Tamil News
Home செய்திகள் இந்தியாவில் அகதிகளை முடக்கிய கொரோனா கட்டுப்பாடுகள்?

இந்தியாவில் அகதிகளை முடக்கிய கொரோனா கட்டுப்பாடுகள்?

அர்சோ அமிரி எனும் ஆப்கான் அகதி, அவரது கணவர், தாய், மற்றும் இரண்டு சகோதரிகளுக்கு ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் வாழ்வதற்கான விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா பெருந்தொற்று சூழலினால் ஆஸ்திரேலியாவை நோக்கிய அவர்களது பயணம் சாத்தியமற்றதாக உள்ளது. 

கடந்த டிசம்பர் 2010ல் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறிய அமிரி, இந்திய தலைநகர் புதுதில்லியில் தஞ்சமடைந்திருக்கிறார்.

இவர்கள் மார்ச் மாத இறுதியில் ஆஸ்திரேலியா பயணிக்க பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்திருந்த நிலையில், கொரோனாவால் பயணிக்க முடியாமல் முடங்கி போகியுள்ளனர்.

கடந்த மார்ச் மாத இறுதியில், கொரோனா கட்டுப்பாடுகளை விதித்த ஆஸ்திரேலிய அரசு, வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதியில்லை எனத் தடை விதித்தது. இந்த தடை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய விசா கொண்டிருக்கும் அகதிகளுக்கும் பொருந்தும் என்ற வகையில் அமிரி மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீண்டும் புதுதில்லியில் வாழ்க்கையைத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பயணம் ரத்தான நாளினை நினைவுக் கூர்ந்துள்ள அமிரி, எந்த வருமானமுமின்றி, எந்த முறையான சமையல் பொருட்களுமின்றி முடங்கிப் போகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக வீட்டிலிருந்த அனைத்தையும் விற்றுவிட்டு, துணிகளை பெட்டிகளில் அடுக்கிவிட்டோம். எனது கணவர் ராவிஷ் தனது வேலையில் இருந்தும் நின்றுவிட்டார். எனது இரண்டு இளைய சகோதரிகளும் பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டனர். மார்ச் 30ம் தேதி ஆஸ்திரேலியா செல்ல இருந்த நிலையில் எங்கள் பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன,” எனக் கூறியுள்ளார் அமிரி.

கருணை அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கும் முறையின் கீழ் இக்குடும்பம் விண்ணப்பத்த பொழுது, முதலில் அக்கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னர் பயண விலக்கை ஆஸ்திரேலிய உள்துறையினால் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களது பயண விலக்கு தொடர்பான விண்ணப்பம் தவறுதலாக மதிப்பீடு செய்யப்பட்டு விட்டதாக உள்துறை அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுதில்லியில் தங்கியிருக்கும் அக்குடும்பம், அருகாமையில் இருக்கும் தேவாலயத்தின் உதவியுடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகிறது.

எங்களிடம் பணமில்லை, உணவு இல்லை, தற்போதுள்ள வீட்டிலிருந்து வெளியேற வேண்டியுள்ளது எனக் கூறியிருக்கும் ஆப்கான் அகதி அமிரி, நிரந்தர விசாக்கள் கொண்ட தங்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சலின் கணக்குப்படி, மனிதாபிமான விசாக்கள் பெற்ற சுமார் 4,000 அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாமல் வெளிநாடுகளில் தவித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version