கல்முனையில் கொரோனா தொற்றினால் இருவர் மரணம் : 81 பேருக்கு தொற்று

நேற்று கொரோனா தொற்றுகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று கொரோனா தொற்று நோயின் காரணமாக இருவர் மரணமாகியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தமையால் இறுக்கமான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டதுடன் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு கொரோனா தொற்று நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கடந்த 2021இறுதிக் காலப்பகுதியில் கல்முனைப் பிராந்தியம் இலங்கையில் மிகவும் பாதுகாப்பான பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் ,கடந்த இரண்டு வாரங்களுக்குள் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

இதுவரை எதுவித தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொள்ளாத 18 பேருக்கும் இரண்டு டோஸ்கள் தடுப்பூசியையும் ஏற்றிக்கொண்ட- 52 பேருக்கும் 1 டோஸ் மட்டும் ஏற்றிக்கொண்ட 9 பேருக்கும் 3 டோஸ்கள் ஏற்றிக் கொண்ட- 2 இருவருக்கும் என 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 22 கல்முனை வடக்கு சுகாதார வைத்திய பிரிவில் -10 காரைதீவு -10 சாய்ந்தமருது – 7 அக்கரைப்பற்று – 7 அட்டாளைச்சேனை -6 சம்மாந்துறை – 6 நிந்தவூர் -5 இறக்காமம் – 4 பொத்துவில் – 2 நாவிதன்வெளி -2 பேரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெற்றுக்குள்ளானவர்களுக்கு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை மற்றும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

16 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் பொதுமக்களுக்கான தடுப்பூசி பிராந்தியத்தில் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வந்ததுடன் பொதுமக்கள் சுகாதார சட்ட விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டு வந்தன.

பொது நிகழ்வுகளில் அதிகமானவர்கள் கலந்து கொள்வதும் முகக்கவசம் அணியாமல் அலட்சியம் செய்யும் நிலை என்பன அவதானிக்கப்பட்டு வந்த நிலையில் கல்முனைப் பிராந்தியத்தில் தற்போது இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளன.

மரணித்தவரில் ஒருவர் 58 வயதுடைய பெண்மணி சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பிரதேசத்தை சேர்ந்தவர். அடுத்தவர் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பிரிவைச் சேர்ந்த மாதவன் வீதியில் வசித்து வந்தவர் இவருக்கு 74 வயதாகும். இதில் மல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த பெண்மணி எதுவித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை. எனினும் கல்முனையை சேர்ந்தவர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர் இவர் கொவிட் நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

பொதுமக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும் அடுத்த மரணம் உங்கள் கதவுகளையும் தட்டும் எல்லோரும் ஒன்றிணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சுகாதார சட்ட விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும் எனவும் சுகாதார தரப்பினரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Tamil News