COVID – 19 தொற்றுக்குப் பின்னான உலக ஒழுங்கும் தாராளமய உலக ஒழுங்கின் வீழ்ச்சியும்

420 Views

கடந்த  கட்டுரைத்  தொடரில்  உலகளாவிய  ஆசியாவை  நோக்கிய  வலுப்பெயர்ச்சியைக்  குறித்தும்,  அதன் விளைவுகளையும்,  சீனாவின்  பெரும்  வளர்ச்சியையும்  அதன்  கராணமாக  அமெரிக்காவுக்கு  போட்டியாக வளர்ந்துள்ள  உலகளாவிய     பல்துருவ  உலக  ஒழுங்கையும்  குறித்து  அவதானித்திருந்தோம்.  இக்கட்டுரை ஏற்கனவே  மாற்றம்  பெற்றுவரும்  சர்வதேச  அரசியலில்  ஏற்பட்டுவரும்  இந்நிலமைகளை COVID – 19  தொற்றுநோய்  எவ்வாறு  வேகப்படுத்தியுள்ளது  என்பதனையும்,  அது  சர்வதேச  உறவுகளில் ஏற்படுத்தியுள்ள  தாக்கங்ளையும்  ஆராய்கிறது.

COVID – 19  தொற்றுநோய்  உலகை  உலுக்கிய  1923  முதல்  1939  வரை  நீடித்த  பெரும்  பொருளாதார சீர்குலைவு  (Great depression)  மற்றும்  உலகப்  போருக்குப்  பின்னர்  நிகழ்ந்த  சர்வதேச  அரசியலில்  பெரும் தாக்கங்களை  ஏற்படுத்திய  ஓர்  உலகளாவிய  நிகழ்வாக  கருதப்படுகிறது.           குறைந்தது  4.8  மில்லியன்  மக்கள் ஆறு  மாதங்களுக்குள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  300,000இற்கும்  அதிகமானோர்  இறந்துவிட்டனர்,  மேலும் பயனுள்ள  தடுப்பூசிகள்  அல்லது  சிகிச்சைகள்  இறுதியில்  உருவாக்கப்பட்டாலும்,  இன்னும்  பல  இறப்புகள் தொடர்ந்துகொண்டுள்ளன.  உலக  பொருளாதாரம்  நெருக்கடிகளை  சந்தித்து  மந்தநிலையில்  உள்ளது.  கடன் அளவு  உயர்ந்து  வருகிறது,  எதிர்கால  வளர்ச்சி  வாய்ப்புகள்  குறைவடையத் தொடங்கியுள்ளன.  இது  சில வழிகளில்  மனித  வரலாற்றில்  முதன்  முறையாக  ஓர்  முழுமையான  உலகளாவிய  நெருக்கடியாக அமைந்துள்ளது.

நீண்ட  ஆழமான  விளைவுகள்  இருந்தபோதிலும்,  தற்போதைய  தொற்றுநோய்  உலக  அரசியலின் அடிப்படைத் தன்மைகளை  மாற்றப் போவதில்லை.  அதாவது  பிராந்திய  அரசுகளே  தொடர்ந்தும்  சர்வதேச விவகாரங்களில்  முக்கியமாகவிருக்கும்  அதேவேளை  தேசியவாதம்  ஒரு  சக்தி வாய்ந்த  அரசியல்  சக்தியாக மாற்றம்  பெற்றுள்ளது.  ஆனால்  COVID – 19  முன்னர்  நடந்து  கொண்டிருந்த  பிளவுப்  போக்குகளை  வலுப்படுத்த அதிக  வாய்ப்புகளை  ஏற்படுத்தியுள்ளன.  குறிப்பாக,  இது  உலகமயமாக்கலில்  இருந்து  பின்வாங்குவதை வேகப்படுத்தியுள்ளதுடன், சர்வதேச  வர்த்தகம்,  முதலீடு  மற்றும்  பயணங்கள்  ஆகியவற்றுக்குப்  புதிய தடைகளை  ஏற்படுத்தியுள்ளன.      மேலும்  ஜனநாயக  மற்றும்  ஜனநாயகமற்ற  அரசாங்கங்களுக்கு  அவர்களின் குடிமக்களின்  வாழ்க்கையில்  தமது  அதிகாரங்களை  மிகையாகப்  பிரயோகிக்கும்  சூழலையும்  ஏற்படுத்தியுள்ளது.

சுருக்கமாக  கூறுவதானால்  COVID – 19 இற்குப்  பிந்தைய  உலகம்  தாராளவாதத்  தன்மை  குறைந்த, அரசுக்ளுக்கிடையிலும்  பிராந்திய  சக்திகளுக்கிடையிலும்  நெருக்கடியையும்  போட்டித் தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

பனிப்போருக்குப்  பின்னாக  தமது  பொருளாதார  அரசியல்  நலன்களின்  அடிப்படையில்  உலகளாவிய தாராளமய  ஒழுங்கை  (liberal world order) உருவாக்குவதற்காக,  ஜனநாயகம்,  திறந்த  சந்தைகள்,  சட்ட  ஆட்சி  (Rule of law)  மற்றும்  பிற  தாராளவாத  விழுமியங்களைப்  பரப்புவதற்கான  ஒரு  தொடர்ச்சியான முயற்சியை  அமெரிக்கா  வழிநடத்தியது.  அமெரிக்கத்  தலைவர்கள்.  இத்தாராளவாதமானது  சீனா  மற்றும்  பிற ஐனநாயகமற்ற  நாடுகளை  மேலும்  தாராளமய  ஐனநாயகத்தின்  பக்கம்  செல்வதற்கு  ஊக்குவிக்கும்  என மேற்குலகமும்  அமெரிக்காவும்  நம்பினர்.  இந்த  பார்வை  1994  இல்  உலக  வர்த்தக  அமைப்பை  (World Trade Organistion WTO)  உருவாக  ஊக்கமளித்ததுடன்  வட  அமெரிக்க  சுதந்திர  வர்த்தக  ஒப்பந்தம்,  நேட்டோ விரிவாக்கம்  மற்றும்  ஐக்கிய  அமெரிக்காவின்  தலைமையிலான  பிற  பாதுகாப்பு  ஏற்பாடுகள்  போன்ற  பலதரப்பு வர்த்தக  ஒப்பந்தங்கள்  மற்றும்  நிதி  விதிமுறைகளை  குறைப்பதற்கும்  வெளிநாடுகளில்  முதலீட்டை எளிதாக்குவதற்கும்  பல  முயற்சிகளை  மேற்கொண்டன.  இதன்  தொடர்ச்சியாகவே  ஐரோப்பிய  ஒன்றியத்தின் விரிவாக்கத்தையும்  1999  இல்  யூரோவையும்  பார்க்க  முடியும்.  இந்த  புதிய  உலகமயமாக்கப்பட்டு  உலகில், பெரும்  அதிகார  வலுப்  போட்டிகள்  மற்றும்  பழைய  கடந்தகால  வெறுப்புகள்  வரலாற்றின்  குப்பைத் தொட்டியுள்  எறியப்பட்டு விட்டதாகவும்  உலகெங்கிலும்  உள்ள  மக்கள்  தமது  செல்வத்தைப் பெருக்குவதிலேயே  கவனம்  செலுத்துவார்கள்  என்றும்  எதிர்பார்க்கப்பட்டது.

எனினும்  எதிர்பார்த்ததற்கு  மாறாக  உலகமயமாக்கலின்  குறைகள்  ஏற்றத்தாழ்வுகள்  கொரோனா  வைரஸ் தோன்றுவதற்கு  நீண்ட  காலத்திற்கு  முன்பே  அதி  உச்ச  உலகமயமாக்கலுக்கு  (hyper globalisation)  எதிரான ஒரு  பின்னடைவு  நடந்து  கொண்டிருந்தது.  2008  நிதி  நெருக்கடி  அதிக  நிதி  ஒருங்கிணைப்பின்  அபாயங்களை காட்டியதுடன்  வளர்ந்த  நாடுகளில்  சமத்துவமின்மை  தொடர்ந்து  அதிகரித்து  வந்தது.  சிலவற்றில் தொடர்ச்சியான  வேலை  இழப்புகள்  மற்றும்  சமூக  பொருளாதார  சமத்துவமின்மை  போன்றவற்றால் அமெரிக்காவிலும்,  ஐரோப்பாவிலும்  கீழ்  மற்றும்  நடுத்தர  வர்க்கங்கள்  அதிக  நன்மைகளை  நீண்டகாலப் போக்கில்  பெறவில்லை.         இந்  நிகழ்வுகள்  சனத் திரள்  தேசியவாத  அலைகளை  பல  நாடுகளில்  தூண்டி உதவியதுடன்  2016  இல்  ஐரோப்பிய  ஒன்றியத்தை  விட்டு  வெளியேறிய  பிரிட்டனின்  முடிவு  மற்றும் அமெரிக்காவில்  டொனால்ட் டிரம்ப்  தேர்ந்தெடுக்கப்பட்டதன்  மூலம்  உச்சக்கட்டத்தை  அடைந்தது.  டிரம்ப் பதினொரு  நாடுகளுடன்  ஒபாமா  அரசால்  மேற்கொள்ளப்பட்டு  வர்த்தக  கூட்டான டிரான்ஸ்-பசிபிக் உடன்படிக்கையை  விட்டு  (Trans pacific partnership) தனது  மூன்றாம்  நாளில்  வெளியேறினார்.                COVID – 19   இற்கு  முன்பே,  இந்த  முயற்சிகள்  அமெரிக்காவையும்,  சீனாவையும்  தங்கள்  இறுக்கமாக  இணைக்கப்பட்டு பொருளாதாரங்களை  ‘துண்டிக்க’  தொடங்க  வழிவகுத்தன.  இன்று  உலகமயமாக்கல் முடிவடையவில்லையாயினும்  கடுமையான  நெருக்கடிகளுக்கு  முகங்கொடுத்து  நிற்கின்றது.

COVID – 19   இற்கு  முன்பே  உருவாகிவிட்ட தேசியவாதம்  மீளவும்  எழுச்சியுற்றதுடன்  வளர்ந்து  வரும்  பெரும் அதிகாரப்  போட்டியும்  உலகமயமாக்கத்தை  மோசமான  நிலைக்குத்  தள்ளியுள்ளது.  அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும்  இடையிலான  அதிகரித்துவரும்  போட்டியில்  இந்த  போக்கு  மிகவும்  தெளிவாகத்  தெரிந்தது. மேலும்  இது  ஐரோப்பிய  ஒன்றியத்தை  விட்டு  வெளியேறுவதற்கான  பிரிட்டனின்  முடிவும்  ரஷ்யாவிற்கும் மேற்கிற்கும்  இடையிலான  உறவுகள்  மோசமடைந்து  வருகின்றமையும்  இன்றுள்ள  தாராளவாதப்  போக்குக்கு எதிரான  அலைகளாகப்  பார்க்க  முடியும்.  தாராளமய  ஒழுங்கின்  அங்கமான  அரசுகளுக்கிடையிலான உறவுகளை  வழிநடத்தும்  விதிகள்,  விதிமுறைகள்  மற்றும்  அவர்களால்  உருவாக்கப்பட்ட  நிறுவனங்கள் (western institutions)  பரவலாக  நெருக்கடிகளை  சந்தித்துள்ளன.  தற்போது  முக்கிய  சர்வதேச சக்திகளிடையேயான  போட்டிகளால்  அதிகார  சமநிலை  மாற்றம்  பெற்று  இத்தாராளவாத  ஒழுங்கினை கேள்விக்குட்படுத்தியுள்ளன.

COVID – 19   இற்கு  பிந்தைய  உலக  ஒழுங்கினை  வரையறுக்கும்  விடயம்  அமெரிக்காவிற்கும்   சீனாவிற்கும்  இடையே  ஒரு  கடுமையான  போட்டியாக  இருக்கும்.  சர்வதேச  அமைப்பில்  மிகவும் சக்திவாய்ந்த  இரண்டு  சக்திகளாக  அமெரிக்காவின்  தாராளமய  ஜனநாயகத்திற்கும்  சீனாவின்  ஒரு  கட்சி அரசிற்கும்  இடையிலான  வெளிப்படையான  வேறுபாடுகள்  இரு  நாடுகளிலும்  மத்தியில்  சந்தேகங்களை அதிகரித்துள்ளன.  மேலும்,  அவர்களின்  பரந்த  மூலோபாய  நோக்கங்களும்  முரண்படுகின்றன.  யூரேசியாவில் (Eurasia) அதிகார  சமநிலையைப்  பாதுகாப்பதற்கான  அதன்  நீண்டகால  உறுதிப்பாட்டுக்கு  இணங்க, அமெரிக்கா  ஆசியாவில்  சீனா  ஒரு ‘பிராந்திய  மேலாதிக்கமாக’  மாறாமல்  பார்த்துக்  கொள்ள  முயற்சிக்கும் சீனாவின்  அதிகாரத்தையும்  செல்வாக்கையும்  எதிர்கொள்வதற்கு  அமெரிக்கா  ஏனைய  பகுதிகளுக்கு  குறிப்பாக மேற்கு  அரைக்கோளத்தில்  ஜப்பான்,  இந்தியா,  தென்  கொரியா,  சிங்கப்பூர்,  அவுஸ்திரேலியா  மற்றும்  பல  ஆசிய  சக்திகளுடன்  நெருக்கமான  பாதுகாப்பு  உறவுகளைப்  பேண  முயற்சிக்கின்றது.

இதன்  விளைவாக  சீன  அமெரிக்கப்  போட்டியானது  வலு,  செல்வாக்கு  மற்றும்  பாதுகாப்பிற்கான  தீவிரமான போட்டியாக  இருக்கும்,  இது  உலகளாவிய  ஒத்துழைப்பின்  (global cooperation)  நோக்கத்திலும் நடைமுறையிலும்  குறிப்பிடத்தக்க  வரையறைகளை  ஏற்படுத்தியுள்ளன.  இது  மேலும்  பிராந்திய  மற்றும் அல்லது  கருத்தியல்  வழிகளில்  பிரிக்கப்பட்ட  உலகளாவிய  ஒழுங்கிற்கு  வழிவகுக்கிறது.

இவ்வாறானதோர்  சூழலில்,  ஐரோப்பா  அதன்  தொடர்ச்சியாக  அதன்  உள்  அரசியல்  பொருளாதாரப் பிரச்சினைகளால்  பாதிக்கப்பட  வாய்ப்புள்ளது.  மெதுவான  பொருளாதார  வளர்ச்சி,  விரைவாக  வயதான  மற்றும் சுருங்கி  வரும்  மக்கள்  தொகை,  ஜனநாயகத்திற்கான  அர்ப்பணிப்பு  கேள்விக்குரிய  தீவிர வலதுசாரி  இயக்கங்களின்  தொடர்ச்சியான  வளர்ச்சிப்  போக்கு  இதற்கு  சிறந்த  உதாரணங்களாக அமந்துள்ளன.  “பொதுவான  வெளிநாட்டு  மற்றும்  பாதுகாப்பு”  கொள்கையின்  (Common foreign and security policy) சாத்தியமான  வளர்ச்சியைத்  தவிர்த்து,  ஐரோப்பிய  ஒன்றியம்  உலக  விவகாரங்களில்  அதன் செல்வாக்கு  குறைந்து  வருவதால்  எதிர்காலத்தில்  அதன்  தாக்கம்  குறைந்து  செல்வதற்கான  சாத்தியங்களே உள்ளன.

ஆனால்  சீன-அமெரிக்க  போட்டி  தீவிரமடைந்தால்,  ஐரோப்பிய  நாடுகள்  ஒரு  மோசமான  தேர்வை எதிர்கொள்ளும்.  அதாவது,  பெரும்பாலான  ஐரோப்பிய  நாடுகள்  இரு  முக்கிய  சக்திகளுக்கு  இடையிலான புவிசார்  அரசியல்  போட்டியில்  நடுநிலை  வகிக்கவோ  அல்லது  இரு  நாடுகளுடனும்  நெருக்கமான  பொருளாதார உறவுகளைப்  பேணும்  நிலைக்கோ  தள்ளப்படும்.  எனினும்  ஐரோப்பாவால்  அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும்  இடையிலான  போட்டியில்  நடுநிலை  வகிக்க  முடியாது.  மேலும்  அமெரிக்க  பாதுகாப்பை தொடர்ந்து  நம்பியிருக்கவும்  முடியாது.  சீன-அமெரிக்க  போட்டியின்  ஓரத்தில்  ஐரோப்பா  இருக்க முயற்சித்தால்,  அது  நேட்டோவின்  வீழ்ச்சியை  நோக்கி  இட்டுச்செல்லும்.  மேலும்  ஐரோப்பிய  நாடுகள்  தங்கள் சொந்த  பாதுகாப்புக்கான  முழுப்  பொறுப்பையும்  ஏற்க  வேண்டிய  கட்டாயத்திலும்  இன்று  உள்ளன.

இவ்வாறானதோர்  பூகோளப்  போட்டி  நிலையில்  ஐரோப்பா  சர்வதேச  விவகாரங்களில்  தனது வலுவினை  இழந்துகொண்டு  இருக்கும்  பின்னணியிலும்  சீன  அமெரிக்க  அதிகார  வலுப்  போட்டியை மையமாகக்  கொண்டு  இந்தோ  பசுபிக்  சமுத்திரத்தின்  பூகோள  அரசியல்  நிலமைகள் தீவிரமடைந்துள்ள  இந்நிலமையிலும் இலங்கைத்  தீவானது  இப்பூகோள  அரசியற்  போட்டியின்  தாக்கங்களுக்கு முகங்கொடுத்து  வருகின்றது.

வலுவிழந்து  செல்லும்  மேற்குலக  அரசியற்  பலம்  அவர்களினால்  தோற்றுவிக்கப்பட்டுள்ள  தாராளவாத மேற்குலக  ஒழுங்கு  கேள்விக்குள்ளாகியிருக்கும்  இவ்வேளையில்  தமழ்  மக்கள்  முழுமையாக  தமது அரசியற் செயற்பாடுகளை  மேற்குலகையும்  வலுவற்ற  ஐக்கிய  நாடுகளையும்  மையப்படுத்தி  மேற்கொள்வதானது ஆழமாக  சிந்திக்கப்பட வேண்டியதொன்றாக  அமைந்துள்ளது.  இதேவேளை  வலுச்சமநிலை  ஆசியாவை நோக்கிய  நகர்ந்திருக்கும்  இவ்வேளை  தமிழ்  மக்களின்  செயற்பாடுகளும்  இவ்வுலக  மாற்றங்களை கருத்திற்கொண்டு  தமது  எதிர்காலச்  செயற்பாடுகளை  ஆசியாவை  மையப்படுத்தியதாகவும்  அதேவேளை மேற்குலகுடனும்  சரியான  அணுகுமுறையுடனும்  கொண்டுசெல்ல  வேண்டிய  தருணத்தில்  உள்ளார்கள்.

கணநாதன்:

Master of International Relaitons,

Geneva School of Diplomacy and International Rleations

Leave a Reply