ஒற்றையாட்சி சிந்தனை தொடர்ந்தால் நாடு பூச்சியமாகவே மாற்றமடையும்; கஜேந்திரகுமார்

நாடு பூச்சியமாகவே மாற்றமடையும்
“புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கையில் முதலீடுகளை செய்ய தயாராகவே உள்ளன. அதனை சிந்தித்து சரியான மாற்று சிந்தனை உருவாகவில்லை என்றால், இலங்கையாக முன்னோக்கி பயணிக்க முடியாது” என எச்சரித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “ஒற்றையாட்சி சிந்தனை தொடர்ந்தால் நாடு பூச்சியமாகவே மாற்றமடையும்” எனவும் எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டிய அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கை ஒற்றையாட்சி, சிங்கள பெளத்த நாடு என்ற சிந்தனையில், ஏனைய இனத்தவரை எதிரியாக கருதும் மனநிலையில் ஆட்சியாளர்கள் இனியும் பயணிப்பார்களானால் ஒருபோதும் இலங்கை நாடாக மீள முடியாது. அதேவேளை யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்காக வடக்கு கிழக்கு பகுதிகளை கைவிட முடியாது. இந்த நாட்டில் ஏனைய பகுதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வடக்கு கிழக்கிற்கும் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக ஏனைய மாகாணங்களை விடவும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகம் கொடுக்க வேண்டும். 35 ஆண்டுகள் பின் தள்ளப்பட்ட நிலையிலே வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளன. யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்காக வடக்கு கிழக்கு பகுதிகளை நீங்கள் கைவிட முடியாது. சமமாக சகல பகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இப்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்திலும் வடக்கு கிழக்கு மாகாணங்களை அரசு கைவிடும் நிலைமையே உள்ளது.

வடக்கு கிழக்கில் பிரதான மூன்று பொருளாதார நிலைகள் உள்ளன. மீன்பிடி, விவசாயம் மற்றும் வர்த்தகம் சார்ந்ததாகும். மீன்பிடியை பொறுத்த வரையில் ஏனைய மாவட்ட மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடியில் ஈடுபடுவதுடன், தடை செய்யப்பட்ட மீன்பிடியை நடைமுறைகளைக் கையாண்டு எமது மீனவர்களின் உடைமைகளை அழித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியையும் கடற் படையினரால் தடுக்க முடியவில்லை. வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் தரப்பு தொடர்ச்சியாக இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் அரசாங்கம் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோல், விவசாயத்திற்கும் இதுவே இடம்பெற்றுள்ளது. எமது காணிகளை இராணுவம் ஆக்கிரமித்தது. இப்போது வனப் பாதுகாப்பு திணைக்களமும் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. திட்டமிட்ட வகையில் வடக்கின் இன பரம்பலை மாற்றியமைக்கும் சூழ்ச்சியை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதனை நாம் சுட்டிக்காட்டுகின்ற வேளையில் நாம் இனவாதிகள் என அடையாளப் படுத்தப்படுகின்றோம்.

அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி என்பவற்றை காரணம் காட்டி வடக்கு, கிழக்கிற்கு வெளியில் உள்ளவர்கள் எமது பகுதியில் பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இது மக்களின் சமநிலை தன்மையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. . ஆகவே எமது மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய இலங்கை என்ற கதைகள் இன்று கூறப்படுவதனை நாம் பார்க்கின்றோம். சுதந்திரத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசும் ஆட்சிக்கு வந்து நாட்டை வீழ்ச்சியின் பாதையிலேயே கொண்டு சென்றுள்ளது. சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த சகல அரசுகளும் உள்நாட்டு இனத்தை தமது எதிரிகள் என்றே அடையாளப்படுத்தி, வடக்கு கிழக்கு இந்த நாடு இல்லை என்ற உணர்வுடன், அவர்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையில் ஆட்சியை நடத்தியதன் விளைவாகவே இன்று நாடு வீழ்ச்சி கண்டுள்ளது. அதற்காக ஒதுக்கிய நிதி, இராணுவத்தை பலப்படுத்த எடுத்த நடவடிக்கையும் சர்வதேசத்திடம் கடன் பெற்று,சிங்கள பெளத்த நாடாக இதனை அடையாள படுத்த எடுத்த நகர்வுமே இந்த நெருக்கடி நிலைமைக்கு காரணம். மாறாக அனைத்திற்கும் கொவிட் வைரஸ் காரணம் என கூற முடியாது.

யுத்தம் முடி ந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலத்தில் அரசு கண்ட பலன் என்ன? உங்களுக்கு என்ன கிடைத்தது? விடுதலைப் புலிகளை அழித்ததில் உங்களுக்கு கிடைத்தது என்ன? மாறி மாறி ஆட்சி அமைத்தும் ஒவ்வொரு ஆண்டும் வீழ்ச்சியின் பக்கமே சென்றுகொண்டிருக்கின்றீர்கள். உங்களின் கடந்த காலத்தை சிந்திக்காது போனால், இனியும் இது ஐக்கிய இலங்கையாக இருக்காது. ஒற்றையாட்சி என்பதை சிந்தித்துக் கொண்டிருந்தால் நிலையில் நாடு பூச்சியமாகவே மாறும்.

இன்று புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கையில் முதலீடுகளை செய்ய தயாராகவே உள்ளன . அதனை சிந்தித்து சரியான மாற்று சிந்தனை உருவாகவில்லை என்றால், இலங்கையாக முன்னோக்கி பயணிக்க முடியாது. தமிழர்களை அழித்தீர்கள், இன்று முஸ்லிம்கள் இலக்காகியுள்ளனர். அடுத்ததாக உங்களின் சொந்த இனமே பலியாகும். அதுமட்டுமன்றி பூகோள அரசியல் நகர்வில் வல்லரசு நாடுகள் இலங்கையை கைவிட்டு செல்லும் நிலைஏற்பட்டால் அத்துடன் நாட்டின் கதை முடிந்துவிடும்.

74 ஆண்டுகால இலங்கையில் இன்று சிங்கள மக்களே நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை எண்ணி வெட்கப்பட வேண்டும் என்றார்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad ஒற்றையாட்சி சிந்தனை தொடர்ந்தால் நாடு பூச்சியமாகவே மாற்றமடையும்; கஜேந்திரகுமார்