எல்லை நிர்ணயம் என்ற பெயரில் இன விகிதாசாரத்தை மாற்ற சதி; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

எல்லை நிர்ணயம் என்ற பெயரில்
அநுராதபுரத்தின் எல்லைப்பகுதியில் இருக்கக் கூடிய கிராமங்களை வவுனியா வடக்கு பிரதேச சபைகளுடன் இணைத்து எல்லை நிர்ணயம் என்ற பெயரில் சிங்கள மக்களை வவுனியா மாவட்டத்தில் கூட்டி இந்த மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க ஸ்ரீலங்கா அரசால் சதி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். வவுனியா வடக்கில் இன விகி தாசரத்தை மாற்றியமைக்கும் வகையில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“வவுனியாவில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் சதி முயற்சிகள் தொடர்பில் எமக்குத் தெரியவந்த நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்திருந்தோம். அந்த நவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், அவசரமாக அமைச்சரை சந்திக்க வேண்டும் எனவும் அதில் கேட்டிருந்தோம்.

நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளும் அந்தக்கடிதத்தில் கையயாப்பம் இட்டார்கள். அதற்கமைய சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கியிருந்தும் கூட, கடைசி நேரத்தில் அந்தச் சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டு இதுவரை அந்தச் சந்திப்புக்குரியநேரம், நாள் ஒதுக்கப்படாது அரசு நழுவிப்போகின்றது. இதனால் நாங்கள் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றோம்.

தமிழ்ப் பிரதேசங்களை சிங்களமய மாக்கல் என்ற ரீதியில் இந்த நடவடிக்கை மட்டுமல்ல, மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைக் காணிகளை அபகரித்து சிங்கள எல்லைக் பிரதேசங்கள் மற்றும் பொலனறுவை மாவட்டம் என்பவற்றுடன் சேர்த்துக்கொள்ளும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. ஆகவே, திட்டமிட்ட வகையில் எல்லாக் கோணங்களிலும் தமிழர்களை நசுக்கி தமிழர்கள் தொடர்ந்தும் இந்தத் தீவில் ஒரு தேசமாக வாழ முடியாத நிலையை உருவாக்கும் நோக்கத்துடன் அதாவது ஓர் இனவழிப்பு செய்யும் நோக்கோடு ஸ்ரீலங்கா அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்த யதார்த்தத்தை உலகுக்குச் சுட்டிக்காட்ட வேண்டி ஒரு நிலையில் நாம்இருக்கின்றோம். இந்தப் போராட்டத்தைநடத்துவதன் மூலம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் நாடுகளின் தலைமைகளுக்கும் இந்த விட யத்தைத் தெளிவாகப் பதிவு செய்யவிரும்புகின்றோம்” என்றார்.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad எல்லை நிர்ணயம் என்ற பெயரில் இன விகிதாசாரத்தை மாற்ற சதி; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு