ஜெனிவாவுக்கான அறிக்கையிலும் முரண்படும் தமிழ்த் தலைமைகள் – அகிலன்

முரண்படும் தமிழ்த் தலைமைகள்ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையேயான பிளவு மீண்டும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ஒரே குரலில் ஜெனிவாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் வகையிலான அறிக்கை ஒன்றை அனுப்பி வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. முரண்படும் தமிழ்த் தலைமைகள்; இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் நான்காகப் பிளவுபட்டு தமது அறிக்கைகளைத் தனித்தனியாக ஜெனிவாவுக்கு அனுப்பிவைக்கின்றன. இதில் ஐந்தாவதாக அனந்தி சசிதரன் தலைமையிலான கட்சி இந்த அணிகள் எதற்குள்ளும் செல்லாமல் தனித்து நிற்கின்றது.

முரண்படும் தமிழ்த் தலைமைகள்

ஜெனிவா உள்ளிட்ட பொதுவான பிரச்சினைகளைக் கையாளும் வகையில், தமிழ்க் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சி ஒன்று சில மாதங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ரெலோ ஆரம்பித்த இந்த முயற்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பத்திலேயே இணைந்துகொள்ள மறுத்து விட்டது. இது தொடர்பில் கொள்கை விளக்கம் ஒன்றை அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டிருந்தார். ஏனைய கட்சிகளை ஒருங்கிணைத்து பொதுவான கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளை ரெலோ முன்னெடுத்தது. குறிப்பாக ரெலோவின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் இந்த முயற்சியை முன்னெடுத்திருந்தார்.

மெய்நிகர் சந்திப்பும் இணக்கப்பாடுகளும்

இதன் அடிப்படையில் ஆகஸ்ட் 22 ஆம் திகதி ‘மெய்நிகர்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி  சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அதன் பேச்சாளர் சுரேந்திரன், ஈ.பி.ஆர்.எல். தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் என்.சிறிகாந்தா ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தார்கள். மூன்று விடயங்கள் இதில் ஆராயப்பட்டன. ஒன்று – ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படக்கூடிய விடயங்களை அடையாளங்காணல், இரண்டு – ஜெனிவாவுக்கு அறிக்கை ஒன்றைத் தயாரித்தல், அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை முயற்சிகள்.

இதில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படக்கூடிய விடயங்களாக நான்கு விடயங்கள் அடையாளங்காணப்பட்டன.

  1. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கை,
  2. அரசியல் கைதிகளின் விடுதலை,
  3. திட்டமிட்ட குடியேற்றம் காணி அபகரிப்பை நிறுத்துவதற்கான கோரிக்கை.
  4. 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையையும், இந்தியாவையும் கோருவது.

இந்த நான்கு விடயங்களும் ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படக்கூடிய விடயங்களாக இனங்காணப்பட்டன.

ஜெனிவா மற்றும் பேச்சுவார்ததை முயற்சிகள் தொடர்பாக ஆராயப்பட்டபோது முக்கியமான ஒருவிடயத்தை சிறிகாந்தா சுட்டிக்காட்டினார். அதாவது, “இவ்விடயத்தில் ஒரு உடன்பாடு ஏற்பட்டாலும், பின்னர் சுமந்திரன் தனியாகச் செயற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதில் ஏற்படக்கூடிய இணக்கப்பாட்டுக்கு முரணாக சுமந்திரன் செயற்பட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதற்கான உறுதியை மாவை. சேனாதிராஜாவால் வழங்க முடியுமா?” என கேள்வி எழுப்பிய சிறிகாந்தா, கூட்டத்துக்கு சமந்திரனும் அழைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அதனையடுத்தே மெய்நிகர் சந்திப்பில் சுமந்திரனும் இணைக்கப்பட்டார். சந்திப்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கு சுமந்திரனும் இணக்கம் தெரிவித்தார்.

ஜெனிவாவுக்காக தயாரான கடிதம்

இந்தப் பின்னணியில்தான் ஜெனிவாவுக்கான கடிதம்  தயாரிக்கப்பட்டது. ரெலோவின் முன்னெடுப்பில் தயாரிக்கப்பட்ட இந்தக் கடிதம் -ஆறு கட்சிகளின் தலைவர்களுக்கு கையொப்பங்களைப் பெறுவதற்காக அனுப்பப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணியின்  செயலாளர் நாயகம் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன்,  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,  ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சித்தார்த்தன்,  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன்,  தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா ஆகியோர் இதில் கையொப்பமிட்டனர். இந்தக் கடிதத்தின் விபரங்கள் தனியான செய்தியாக இன்று இலக்கு மின்னிதழில் வந்திருப்பதால், அதனையிட்டு இங்கு விபரிக்கவில்லை.

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை. சேனாதிராஜாவுக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டபோதிலும், கடந்த சனிக்கிழமை வரை அவர் இதில் கையொப்பமிடவில்லை. சம்பந்தன், சுமந்திரனால் மற்றொரு கடிதம் தயாரிக்கப்படுவதாகவும், அதனால் – இதில் தன்னால் கையொப்பமிட முடியாது எனவும் மாவை நழுவிவிட்டதாக தமிழ்க் கட்சி ஒன்றின் பிரதிநிதி ஒருவர் குற்றஞ்சாட்டினார். இந்தப் பின்னணியில் ஏனைய ஐந்து கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில், இந்தக் கடிதம் நேற்று சனிக்கிழமை ஜெனிவாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சிக்குள்ளும் கடிதத்தினால் குழப்பம்

அதேவேளையில், சம்பந்தன், சுமந்திரன் தரப்பால் தயாரிக்கப்பட்டுள்ள கடிதம் தமிழரசுக் கட்சிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் “இராணுவமும், விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமைகளை மீறியுள்ளனர். இவற்றில் சில போர் குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படும்” என்று பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையின் விடயமும் அந்தக் கடிதத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், அந்த விடயத்தை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சிறிதரன், சார்ள்ஸ் நிமலநாதன், கலையரசன் ஆகிய எம்.பி.க்களே இந்தக் கடிதத்துக்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள். இது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், எங்களுடைய கருத்தை கணக்கில் எடுக்காது விட்டால், மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாம் தனித்து கடிதம் ஒன்றை அனுப்புவோம். தற்போது தயாரிக்கப்பட்ட கடிதத்தில் கையொப்பம் இடமாட்டார் என்று தெரிவித்தார். தமிழ் அரசுக் கட்சியின் கடிதம் பெரும்பாலும் நாளை திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிய வருகின்றது.

திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடுகின்றது. அவசரகாலச் சட்டத்துக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவே இந்தக் கூட்டத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பாராளுமன்றம் வரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெற்றுக்கொள்வதற்கு சுமந்திரன் திட்டமிட்டிருந்தார். ஆனால், தமிழரசுக் கட்சியின் 3 எம்.பி.க்களுடன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் இதில் கைகயொப்பமிடுவதற்கு மறுப்புத் தெரிவிப்பதற்குத் தீர்மானித்திருந்தார்கள்.  சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் மட்டுமே இந்தக் கடிதத்தின் சனிக்கிழமை மாலை வரையில் கையெழுத்திட்டிருந்தார்கள். அதனைவிட, மாவை சேனாதிராஜா, மற்றும் காணக்கியன் ஆகியோர் இதில் கையெழுத்திடலாம் எனத் தெரிகின்றது.

இருந்த போதிலும், கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்களையடுத்து தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு ஞாயிறு காலை அவசரமாகக் கூட்டப்பட்டது. மெய்நிகர் சந்திப்பாக இது இடம்பெற்றது. இதில் குறிப்பிட்ட கடிதம் கடும் விமர்சனத்துக்குள்ளானதாகத் தெரியவருகின்றது.

அனந்தி சசிதரனின் தனிப்போக்கு

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் இம்முறை ஜெனிவாவுக்கான கடிதத்தில் கையொப்பமிடவில்லை. அனந்தி சசிதரனிடம் இதற்கான கையொப்பம் கேட்கப்பட்டதாகவும், ஆனால், கட்சியின் செயற்குழுவைக் கூட்டி அதில் முடிவெடுக்கப்பட்ட பின்னரே இதில் தன்னால் கையொப்பமிட முடியும் என அனந்தி சசிதரன் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது. இருந்தபோதிலும், ரெலோவின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில், சில விடயங்களை அனந்தி சசிதரன் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகின்றது.

குறிப்பாக ‘தமிழ் இனம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்த போதிலும், வரைபைத் தயாரித்தவர்கள் அதனைக் கணக்கில் எடுக்கவில்லை. அதனைவிட, போரின் நேரடிச் சாட்சியாக இருக்கும் தான் எழுந்தமானமாகச் செயற்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். இருந்தபோதிலும், அனந்தி சசிதரன் தனியான ஒரு அறிக்கையை அனுப்பி வைப்பதற்குத் திட்டமிடவில்லை எனத் தெரிகின்றது. வழமையாக பேரவையின் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அனந்தி இம்முறை பெருமளவுக்கு மெய்நிகர் நிகழ்வாகவே  ஜெனிவா கூட்டத் தொடர் இடம்பெறுவதால் அதில் கலந்து கொள்ள மாட்டார்.

ஆணையாளர் அறிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

அதேவேளையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஜெனிவாவுக்கு தனியான அறிக்கை ஒன்றை அனுப்பி வைக்கவுள்ளது. இது தொடர்பில் அவர்கள் தரப்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அடுத்த ஒரு இரு தினங்களில் அறிக்கை தயாராகிவிடும் எனவும் தெரிகின்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை 13 ஆம் திகதி ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. ஆணையாளர் பட்லெட் அம்மையாரின் அறிக்கை அன்றைய தினம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அறிக்கை பெரும்பாலும் அடுத்த ஒரு இரு தினங்களுக்குள் இறுதியாக்கப்படும். தமிழ்த் தரப்பினரால் அனுப்பப்படும் அறிக்கைகள் அதில் எந்தளவுக்குத் தாக்கத்தைச் செலுத்தும் என்பது தெரியவில்லை. ஆனால், அதனைத் தொடர்ந்து இடம்பெறக் கூடிய விவாதங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இது அமையலாம்.

அதேவேளையில், ஜெனிவா போன்ற பொதுவான விடயங்களிலேயே இணக்கப்பாட்டுக்கு வரடியாத தமிழ்க் கட்சிகள் குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பொதுவான இணக்கப்பாட்டுடன் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தால், அது அதிகளவுக்குத் தாக்கத்தைக் கொடுத்திருக்கும் என்பது உண்மை.