கொரோனா – வவுனியாவில் தேங்கி கிடக்கும் சடலங்கள்

 கோவிட் காரணமாக மரணமடைந்த 22 உடலங்கள் தேங்கி உள்ளது

வவுனியாவில் கோவிட் காரணமாக மரணமடைந்த 22 உடலங்கள் தேங்கி உள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்

 

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ளதுடன், வவுனியாவில் இறப்புக்களும் அதிகரித்து வருகின்றது.

கொவிட் தொற்று காரணமாக மரணமடைபவர்களின் உடல்கள் சுகாதார நடைமுறைகளுடன் வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்திலேயே தகனம் செய்யப்பட்டு வருகின்றது.

குறித்த மின் மாயானமானது கடந்த நான்கு தினங்களாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதன் திருத்த வேலைக்குரியவர்கள் கொழும்பில் இருந்து வருவதனால் தாமதநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் திருத்த வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கொவிட் தொற்றால் மரணமடைந்த 4 பேரின் சடலங்கள் அடக்கம் செய்வதற்காக நேற்று ஒட்டமாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தவர்கள் உட்பட 22 பேரின் சடலங்கள் தற்போது தகனம் செய்யப்படாத நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று (17.09) இரண்டு சடலங்கள் தகனத்திற்காக ஹெக்கிராவ அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஏனைய சடலங்கள் தேக்க நிலையில் உள்ளன. மின் மாயானம் திருத்தப்பட்டாலும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 6 சடலங்களையே எரியூட்ட முடியும்.

குறித்த சடலங்களை முழுமையாக தகனம் செய்ய ஐந்து தினங்கள் தேவையாகவுள்ள நிலையில், தொடர்ந்தும் இறப்புக்கள் ஏற்பட்டால் தகனம் செய்வதில் மேலும் நெருக்கடி நிலை ஏற்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மாவட்டத்தின் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடன் கோவிட் தொற்றில் இருந்து விடுபட சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதுடன், அரசாங்கத்தினதும், சுகாதரப் பிரிவினரதும் கோவிட் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021