காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து

இலங்கை காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து மாபெரும் போராட்டம் ஒன்றை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதுடன் குறித்த போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சே அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ  பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் உரிய நீதியை வழங்காது காலத்தை இழுத்தடித்து வருவதுடன் மரணச்சான்றிதழை பெற்றுக் கொள்ளும் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டமைக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மட்டுவில் பகுதியில் மஹிந்தவுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்கு மஹிந்த சென்றபோது முன்னெடுக்கப்பட்டிருந்த குறித்த எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் மீது இலங்கை காவல்துறையினர் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

நீதிகேட்டு அறவழியில் போரடிய தாய்மார் மீது அராஜகமாக செயற்பட்ட காவல்துறையினருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கண்டன போராட்டம் ஒன்றை நடத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (26) ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை குறித்த போராட்டத்தை நடத்த தீர்மானிக்கட்டுள்ளதை அடுத்து அரசியல் வேறுபாடுகள் கடந்து அனைவரும் ஒன்று திரளுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.