Home ஆய்வுகள் மனிதத்துவத்தையும் பாதுகாப்பான அமைதியையும் பேணும் கருவிகளாக மனச்சாட்சியும் விளையாட்டும் உடல்நலமும் | சூ.யோ.பற்றிமாகரன்

மனிதத்துவத்தையும் பாதுகாப்பான அமைதியையும் பேணும் கருவிகளாக மனச்சாட்சியும் விளையாட்டும் உடல்நலமும் | சூ.யோ.பற்றிமாகரன்

மனச்சாட்சியும் விளையாட்டும்

மனச்சாட்சியும் விளையாட்டும் உடல்நலமும்

  • 2019 முதல் ஏப்ரல் 5ம் நாள் உலக மனச்சாட்சி நாள்
  • ஏப்ரல் 6 உலகின் அமைதி வளர்ச்சிக்கு விளையாட்டுகள் நாள்
  • ஏப்ரல் 7 “எமது பூமியே எமது உடல்நலமெனும்” உலக உடல்நல நாள்

அமைதிக்கான பண்பாடு மனிதாய அன்பினதும் மனச்சாட்சியினதும் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலே பாதுகாப்பான அமைதியான மனிதவாழ்வு என்பது நடைமுறைச் சாத்தியமாகும். இதனை வலியுறுத்தி 2019ம் ஆண்டு முதல் அனைத்து உலக நாடுகளின் மன்றம் ஏப்ரல் 5ம் நாளை அனைத்துலக மனச்சாட்சி நாளாகக் கொண்டாடி வருகிறது. மனச்சாட்சி என்பது தனிமனிதன் சார்ந்ததல்ல குடும்பத்தினால் சமூகத்தினால் சமயத்தினால் அல்லது நம்பிக்கைகளால் பகிரப்படும் அறிவு மூலமாக உருவாக்கப்படும் மனித நடத்தையைக் கொண்டு நடாத்தும் மனவாற்றல். மனச்சாட்சியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ‘கொன்சன்ஸ்’ என்பதன் மூலமான இலத்தீன் சொல்லான ‘கொன்சின்டியா’ என்பதன் பொருள் அறிவு என்பதாக உள்ளது.

இதனால் அறிவு பகிரப்படும் பொழுது உருவாவது மனச்சாட்சி என்பது தெளிவாகிறது.  பகிரப்படும் அறிவு மனிதாயத்தை அன்பை முதன்மைப்படுத்தாது, மேலாதிக்க உணர்வுகளையும் சுரண்டல் ஒடுக்கல் மனநிலைகளையும் வளர்க்குமானால், மனிதாயம் இல்லாத மனச்சாட்சியில் விடுதலை என்பது என்றுமே உணரப்பட முடியாத ஒன்றாகி, அடிமைத்தனம் அல்லது அடக்குமுறையே மனச்சாட்சியாக மாறிவிடும். இதனாலேயே மனச்சாட்சி என்பது உருவாக்கப்படுவது என்ற உண்மையை அறிவூட்டி, சரியான முறையில் மனிதாயத்தையும் மனித அன்பையும் வளர்ப்பதற்கான சுதந்திரமான பேச்சும் எழுத்தும் அனுமதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் நாளே இந்த உலக மனச்சாட்சி நாள். இந்த மனச்சாட்சி நாளின் புரிதலில்தான் உலகின் பாதுகாப்பான அமைதி என்பது தங்கியுள்ளது என்பதால், இந்நாள் உலகின் முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.

“போர் மனித மனங்களில் தொடங்கப்படுவது என்பதால் அமைதிக்கான பாதுகாப்பும் மனித மனங்களில் கட்டியெழுப்பப்படல் வேண்டும்” என்பது அனைத்துலக நாடுகளின் மன்றத்தின் உறுதியான எண்ணமாக உள்ளது. ஈழத்தில் சிங்கள பௌத்த மேலாண்மை என்கிற போர் மனநிலை சிங்களவர்களுக்கு மத்தியில் தொடங்கப்பட்டதாலேயே 1956 முதல் 2022 வரையான 66 ஆண்டு காலமாகச் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் தொடர்ச்சியாக ஈழத்தமிழினத்தை இனஅழிப்பால் இனங்காணக்கூடிய அச்சத்துக்குள்ளாக்கி அகதி வாழ்வுக்குட்படுத்தி, அவர்களின் தாயக மண்ணை படைபலம் மூலம் ஆக்கிரமித்து, அவர்களின் அரசியல் பணிவை கட்டாயப்படுத்தல் மூலம் பெறும் அரச கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சிங்கள இனத்திற்கான பாதுகாப்பு என்னும் போலியான சிங்கள மனச்சாட்சியை உருவாக்குவதன் மூலம் ஆட்சிப் படுத்தி வருகின்றனர்.

இதனாலேயே தமிழீழத் தேசத்தின் குரலொலி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அமைதிக்கான பண்பாட்டை உருவாக்குவதற்கான மனச்சாட்சியுள்ள மனநிலை வளர்ச்சி அடையும் வரை இடைக்கால நிர்வாகம் ஒன்று ஈழத்தமிழர்களின் தாயக மண்ணில் ஈழத்தமிழர்களுக்கு அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னரே நியாயமான அரசியல் தீர்வுகள் குறித்த பேச்சுவார்த்தை முயற்சிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்கிற கோரிக்கையை அனைத்துலக நாடுகளிடம் நோர்வே தலைமையிலான அமைதித்தீர்வு காணும் முயற்சிகளின் போது உலக நாடுகளிடமும், உலக அமைப்புக்களிடமும் அன்றைய சிறிலங்காவின் அரசத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்காவிடமும் முன்வைத்தார்.

இலங்கையில் வாழும் தேசஇனங்களாக இலங்கையில் காணப்பட்ட கண்டிய அரசு, கரையோர அரசு, யாழ்ப்பாண அரசு என்ற வரலாற்று மூலங்களின் அடிப்படையில் கண்டியச் சிங்களவர்கள், கரையோரச் சிங்களவர்கள், யாழ்ப்பாணத் தமிழர்கள் என்னும் முத்தரப்பட்ட தேசியத்தன்மை கொண்ட, தேசமக்களைக் கொண்ட நாடாக இலங்கையை,  1920களில் கார்ள் மார்க்கிசின் மூன்றாவது தலைமுறையினரிடம் இடதுசாரித்துவ உயர்கல்வியினை கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் படித்து இலங்கைக்குத் திரும்பியிருந்த இடதுசாரிச் சிந்தனையுடையவராக அன்று காணப்பட்ட சிங்களத் தலைவரான எஸ்.டபிள்யூ. ஆர். டீ பண்டாரநயாக்கா வரைவு செய்தார். கூடவே இந்த மூன்று தேச இனங்களுக்குமான நாட்டுச்சபைகள் அமைக்கப்பட்டு, அந்த அந்த தேச இனங்களின் தேசியத்தன்மைகளும் தாயகங்களின் நிலஉரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற கூட்டாட்சி முறையையும் முன்மொழிந்து ‘கண்டி நாட்டுச்சபை’ என்னும் கண்டியச் சிங்களவர்களுக்கான நிர்வாக அலகையும் உருவாக்கினார்.

இது சிங்களத் தலைமைகளுக்கு மத்தியிலும் இடைக்கால நிர்வாகப் பரவலாக்கல் முன்னெடுக்கப்பட்டு அமைதிக்கான பண்பாடு அரசியல் பண்பாடாக வளர்க்கப்பட்ட சூழ்நிலையில்தான் சிங்களத் தமிழ்த் தேசமக்களின் சமத்துவமான சகோதரத்துவமான சுதந்திரமான வாழ்வியல் என்பது நடைமுறைச்சாத்திமாகும். இன்று நாட்டின் எல்லா மக்களுடையதுமான வாழ்வியலே பட்டினி நிலையினை நோக்கி நகருகின்ற இன்றைய காலகட்டத்திலாவது மனிதாய அன்பினதும் மனச்சாட்சியினதும் அடிப்படையில் அமைதிக்கான பண்பாட்டு உருவாக்கம் இலங்கைத்தீவில் இடம்பெறுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது. இந்த மனநிலை மாற்றம் இலங்கை மக்களிடம் ஏற்படாதவரை பொருளாதாரப் பிரச்சினை தீராது என்பது மட்டுமல்ல சிங்கள தமிழ் தேசஇனங்களின் இறைமை இழப்பும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

மேலும் மனிதகுலத்தின் வரலாற்றுக்காலம் முதல் விளையாட்டுக்கள் உலக அமைதிக்கும் வளர்ச்சிக்குமான ஆற்றலுள்ள கருவியாகத் தொடர்ந்து வருகின்றன. விளையாட்டுக்கள் தனிமனித உள உடல் நலத்திற்கு மட்டுமல்ல, ஆண் பெண் ஒருமைப்பாடு சமூகங்களின் ஒன்றிணைப்பு ஏற்புடைமை என்பவற்றுக்கும் மிக முக்கியமானவைகளாக உள்ளன. அத்துடன் இயற்கையைப் பேணுதல், இயற்கை வளங்களைப் போற்றுதல் என்பதற்கும் விளையாட்டு மூலமான அறிவூட்டல் அவசியமானதாகிறது. வறுமையையும் பட்டினி நிலைமைகளையும் தொற்றுக்களையும் சூழலைப் பேணாது விட்டதன் மூலம் இன்றைய மனித வாழ்வின் மிகப்பெரிய பிரச்சினையாக எல்லா நாடுகளும் எல்லா மக்களும் அனுபவிக்கின்ற சமகாலத்தில் விளையாட்டின் மூலமாக காலநிலையைப் பேணுதலுக்கான போராட்டத்தில் விழிப்புணர்வு அறிவூட்டலை மனித உள்ளங்களில் வளர்த்து  அமைதியையும், வளர்ச்சிகளையும் வேகப்படுத்த அனைத்துலக நாடுகளின் அமைப்பு ஏப்ரல் 6ம் திகதியை அனைத்துலக அமைதிக்கான வளர்ச்சிக்கான விளையாட்டுக்கள் நாளாக முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாகப் போரால் உடல்வலுவிழந்து வாழ்பவர்களுக்கு அவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கான வசதிகளை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலமே அவர்களுக்கு தங்களாலும் மனித மதிப்புடன் வாழ முடியும் என்கிற நம்பிக்கையை அளிக்க உலகு கடமைப்பட்டுள்ளது. இதனை புலம்பெயர் தமிழர்கள் மனதிருத்த வேண்டியது அவர்களின் இனத்துவக் கடமையாக உள்ளது. உடல் வலுவிழந்தவர்களுக்கான ஒலிம்பிக்கில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களை வெற்றிபெற வைக்கப் புலம்பெயர் தமிழர்களால் முடியும் என்பதை புலம்பெயர் தமிழர்கள் மனதிருத்த வேண்டிய நாளிது.

அவ்வாறே உலக உடல்நல நாளை, உலக உடல்நல நிறுவனம் 1948 இல் தொடங்கப்பட்ட நாளான ஏப்ரல் 6ம் நாளை நினைவுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 6ம்நாளில் உலக நாடுகளின் மன்றம் கொண்டாடி வருகிறது. இவ்வாண்டு ‘எங்கள் பூமியே எங்களின் உடல்நலம்’ என்னும் மையக்கருவில் 2022ம் ஆண்டுக்கான உலக உடல்நல நாள் கொண்டாடப்படுகிறது. கோவிட் 19 ஏற்படுத்தி வரும் மனித அழிவைப் பற்றி பெரிதாக அக்கறை எடுக்கப்படும் இக்காலகட்டத்தில் 13 மில்லியன் மரணங்கள் சூழலைப்பேணாத மனிதவாழ்வால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

ஈழத்தமிழர்களின் தாயகத்தின் சூழலைப் பேணுவதற்கான உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டு வருவதால், பல மரணங்களுக்கு அதுதான் காரணமென்பது தெரியாது மறைக்கப்பட்ட நிலையிலேயே ஈழத்தமிழர்களும் காலநிலை மாற்றப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். அவர்களின் வாழ்வியலுக்கும் தொழில் முயற்சிகளுக்குமான நிலங்கள் தொடர்ந்தும் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்கள் உள்ளதால் அவர்களின் சூழல் பேணல் மட்டுமல்ல மண்ணின் இயற்கையான சூழல் பேணும் தகைமைகளும் இழக்கப்பட்டு வருகிறது. ஈழத்தமிழர்களின் உள உடல்நலம் குறித்தும் அவர்களின் உடல்நலத்திற்கான சூழல் பேணு உரிமைகள் குறித்தும் உலக உடல்நல அமைப்புக் கவனம் செலுத்த, இந்நாளில் புலம்பெயர் தமிழர்கள் அழுத்தங்களை ஏற்படுத்த உறுதி பூணல், புலம்பெயர் தமிழர்கள் இந்நாளில் எடுக்க வேண்டிய உறுதிமொழியாக உள்ளது.

Exit mobile version