கொரோனா அச்சுறுத்தல் – வடக்கு மக்களுக்கு அவசர வேண்டுகோள்

புங்குடுதீவு கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பயணித்த பேருந்து விபரம், பயணித்தோரை தொடர்புகொள்ள அவசர கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு வைரஸ் தொற்று உறுதியான மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய பயண ஒழுங்குகளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு புறக்கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு Ran Silu – WP ND 6500 என்ற பேருந்தில் பயணித்துள்ளார். அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஒக்.4) அதிகாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து NP ND 8790 இலக்கமுடைய Matha என்ற பேருந்தில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு புங்குடுதீவை காலை 7 மணிக்குச் சென்றடைந்துள்ளார்.

இந்தப் பெண் பயணம் செய்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் சமூக அக்கறை கொண்டு சுகாதாரத் துறையுடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே வடமாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.

மேலும் குறித்த பெண் பணிபுரிந்த மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் இது வரையில் 321 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.சிறி சற்குணராஜா தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடலில், கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனைகளை நெறிப்படுத்தும் வகையிலும், பீடாதிபதிகளை ஒருங்கிணக்கும் வகையிலும், யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர் எஸ். சுரேந்திரகுமாரன் செயற்படவுள்ளார் என்று துணைவேந்தர் தெரிவித்தார்.