கருத்தரங்கில் பங்கேற்ற 21 பேருக்கு கொரோனா தொற்று; பலர் தனிமைப்படுத்தல்

CORONA TEST கருத்தரங்கில் பங்கேற்ற 21 பேருக்கு கொரோனா தொற்று; பலர் தனிமைப்படுத்தல்கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களம் சத்துருக் கொண்டானில் நடாத்திய விவசாய சேதனைப் பசளை தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட அரச அலுவலர்களில் பலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.

மேலும் கருத்தரங்கில் கலந்து கொண்ட பலர் அவரவர் வீடுகளில் தற்சமயம் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மட்டு.பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிருபைராஜா கிரிசுதனிடம் கேட்டபோது: கருத்தரங்கில் கலந்து கொண்டோரில் எனது பிரிவுக்குள் 21 அரச கள உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. அவர்களுக்கான சிகிச்சை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கருத்தரங்கில் ஆரையம்பதியைச் சேர்ந்த விவசாயத் திணைக்கள உதவிப் பணிப்பாளரொருவரும் நேற்றைய தினம் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானது உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த கள அலுவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏனையோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் எனது பகுதியில் அறுவர் இனங்காணப்பட்டுள்ளனர். ஏனைய பகுதிகளில் எத்தனைபேர் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர் என்பது பற்றி எனக்குத் தெரியாது என்றார்.

குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டவருக்கு காய்ச்சல் தலையிடி சளி பிரச்சினை காட்டியதால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. மொத்தமாக 60பேரளவில் தொற்றுக்கிலக்காகியிருக்கலாமெனக்கூறப்பட்டபோதிலும் அது நம்பகமாக ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய நீர்ப்பாசன கள அலுவலர்களுக்கான ஜந்துநாள் “ திரிசாற குருஷிசங்குருத்திய” விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்ட கருத்தரங்கு கடந்த 2ஆம் திகதி திங்கள் முதல் 6ஆம் திகதி வெள்ளிவரை நடைபெற்றது.

விவசாயத் திணைக்கள விவசாய போதனாசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நீர்ப்பாசனத் திணைக்கள களஅலுவலர்கள் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என 170பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த கருத்தரங்கு சத்துருக்கொண்டான் சர்வோதய கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது. கலந்துகொள்ள அழைக்கப்பட்ட 170கள அலுவலர்களும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரு வேறு மண்டபங்களில் நடாத்தப்பட்டன. அதில் ஒரு மண்டபம் குளிருட்டப்பட்டது. ஒரு மண்டபத்திற்கு விவசாய பிரதிப் பணிப்பாளர் வி.பேரின்பராஜாவும் மறுமண்டபத்திற்கு விவசாய அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் கே.ஜெகந்நாத்தும் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

முதல்நாள் நிகழ்வை கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா கலந்து கொண்டு ஆரம்பித்திருந்தார். நிறைவு நாளன்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-141-august-01-2021