாதுகாக்க சமூக விலகல், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற செயற்பாடுகளிலே எம்மில் பலர் மிகவும் விழிப்பாக இருக்கின்ற போதிலும், இந்த நுண்ணுயிரி உருவாக்கியிருக்கும் இப்புதிய சூழலில் எமது உளநலத்தை எப்படிப் பேணிப் பாதுகாக்கலாம் என்பதைச் சிந்திக்க நாங்கள் பொதுவாகவே தவறி விடுகிறோம்.

கோவிட்-19 இன் தாக்கத்தினால் நாம் அனைவரும் எமது வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. எம்மால் வெளியே செல்ல முடியவில்லை. வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல முடியவில்லை. எமது வழமையான சமூகக் கொண்டாட்டங்களையோ, நிகழ்வுகளையோ நடத்த எம்மால் முடியவில்லை. எம்மிலே பலர் எமது தொழில்களை வீடுகளுக்குள் இருந்தே செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கிறோம்.

மாணவர்களும் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்க முடியவில்லை. இணையத்தின் துணையோடு கல்வி கற்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறுவர்களைப் பொறுத்தவரையில் பாடசாலையில் அவர்களுக்கு பல்வேறுவிதமான செற்பாடுகள் இருந்தன.GettyImages 1208350497 கோவிட்-19 உம் புலம்பெயர் வாழ்வில் உளநலமும் - ஜெயந்திரன்

விளையாடக்கூடிய வாய்ப்பு அங்கே அவர்களுக்கு இருந்தது. ஏனைய மாணவர்களுடன் கலந்துரையாடிக் கல்வி கற்க அவர்களால் முடிந்தது. ஆனால் கோவிட்-19 எல்லாவற்றையும் மாற்றியமைத்து விட்டது. கணினிக்கு முன் பல மணித்தியாலங்களை மாணவர்கள் செலவழிக்க வேண்டிய சூழலை இந்த நோய் உருவாக்கி விட்டது.

கோவிட்-19 இலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள சமூக விலகலைக் கடைப்பிடிக்குமாறு நாம் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றோம். இந்த நோயிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள இந்த சமூக விலகல் அத்தியாவசியமானதாகும். ஆனால் அதே நேரத்தில் இந்த சமூக விலகலின் காரணமாக எமது வழமையான உறவுகளையும் தொடர்புகளையும் பேண முடியாத ஒரு நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இவை அனைத்தையும் உற்றுநோக்கும் போது, கோவிட்-19 இனால் தோற்றுவிக்கப்பட்ட இந்த சமகாலச் சூழல், எமது உளநலனை அதிகமாகப் பாதித்திருப்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

குறிப்பாக நாள் முழுவதும் சிறுபிள்ளைகளுடன் வீட்டுக்குள்ளேயே தங்கள் நேரத்தைச் செலவிடும் தாய்மாரின் உணர்வுச் சூழல் புரிந்து கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். எனவே ஒருபுறம் கோவிட்-19 இன் தொற்றுக்கு நாம் ஆளாகி விடாது நாம் மிகவும் விழிப்பாக இருக்கும் அதே வேளையில், இந்த நுண்ணுயிரியினால் உருவாக்கப்பட்டிருக்கும் இப்புதிய சூழலினால் அதிகமாகப் பாதிக்கப்படக்கூடிய எமது உளநலனையும் நாம் பாதுகாத்துப் பேண வேண்டும் என்ற விழிப்புணர்வும் எம்மிடையே உருவாக வேண்டும்.

இன்று பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் நாங்கள் புலம் பெயர்ந்து உலகின் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களில் அதிகமானோர் 1983ம் ஆண்டுக்குப் பின்னரான காலப் பகுதியிலேயே மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருக்கின்றோம்.

அப்படியென்றால் எம்மில் பலர் ஏற்கனவே போரின் பல்வேறு உடலியல், உளவியல் தாக்கங்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றோம். எமக்கு ஏற்பட்ட உடலியல் பாதிப்புகளுக்கு எம்மில் பலர் நாம் ஏற்கனவே சிகிச்சை பெற்றிருக்கின்றோம். ஆனால் எமக்கு ஏற்பட்ட உளவியல் ரீதியிலான பாதிப்புகளுக்கு எம்மிலே எத்தனை பேர் உரிய சிகிச்சை பெற்றிருக்கின்றோம் என்பது நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு விடயமாக இருக்கின்றது.

ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தைச் சார்ந்த நாங்கள், தற்போதைய கோவிட்-19 என்ற இப்புதிய நோயினால் உருவாக்கப்பட்டிருக்கும் இப்புதிய அசாதாரணமான சூழலின் காரணத்தால் இன்னும் அதிகமாகவே உளரீதியாகப் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகெங்கும் வாழும் பல்வேறுபட்ட சமூகங்களை நாம் ஆய்ந்து பார்க்கும் போது, எல்லா மக்கள் நடுவிலும் உளப்பாதிப்புகள் தொடர்பாகவும் உளநோய்கள் தொடர்பாகவும் தமக்கு இருக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்குப் பின்னிற்கும் இயல்பு வியாபித்திருப்பதைக் காண முடிகின்றது. இதற்குக் காரணம் உளநோய்க்கு உள்ளாகுவோர் ‘உளநோயாளிகள’; என முத்திரை குத்தப்படுவதே ஆகும்.téléchargement 1 கோவிட்-19 உம் புலம்பெயர் வாழ்வில் உளநலமும் - ஜெயந்திரன்

எமது சமூகத்திலும் எமக்கிருக்கும் உளப் பிரச்சினைகள் பற்றியும் உளநோய்கள் பற்றியும் நாம் வெளிப்படுத்த தயங்கும் இயல்பு பரவலாகக் காணப்படுகின்றது. உளநோய்களுக்கு உள்ளாகி விட்டால், அவனோ, அவளோ சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பதாக நாம் எண்ணிக் கொள்வதே இதற்கான அடிப்படைக் காரணமாகும் குறிப்பாக எமது குடும்பத்திலே யாராவது உளரீதியான பாதிப்புகளையோ அன்றேல் உளநோய்க்கான அறிகுறிகளையே வெளிப்படுத்தும் போது எமது குடும்ப மதிப்புக் கருதி குறிப்பிட்ட அப்பிரச்சினைகளுக்கான நிவாரணங்களை உடனடியாகப் பெற்று அவற்றின் தாக்கங்களிலிருந்து விடுபடவோ அல்லது மற்றவர்களை விடுவிக்கவோ நாம் முயற்சிப்பதில்லை.

உடல் நோய்களுக்கான பரிகாரங்களை நாம் உடனடியாகவே தேடிக் கொள்கின்றோம். அது எங்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சினையாக அமைவதில்லை. ஆனால் அதே வேகத்தில் உளரீதியான பிரச்சினைகளுக்கான பரிகாரங்களை நாங்கள் தேடிக் கொள்வதில்லை. இன்று உலகில் உளநோய்கள் பற்றிய அறிவு மிக அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. பல உளநோய்களுக்கு செயற்றிறன் மிக்க சிகிச்சை முறைகளும் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கின்றன.

எமக்கு உடல் ரீதியான நோய்கள் ஏற்படுகின்ற போது அவற்றுக்கான சிறந்த சிகிச்சையைப் பெறுவதற்கு நாம் முயற்சி எடுக்கின்றோம். அது போலவே உளநோய்களையும் நாம் கருத வேண்டும்.

எமது சமூகம் உளநோயாளிகளை தாழ்வாகப் பார்க்கும் பார்வையிலிருந்து கட்டாயம் வெளியே வரவேண்டும். உளரீதியான பாதிப்புகளுக்கும் நோய்களுக்கும் விரைவாக சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள நாம் முன்வர வேண்டும். அதுமட்டுமன்றி எமது குடும்பத்தில் அல்லது சமூகத்தில் உளத்தாக்கங்களோடு வாழ்பவர்களை நாம் இனங்காணும் போது, உரிய சிகிச்சையை விரைவாகப் பெறுவதற்கு அவர்களுக்கு நாங்கள் வழிகாட்ட வேண்டும்.

அன்றாடம் நாம் சந்திக்கும் அனுபவங்களின் காரணமாக பல்வேறுபட்ட உணர்வுகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் அனுபவிக்கும் இந்த உணர்வுகள் கணத்துக்குக் கணம் மாற்றம் அடைந்து கொண்டிருக்கின்றன.

இந்த உணர்வுகளில் கோபம், கவலை, பயம், ஏமாற்றம் போன்ற உணர்வுகள் எம்மை ஆழமாகப் பாதிக்கக் கூடியவை. எமது உளநலனை நாம் நன்கு பேண வேண்டும் என்றால் எமக்கு அவ்வப்போது ஏற்படும் உணர்வுகளுக்கான சரியான வடிகால்களை நாம் அமைக்க வேண்டும்.

எம்மைப் பாதிக்கும் உணர்வுகள் பற்றி மனம் திறந்து நாம் நம்பக் கூடியவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். எமது உணர்வுகள் பற்றி நாம் அடுத்தவர்களுடன் மனம் திறந்து உரையாட வேண்டும்.M Id 264684 friends கோவிட்-19 உம் புலம்பெயர் வாழ்வில் உளநலமும் - ஜெயந்திரன்

எம்மைத் தொடர்ந்து பாதித்துக் கொண்டிருக்கும் உணர்வுகள் பற்றி நாம் மனம் திறந்து உரையாடாது, அவற்றை நாம் உள்ளத்தில் ஆழப் புதைக்கும் பழக்கத்தை கைக்கொள்வோமானால், எங்கள் ஆழ்மனத்தில் புதைக்கப்படும் அந்த உணர்வுகள் ஒன்று சேர்ந்து எரிமலை திடீரென்று வெடிப்பது போல, எம்மை அறியாமலே ஒருநாள் வெளிவரும். கட்டுப்படுத்தப்படும் அந்த உணர்வுகள் திடீரென வெளிவரும் போது அது எமக்கும், எம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துபவையாக அமைந்து விடும்.

ஆகவே தற்போதைய கோவிட்-19க்குப் பின்னரான சூழலில் எமது உடல் நலனை மட்டுமல்ல எமது உளநலத்தையும் பேணிப் பாதுகாக்க நாம் முன்வர வேண்டும். எமது உள்ளத்துக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் விடயங்களில் எம்மை நாம் ஈடுபடுத்துவது அவசியமானது.

நீண்ட நேரம் வேலை செய்த பின் ஒரு நடைப் பயணத்தை மேற்கொள்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வைக் கொடுப்பதாக அமையும். உளஇறுக்கத்தை விடுத்து உளம் திறந்து பேசும் பழக்கத்தை நாம் கைக்கொள்ள வேண்டும்.

இக்காலத்தில் சமூக விலகல் அவசியமானது.ஆனால் அது உணர்வு ரீதியிலான விலகலைத் தோற்றுவிக்கக் கூடாது.

இப்புதிய சூழலில் எமது குடும்பத்திலோ அதற்கு வெளியிலோ அடுத்தவர்களின் உணர்வுகளை நாம் புரிந்து அதற்கேற்றவாறு நடக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எம்மையும் அடுத்தவர்களையும் துல்லியமாகப் புரிந்து கொள்வதும், எமது உணர்வுகள் மட்டில் விழிப்பாக இருந்து அவற்றை வெளிப்படுத்த உரிய வழிமுறைகளைத் தேர்வு செய்வதும் உளநோய்களுக்கு உள்ளாகும் போது உளவளத்துணை மற்றும் உளமருத்துவர்களின் உதவியை உரிய நேரத்தில் நாடுவதும் எமது உளநலனைப் பேணுவதற்கு இக்காலத்தில் நாம் கைக்கொள்ள வேண்டிய செயற்பாடுகளாகும்.