தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் இன்று ஆரம்பம்….

ஐந்து அம்சக் கோரிக்கைகளை இந்திய படையினருக்கு எதிராக முன்வைத்து  பன்னிரண்டு நாட்கள்  உண்ணாவிரதம் இருந்து  உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நாள் இன்று ஆரம்பமாகின்றது.

செப்டம்பர் 15, 1987 அன்று யாழ்ப்பாணத்தின் நல்லூர் வீதியில் முருகன் கோயில் அருகில் உண்ணாவிரதத்தை திலீபன் அவர்கள்  தொடங்கினார்.

“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை, எமது நாட்டில் நாம் நிலைபெறும் வரை, எமது சுதந்திரத்தை எவரும் உறுதிபடுத்த முடியாது. அதற்காகத்தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்காகத்தான் நாம் தமிழீழம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்” என தமிழீழம் என்பதை நாம் எதற்காகக் கேட்கிறோம் என்பதை தியாகி திலீபன் உறுதிபடக் கூறி நின்றார்.

திலீபனின் ஐந்து கோரிக்கைகள்:

*மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும்  குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

*சிறைக் கூடங்களிலும் இராணுவ காவல் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

*அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

*ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

*தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.48 மணிக்கு அவர் உயிர்நீத்தார்.