Home ஆய்வுகள் COP-26 சூழல் பாதுகாப்பு மாநாடும் தமிழர்களும் – வேல் தர்மா

COP-26 சூழல் பாதுகாப்பு மாநாடும் தமிழர்களும் – வேல் தர்மா

343 Views

வேல் தர்மா

COP-26 சூழல் பாதுகாப்பு மாநாடும் தமிழர்களும்: 2021-ம் ஆண்டு சீனாவிலும் சில மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இனிவரும் காலங்களில் உலகெங்கும் நடக்கும் இயற்கை அனர்த்தங்களின் கடுமை அதிகரித்துக் கொண்டு போகும் என்பதை உணர்த்தின. அதற்கான காரணம் சூழலை மாசுபடுத்தும் வளிம வெளியேற்றங்களால் (Gas Emission) புவிவெப்பமாதல் அதிகரிப்பதே எனவும் கருதப்படுகின்றது.

பைங்குடில் விளைவு (Greenhouse Effect)

புவிவெப்பமாதலால் வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள பனிப்பாறைகள் உருகி உலகெங்கும் கடல் மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புண்டு. இவற்றைத் தடுப்பதற்கு கைத்தொழில் புரட்சிக்கு முந்தைய உலக வெப்பநிலைக்கு புவியின் வெப்பத்தைக் குறைக்க வேண்டும். கைத்தொழில் புரட்சிக்குப் பின்னர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரியமில வளிமம் (CO2) புவியைச் சுற்றிவர ஒரு நிறைந்து புவியின் வெப்பம் வளிமண்டலத்தில் பரவுவதை தடுக்கின்றது. இதை பைங்குடில் விளைவு (Greenhouse Effect) என்பர். பைங்குடிலின் கண்ணாடிக் கூரை கதிர்வீச்சு மூலம் வெப்பத்தை குடிலுக்குள் வரவிடும் ஆனால் கடத்தல் மூலம் வெப்பத்தை வெளியேற அனுமதிக்காது. இங்கு கண்ணாடி குடிசைக்கு செய்வதை புவிக்கு கரியமில வளிமம் செய்கின்றது.

பாதிப்பு உள்ளாகும் தமிழினம்

இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் கரையோரப் பகுதிகளில் பெருமளவு தமிழர்கள் வசிப்பதால் கடல் மட்ட உயர்வு அவர்களின் நிலப்பரப்புக்கள் %கடலுக்கும் அமிழும் அச்சம் உண்டு. மழை, புயல், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் இனிக் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடும். ஏற்கனவே பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் தமிழினம் பாரிய அழிவுகளைச் சந்தித்துள்ளது. உலகின் செல்வம் மிக்க நாடுகள் தங்களது உட்கட்டுமானங்கள், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படாத வகையில் பல பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்கின்றன.

COP-26 + COP-21 தரப்புக்களின் மாநாடு (Conference of Parties – COP) ஆண்டு தோறும் ஐநா சபையால் ஒழுங்கு செய்யப்படும் மாநாடு ஆகும். 2021இல் ஐக்கிய இராச்சியத்தின் கிளாஸ்க்கோ நகரில் 26-ம் மாநாடு நடைபெற்றதால் அது COP-26எனப் பெயரிடப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பரிஸில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற COP-21 மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு உலகம் வெப்பமயமாதலை இரண்டு பாகைகளால் குறைப்பது இலட்சியம்; இரண்டரைப் பாகையால் குறைப்பது நிச்சயம் என எல்லா நாடுகளும் இணைந்து எடுத்த முடிவு பிரபலமானது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய திட்டங்களுடன் ஒன்று கூடி  புவிவெப்பமடைவதையும் அதற்கு காரணமான மாசுபடுத்தும் வளிம வெளியேற்றத்தை (Gas Emission) தடுக்கும் செயற்பாடுகளை நிறைவேற்றுவதாயும் பாரிஸில் நடந்த COP-21 மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. பரிஸில் எடுக்கப்பட்ட முடிவுகளடங்கிய ஒரு சட்டக்கோவையும் (Paris Rulebook) உருவாக்கப்பட்டது. டொனல்ட் டிரம்பின் ஆட்சியில் இருந்த அமெரிக்கா பரிஸ் உடன்பாட்டை ஏற்க மறுத்தது. டிரம்பை அதிபர் தேர்தலில் வெல்ல வைத்தவர்கள் நிலக்கரி இருக்கும் பிரதேசத்தைச் சேந்த மக்கள். என்பதால் டிரம் அந்த முடிவை எடுத்தார்.

புவி வெப்பமாகுதல் சிறிதளவு அதிகரித்தாலும் அதனால் பல உயிரிழப்புக்களும் வாழ்வாதார இழப்புக்களும் ஏற்படும்.

COP-26 மாநாடு

  1. காலப்போக்கில் நிலக்கரிப் பாவனையை இல்லாமற் செய்தல்
  2. காடழித்தலைத் தடுத்தல்
  3. மின்சாரத்தில் இயங்கும் வண்டிகளுக்கு மாறுவதைத் துரிதப்படுத்தல்
  4. புதுப்பிக்கத்தக்க எரிபொருள் உற்பத்தியில் முதலீட்டை அதிகரித்தல்
  5. சூழ்மண்டல (Ecosystem) பாதுகாப்பும் பராமரிப்பும்
  6. உயிரிழப்புக்களையும் வாழ்வாதார அழிப்புக்களையும் தடுக்கும் எச்சரிக்கை முறைமையை உருவாக்குதல்
  7. சூழல் பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீடு செய்தல். வறிய நாடுகளில் பசுமை எரிபொருள் உற்பத்திக்கு உதவி செய்ய 10.5 பில்லியன் டொலர் பெறுமதியான நிதியம் உருவாக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. அமெரிக்கா 500மில்லியன் டொலர் பெறுமதியான பசுமை முறி (Green Bond) பெறுவதற்கு உதவி செய்வதாக அறிவித்தது.

தயக்கம் காட்டும் இந்தியாவும், சீனாவும், அமெரிக்காவும்

2050-ம் ஆண்டிற்கு முன்னர் நிலக்கரிப்பாவனையை முற்றாக ஒழிப்பது அவசியம் என இருக்கையில், இந்தியா தனக்கு 2070வரை அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்தது. உலகிலேயே அதிக அளவு கரியமில வளிமத்தை வெளியேற்றும் நாடு சீனாவாகும். சீனா வலுத்தேவையில் 72மூ நிலக்கரி எரிப்பில் இருந்து பெறுகின்றது. உலகிலேயே முதலாவது பெரிய நிலக்கரி இருப்பு அமெரிக்காவிலும், இரண்டாவது பெரிய இருப்பு இரசியாவிலும், மூன்றாவது பெரிய இருப்பு ஒஸ்ரேலியாவிலும், நான்கவது பெரிய நிலக்கரி இருப்பு சீனாவிலும், ஐந்தாவது பெரிய நிலக்கரி இருப்பு இந்தியாவிலும் உள்ளன. அந்த நாடுகளுக்கு நிலக்கரியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது மலிவாக உள்ளது. அதனால் 2050 கால எல்லையை அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் ஏற்க மறுக்கின்றன. பல விமானங்களில் ஏறு பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்த அரசத் தலைவர்களும் பசுமைப் போராளிகளும் பெருமளவு கரியமில வளிமத்தை வெளிவிட்டு சூழலை மாசு படுத்திவிட்டு சூழல் மாசுபடுவது தொடர்பாக மாநாடு நடத்தி அதற்கு ஒரு கால எல்லையை முடிவு செய்து அவர்களே அந்த கால எல்லையை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.

தமிழர்களின் எதிர்ப்பு

ஸ்கொட்லாந்தின் தலைநகர் கிளாஸ்கோவில் நடந்த COP-26 மாநாட்டிற்கு தமிழர்கள் இனக்கொலையாளி எனக் கருதும் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச அவர்களும் சென்றிருந்தார். இலங்கையில் பல காடுகளை அழித்தவர் என்பதாலும், இனக்கொலைக் குற்றவாளி எனக் கருதப்படுவதாலும் அவருக்கு எதிராக ஆயிரக் கணக்கான தமிழர்கள் மாநாடு நடக்கும் மண்டபம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் தங்கள் வழமையான ஆர்ப்பாட்டத்துடன் ஊடக விளம்பரம், இலத்திரனியல் பதாகைகள் என புதிய ஆர்ப்பாட்ட வடிவத்தை உருவாக்கினர். பிரித்தானிய தமிழினச் செயற்பாட்டாளர்கள் தமது ஏற்பாடுகளை வழமை போல் மிகச் சிறப்பாக ஏற்படுத்தியிருந்தனர். பெருந்தொற்று நோயையும் கருத்தில் கொள்ளாமல், ஆயிரக்கணக்கான தமிழர்கள் 414மைல்கள் தூரம் தூக்கமின்றி பயணித்து ராஜபக்சவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச பிரித்தானியா வரும் போதெல்லாம் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவர் கலந்து கொள்ளவிருந்த இரு நிகழ்ச்சிகள் இரத்துச் செய்யப்பட்டன. அவர் பற்றிய பல குற்றச்சாட்டுகளை தமிழர்கள் பிரித்தானிய அரசியல்வாதிகளிடம் பலதடவைகள் சமர்ப்பித்திருந்தனர். அதற்கு கைமாறாக பிரித்தானிய அரசியல்வாதிகள் மஹிந்த ராஜபக்சவை பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் தலைமைப் பதவியில் அவரை அமர்த்தி அலங்கரித்தது. கோத்தபாய ராஜபக்சவிற்கு அமைதிக்கான நோபல் பரிசைக் கொடுப்பார்களா?

2 COMMENTS

  1. […] COP-26 சூழல் பாதுகாப்பு மாநாடும் தமிழர்களும்: 2021-ம் ஆண்டு சீனாவிலும் சில மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இனிவரும் காலங்களில் உலகெங்கும் நடக்கும் இயற்கை  […]

Leave a Reply

Exit mobile version