Tamil News
Home உலகச் செய்திகள் சூடானில் தொடரும் மோதல் – 600 இற்கு மேற்பட்டவர்கள் பலி

சூடானில் தொடரும் மோதல் – 600 இற்கு மேற்பட்டவர்கள் பலி

சூடானில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களில் இதுவரையில் 600 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் 4000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் உள்ளதாக சூடானின் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சூடானின் விரைவுத் தாக்குதல் உதவி படையினருக்கும், சூடான் இராணுவத்தினருக்குமிடையில் கடந்த வாரம் ஆரம்பமாகிய மோதல்கள் இரண்டாவது வாரமாக தொடர்கின்றது. போர் நிறுதத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை வெற்றிபெறவில்லை.

சூடானின் இரு இராணுவங்களை ஒருங்கிணைப்பது மற்றும் யாரை தளபதியாக நியமிப்பது என்பது தொடர்பான கருத்து மோதல்களே ஆயுத மோதலாக வெடித்துள்ளது.

இந்த மோதல்களில் பல வெளிநாட்டவர்களும் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் இரண்டு அமெரிக்கர்களும் அடங்கியுள்ளனர். அதேசமயம் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் தமது மக்களை அங்கிருந்து வெளியேற்றி வருகின்றன. கடந்த வியாழக்கிழமை (27) அறிவிக்கப்பட்ட 72 மணிநேர போர் நிறுத்தத்தில் பல நாடுகள் தமது மக்களை வெளியேற்றியுள்ளன.

இதனிடையே ஆயிரத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அருகில் உள்ள எதியோப்பியாவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 46 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட சூடானில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் வாடும் நிலையில் தற்போதைய மோதல்கள் அங்கு மேலும் நெருக்கடிகளை தோற்றுவித்தள்ளது.

Exit mobile version