அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மோசமான தேசத்துரோகம்: சம்பிக்க குற்றச்சாட்டு

அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்

“கெரவலப்பிட்டி ‘யுகதனவி’ மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை வழங்குவது தொடர்பில், அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை கைச்சாத்திடப்பட்டிருக்கும் ஒப்பந்தமானது மிக மோசமான தேசத்துரோக செயற்பாடாகும். இதனால் எமது நாடு அமெரிக்காவின் மின்சார மாபியாவுக்கு பலியாக நேரிடும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது நாட்டின் மின்வழங்கல் துறையை பிறருக்குக் கையளிப்பதற்கும் அத்துறையை முழுமையாக சீர்குலைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்திருப்பதன் விளைவாகவே மின்சார சபை ஊழியர்களும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மோசமான தேசத்துரோகம்.

கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக அவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டுள்ளனர். எனவே, இதற்கு ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசும் பொறுப்புக்கூற வேண்டும்.

இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில், இதுவொரு வெளிநாட்டு முதலீடு என்று கூறப்படுகின்றது. ஆனால், அதில் எவ்வித உண்மையும் இல்லை. மாறாக இதன்விளைவாக எமது நாட்டுக்கு சொந்தமான நிதி வெளிநாடொன்றின் வசமாகப்போகின்றது.

‘யுகதனவி’ மின்னுற்பத்தி நிலையமானது, ரூபாயில் செலுத்தவேண்டிய ஒரு தொகுதி கடன்களையும் டொலர்களில் செலுத்த வேண்டிய பிறிதொரு தொகுதி கடன்களையும் கொண்டிருக்கின்றது.

அதன்படி டொலர்களில் செலுத்தவேண்டிய கடன்தொகை அடுத்த வருட ஆரம்பத்துடன் முடிவடையும். அதன்பின்னர் ரூபாயில் செலுத்தவேண்டிய கடன் மாத்திரமே எஞ்சியிருக்கும். எனவே, உண்மையில் ‘யுகதனவி’ மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் மூலம் எதனைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது?”