Tamil News
Home செய்திகள் உச்சம் அடையும் கொரோனா தொற்று: நவுருத்தீவில் உணவு, குடித்தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் அகதிகள் 

உச்சம் அடையும் கொரோனா தொற்று: நவுருத்தீவில் உணவு, குடித்தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் அகதிகள் 

பசிபிக் தீவு நாடான நவுருத்தீவில் கொரோனா தொற்று உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அத்தீவில் உள்ள 40 சதவீத மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழல் காரணமாக உணவுப் பொருட்கள், குடித்தண்ணீர் விலை உயர்ந்துள்ளது. இதனால் அத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 112 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறைப்படுத்தப்பட்டிருக்கும் 112 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவுக்கு உடனடியாக கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை அவுஸ்திரேலிய அரசு செய்ய வேண்டும் என அவுஸ்திரேலியாவில் இயங்கும் தஞ்சக்கோரிக்கையாளர் வள மையம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, நவுருவில் உள்ள அகதிகளுக்கு மருத்துவ உதவி வழங்கும் சர்வதேச சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் (International Health and Medical Services) மற்றும் அவுஸ்திரேலிய எல்லைப் படைக்கு அகதிகள் நிலை தொடர்பாக தஞ்சக்கோரிக்கையாளர் வள மையம் அறிவுறுத்திய பொழுதும் அது தொடர்பாக எந்த பதிலையும் அவர்கள் கொடுக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை சிறை வைக்க உபயோகப்படுத்தப்பட்டு வரும் நவுருத்தீவின் பிராந்திய பரிசீலனை மையம் தொடர்ந்து செயல்படும் என அவுஸ்திரேலியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இம்மையம் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த குடிவரவுத் தடுப்பு முகாம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

“நவுருத்தீவில் கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு உள்ளது. எங்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. பாத்திரங்களை கழுவுவதற்கான தண்ணீரை குடித்துக் கொண்டிருக்கிறோம்,” என அத்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள ஓர் அகதி தெரிவித்திருக்கிறார்.

குடித்தண்ணீரை பொறுத்தமட்டில் நவுருத்தீவில் உள்ள மக்கள் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மழைநீர், நிலத்தடி நீர், மற்றும் பாட்டில் தண்ணீரை நம்பி உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக அகதிகளுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் தொடர்ந்து வரும் நிலையில், முகாம்களுக்கு வரும் குழாய் தண்ணீர் உப்புநீராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

நவுருவில் உள்ள 80 சதவீத நிலப்பரப்பு பாஸ்பேட் சுரங்கப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதால், அந்நாடு உணவுத் தேவைகளுக்கு வெளிநாடுகளைச் சார்ந்தே இருக்கிறது.

தற்போதைய சூழலில், நவுருத்தீவில் உள்ள 10,873 பேரில் 4107 பேர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version