கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்

கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்
தெய்வேந்திரம் வஜிதா மூன்றாம் வருடம் இரண்டாம் அரையாண்டு, சமூகவியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

பகுதி 1

கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்: உலக அளவில் பல்வேறு சமூகங்கள் குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தாலும், பண்டைய காலந்தொட்டு பாரம்பரியமாக அதற்கெனத் தனிக் கோட்பாடுகளை பெருமளவில் வகுத்து, அதனைத் தொடர்ந்து காப்பாற்றி, கட்டுக் குலையாமல் காக்க இன்றும் நாம் முயற்சித்து வருகிறோம். சமூக அமைப்புகளின் செயற்பாடுகளில் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இருப்பினும் காலம் மாற மாற அதற்குத் தகுந்தாற் போன்று தன்னையும் திருத்தி சில மாற்றங்களைக் கண்டது. அந்த வகையில், 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட ஒன்றாக கூட்டுக் குடும்பங்கள் நல்ல முறையில் இயங்கி வந்தன. விஞ்ஞான பொருளாதார வளர்ச்சி, தொழிலுக்காக இடம் விட்டு இடம் செல்லுதல், சட்டம் மற்றும் பொது அறிவு என விரிவடைந்த பின் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து சிறு குடும்பங்களாக மாறி விட்டன.

அப்படி இருந்தால் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சி அபரிமிதமாக முன்னேறும் என்ற எண்ணமே அவர்களுடைய பிற்காலத்திய வாழ்க்கை பொருளாதாரத்தினால் நலிவடையாமல் இருக்கும் என்ற கருத்து நிலவியதால், இன்று இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு குழந்தையுடன் வாழ்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்ஆனால் அத்தகைய வசதியான வாழ்க்கை வாழ்ந்தும், அதுவே பின்னர் ஆடம்பர வாழ்க்கையாக மாறி, தேவையற்ற கடன் மற்றும் பொருளாதார நலிவுகளுக்கு உள்ளாவதைக் காண்கிறோம். சிறு குடும்பத்தினர் தங்கள் சொந்த உறவுகளிடமிருந்து தூரத்தில் வசிப்பது மட்டுமல்லாமல், தங்களது அண்டை வீட்டுக்காரர்களுடனும் சிலர் சில காரணங்களால் பழகுவதில்லை. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்ற முதுமொழிக்கேற்ப நமது உறவுகளிடம் சிறு குறைகள் கண்டு தனிக் குடும்பங்களாக பிரிந்தவர்கள் தாங்கள் வாழும் பகுதியிலும் அண்டை வீட்டாருடன் அறிமுகம் கூட இல்லாமல் சிலர் வாழ்ந்து வருகின்றனர்.

சமூகத்தில் குறையில்லா மனிதர்களைக் கண்டுபிடிப்பது கடினம். அதற்காக அனைவரையும் குறை உள்ளவர்களாகக் கருதுவதும் தவறு. அதற்கேற்றாற் போன்று அவர்களுடன் இணைந்து, சமூகத்தில் வாழ்ந்தால் நலம்.

அந்தக் காலத்தில் மலைக்கு சென்று தேன் எடுப்பது, விலங்குகளை வேட்டையாடுவது போன்ற செயற்பாடுகளில் “மலைக்குச் சென்றாலும் மைத்துனன் துணை தேவை” யென ஒரு பொன் மொழி இருந்தது. இரு குடும்பங்களுக்கு இடையில் பெண் கொடுத்தும், பெண் எடுப்பதும் வழக்கமாக இருந்தது. அந்த வகையில் கடலில் முத்துக் குளிக்க இருவர் சென்றால், இருவரும் அண்ணன் தம்பியாகச் செல்லாமல்  மைத்துனர்களாகத் தான் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் மற்றொருவர் தனது தங்கை வாழ்வை காப்பாற்ற முயற்சிப்பார் என்பதே அதனுடைய முக்கியத்துவம் ஆகும்.

கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்பழைய திரைப்படப் பாடல்களில் “அத்தைமடி மெத்தையடி ஆடி விளையாடமா!” மற்றும் “மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்” எனவும் மாமன் உறவுகளுடைய முக்கியத்துவத்தை விளக்கும் திரைப்படப் பாடல்கள் பல வெளியாயின. அதே போன்று அண்ணன் தம்பி உறவுமுறைகளை “முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒண்ணுக்கு ஒண்ணாக” போன்ற பாடல்களையும் கூறலாம்.

கணவன், மனைவி இருவரும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றுதல் மற்றும் குழந்தைகளும் கல்வி சம்பந்தமாகத் தொலை தூரங்களுக்குச் செல்வதால் கூடி வாழ வழியில்லாமல் போய் விடுகின்றது. பொதுநாள் விடுமுறை, பண்டிகை தினங்களிலோ அல்லது ஞாயிறு போன்ற நாட்களில் மட்டுமே ஒன்று கூட வாய்ப்பு ஏற்படுகிறது. இன்று பலர் சிறிய இடப்பரப்பினைக் கொண்ட வீடுகளில் வசித்து வருவதால், அவர்களுடைய வீட்டிற்கு வரும் நெருங்கிய உறவுகள் அரை மணிநேரமோ அல்லது ஒரு சிற்றுண்டியை முடித்துவிட்டு அங்கு தங்காமல் சென்று விடுகின்றனர். இன்றைய குழந்தைகளுக்கு நெருங்கிய உறவுகள் யார்; அவர்கள் என்ன உறவு என்பதனைக் கூட அறிய வாய்ப்பில்லை.

வயதான உறவுகளுக்கு எங்ஙனம் மரியாதைத் தர வேண்டும். நையாண்டி, நகைச்சுவை, பொறுப்பு ஆகியவைகள் பற்றி அறிய வாய்ப்பில்லாமல், பல குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில சிறு குடும்பங்களில் கணவன், மனைவி உறவுகளில் ஏற்பட்ட மனக்கசப்பினால் பிரிந்து தனியாக வாழும் குடும்பங்களும் இன்று உண்டு. அந்த மனக்கசப்பு குழந்தைகளின் மனங்களில் இளமையிலேயே மாறாத வடு. கூட்டுக் குடும்பங்களில் முதியவர்களின் அனுபவ பூர்வமான வழிகாட்டுதலும், இளம் கணவன் மனைவி உறவுகளில் சிறு விரிசல் ஏற்படும் போது உடனுக்குடன் அவை சரி செய்யப்பட்டு விடும். அதேபோன்று வேலைக்குச் செல்பவர்களின் குழந்தைகளை மற்ற உறவுகள் சுழற்சி முறையில் கவனித்தும் பிற தேவையற்ற, அந்நிய கெட்ட நபர்களின் பழக்கத்திலிருந்து பல வகையில் காப்பாற்றி விடலாம்.

கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்கூட்டுக் குடும்பங்கள் மீது மிக முக்கியமான குற்றச்சாட்டாக ஒரு சிலர் மட்டும் பொருள் ஈட்டி, உழைத்து பலர் சோம்பேறித்தனமாக பலனை அடைவார்கள் என்று கூறப்படுவ துண்டு. பொருள் ஈட்டும் நபர்களின் குழந்தைகளும் பொருள் ஈட்டாதவர் குழந்தைகளும் ஒரே மாதிரியான வசதி வாய்ப்புகளுடன் வளர்க்கப்படுவர். அதற்கு உழைப்பவர்கள் எதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு வாதம் வைக்கப்படும். அத்தகைய குடும்பங்கள் மிகத் தொலைவான தூரத்தில் தனிக் குடும்பமாக வாழாமல் தங்கள் உறவினர்கள் வாழும் பகுதியிலேயே அமைத்தால் நல்லது. மேலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்கள் குடும்ப உறவுகளின் இன்ப துன்ப நிகழ்வுகளில் தன் முழு குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சற்று கூடுதல் நேரம் செலவழிப்பது உறவை பலப்படுத்தக் கூடியதாக அமையும்.

நவீன விஞ்ஞான வளர்ச்சியில் தொலைத் தொடர்பு வசதிகள் வாயிலாக உறவினை சிலர் தொடர முயற்சித்தாலும், நேரடியாகச் சந்தித்து உணர்வுகளை பகிர்ந்து மகிழ்வதற்கு இணையாக இருக்க வாய்ப்பில்லை. சிலர் தங்களது வளர்ப்பு பிராணிகளிடம் காட்டும் அன்பைக் கூட தங்கள் நெருங்கிய உறவுகளிடம் செலவு செய்வதில்லை என்ற ஒரு கூற்றும் நிலவுகிறது. இது மிகக் கொடுமை. குடும்ப உறவுகளின் தொடர்பு அறுந்து விடாமல் இருக்க வாரத்திற்கொரு முறையோ, மாதத்திற்கொரு முறையோ அவர்களை நேரடியாகச் சந்தித்து, நலம் விசாரித்தால் உறவுகள் கண்டிப்பாக பலப்படும்.

தம்முடைய பூர்வீகப் பகுதி மற்றும் முன்னோர் கொண்டாடிய திருவிழாக்கள் ஆகியவற்றிற்கு ஆண்டிற்கொரு முறையாவது அழைத்துச் சென்று காட்டினால் மேலும் நலம் பயக்கும். ஆண்டுக்கொரு முறை கோடை வாசஸ்தலங்களை சுற்றுலா அழைத்துச் செல்வது போன்று தங்கள் பூர்வீகத்தைக் காட்ட ஒரு ’பூர்வீகச் சுற்றுலா’ என சென்று வருவதும் நல்லது. கல்வியிலும், நவநாகரிகத்திலும் முன்னேறிய நாம் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற பொன் மொழியை ஏனோ மறந்து விடுகிறோம். எங்கோ இருக்கும் ஏழைகளுக்கு உதவ நினைக்கும் நாம், நமது பூர்வீகத்தில் அன்புக்கும், ஆலோசனைக்கும் இதர உதவிகளுக்கும் ஏங்கும் நாம் நம் நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு உதவுதலும் ஒரு மிகச் சிறந்த அருட்பணியேயாகும்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப் பட்டுள்ள முடக்க நிலையில், வீடுகளில் இடம்பெறும் குடும்ப முரண்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட 150 இற்கும் மேற்பட்டவர்கள், கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி யிருந்தன. இது இலங்கையில் மட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் பெரும் பிரச்சினையாகவும் உள்ளது. பொதுவாகவே வீட்டு வன்முறைகளில் அதிகம் பாதிக்கப் படுவது பெண்களே. சாதாரணமாக மூன்றில் ஒருவர் தமக்கு நெருங்கியவரால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை வெளியிட் டுள்ளது.  இந்த கொரோனா தொற்றின் பின்னர் அது அபரிமிதமாக கூடியுள்ளதாக கூறப்படுகிறது. காவல் துறையினருக்கும் சுகாதார துறையினருக்கும் கிடைத்த தகவல்களை வைத்து பார்க்கும்போது, இந்த அதிகரிப்பை அறிய முடிந்த ததாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்றின் மூன்றாம் அலை

இலங்கை தற்போது கொரோனா தொற்றின் மூன்றாம் அலைக்குள் சிக்கித் தவிக்கின்றது. அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள பயணத்தடை, வீட்டில் இருத்தல், போன்ற கட்டுப்பாடுகளுக்கு மக்கள் முகம்கொடுத்தே ஆக வேண்டும். எனினும் நீண்டதொரு காலகட்டத்திற்கு இந்தக் கட்டுப்பாடுகள் தொடருமானால், குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றக்கூடும். கொரோனாவின் பக்கவிளைவாக இந்த பாதிப்புகள் அமையும். வீட்டில் நோயாளர்கள் இருக்கலாம். குழந்தைகளை முழுநேரம் வீட்டில் வைத்து கவனித்தல், பொருளாதார நிலைமைகள் ஏற்ற இறக்கம், முற்றிலும் ஒரு புதிய சூழலை எதிர்கொள்ளல், பரீட்சயமற்ற விடயங்களுக்கு முகம்கொடுத்து மீளல், தொற்றுநோய் என்பன மனநல சேவைகளுக்கான தேவையை அதிகரித்து வருகிறது. இறப்பு, தனிமைப்படுத்தல், வருமான இழப்பு மற்றும் பயம் ஆகியவை மனநல நிலைமைகளைத் தூண்டுகின்றன அல்லது ஏற்கனவே உள்ளவற்றை அதிகரிக்கின்றன. பலர் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு, தூக்கமின்மை மற்றும் பதட்டம் ஆகியவற்றை எதிர்கொண்டவர்களாக இருக்கலாம்.

குடும்ப வன்முறைகள்

மேலுள்ள செய்தியில் குடும்ப வன்முறைகள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 150 பேரில் 112 பேர் ஆண்கள் என்பது ஒரு கவனத்தை ஈர்க்கும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது. அதில் 42 பேர் பெண்கள். குடும்பத் தகராறு காரணமாக ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்திருந்தன. இவ்வாறு சில சந்தர்ப்பங்களில் பெண்களைவிட பாதிப்புக்குள்ளாகின்றவர்கள் ஆண்களாகவும் உள்ளனர். இதற்கு ‘தன் மனைவியுடன் சண்டையிடும் கணவன் அவளைத் தாக்க முற்படும்போது வளர்ந்த பிள்ளைகள், தமது அம்மாவை காற்பாற்ற அப்பாவை தாக்குகின்றனர். என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.’ எவ்வாறக இருந்தாலும் குடும்பத்தினுள் பிணக்கு அதிகரித்து செல்வது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

தொடரும்…

ilakku-weekly-epaper-141-august-01-2021