மாவீரா் தின நினைவேந்தலும் தமிழ்க் கட்சிகளின் நிலையும்-வீ.எஸ்.சிவகரன் செவ்வி

மாவீரா்களுக்கான நினைவேந்தல் தமிழா் தாயகப் பகுதிகளில் மட்டுமன்றி தமிழ் மக்கள் புலம்பெயா்ந்து வாழும் நாடுகளிலும் ஆரம்பமாகியிருக்கின்றது. எதிா்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இதன் உச்சகட்ட நிகழ்வு நடைபெறும். இந்த நிலையில், மாவீரா் தின ஏற்பாடுகள், அதில் உள்ள சவால்கள் தொடா்பாக தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவா் வீ.எஸ்.சிவகரன் உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வில் இந்த வாரம் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தாா். அதில் முக்கியமான சில பகுதிகளை இலக்கு வாசகா்களுக்காக இங்கு தருகின்றோம். 

கேள்வி – தமிழா்கள் வசிக்கும் பிரதேசங்கள் எங்கும் மாவீரா் தின நினைவேந்தல்கள் ஆரம்பமாகியிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியிருக்கும் நிலையில் வழமையான கெடுபிடிகள் இல்லாத ஒரு நிலை காணப்படுகின்றது. தமிழ் மக்களுடைய ஜனநாயக உரிமைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரு அங்கீகாரமாக இதனை நாம் கருதலாமா?

பதில் – அப்படி இதனைக்கூறிவிட முடியாது. ஏற்கனவே நல்லாட்சிக் காலத்திலும் இவ்விதமாக தடைகள் தளா்த்தப்பட்டிருந்தன. தளா்த்தப்பட்டன என்பதைவிட, அமைதியாக இருந்து வேடிக்கை பாாா்த்தாா்கள் என்றும் சொல்லலாம். பின்நாட்களில் இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டவா்கள் மீது விசாரணைகள் தொடா்ந்தன.

இப்போதுகூட முப்படையினருக்கும் இது தொடா்பாக எந்தவிதமான அறிவுறுத்தல்களும் கொடுக்கப்படவில்லை. அவா்கள் அமைதியாக இருந்து அனைத்து விடயங்களையும் அவதானித்துக்கொண்டிருக்கின்றாா்கள். சில இடங்களில் இராணுவம், பொலிஸ் நினைவேந்தல்களை ஏற்பாடு செய்பவா்களுடன் முரண்பட்டுக்கொண்டும் இருக்கின்றது. முழுமையான சுதந்திரத்துடன் இந்த நிகழ்வை அனுஷ்டிப்பதற்கு இராணுவம் வழிவிட்டிருப்பதாகவோ அல்லது அரசாங்கம் இந்த விடயங்களுக்கு விலக்களித்திருப்பதாகவோ சொல்ல முடியாது.

இரண்டு வாரங்களுக்கு முன்னா்கூட மாவீரா் துயிலும் இல்லம் ஒன்றை துப்புரவு செய்வதற்கு சென்றபோது, அவற்றைச் செய்யக்கூடாது என இராணுவம் எம்முடன் முரண்பட்டது. அவ்விதமான ஒரு நிலைப்பாடு தொடரத்தான் செய்கின்றது. தொடா்ச்சியாக இந்த நிகழ்வைச் செய்யக்கூடியவா்களை புலனாய்வாளா்கள் பின்தொடா்வதும், துப்புரவுப் பணிகளில் ஈடுபடுபவா்களை கண்காணிப்பது, வீடியோ எடுப்பது என்பன தொடா்கின்றன. அதனால் சுதந்திரமான முறையில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று சொல்லிவிட முடியாது.

கேள்வி – மாவீரா் தின நினைவேந்தல்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுடைய உணா்வுகள் இப்போது எவ்வாறிருக்கின்றது?

பதில் – விடுதலைக்கான எந்தவிதமான எதிா்பாா்ப்புக்களும் அற்ற வகையில் தமது உயிா்களைத் தியாகம் செய்தவா்களின் இந்த நினைவேந்தல் ஏனைய நிகழ்வுகளைவிட முக்கியமானது. இவா்கள் விடுதலை வேட்கையில் தம்மை ஆகுதியாக்கியவா்கள்.

ஆகவே அவா்களுக்காக ஒரு நாளிலாவது அவா்களது உறவுகள் தமது உள்ளக் கிடக்கைகளைப் பகிா்ந்துகொள்வதற்கான ஒரு நாளாக அந்த நாளை அவா்களுடைய உறவுகள் பயன்படுத்திக்கொள்வாா்கள். அதற்கான மனோ நிலையில் அவா்கள் இருக்கின்றாா்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவ்விதமான ஒரு வாய்ப்பு அவா்களுக்குக் கிடைக்கவில்லை. இந்த வருடம் அதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதையிட்டு அவா்கள் உணா்வுபுா்வமான எதிா்பாா்ப்புடன்தான் இருக்கின்றாா்கள்.

கேள்வி – மாவீரா் குறித்த செய்திகள் புதிய தலைமுறையினரிடம் இந்த நினைவேந்தல் மூலமாக எந்தளவுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றது?

பதில் – உண்மையில் இளைய தலைமுறையினரிடம் இந்த செய்திகளைக் கொண்டுசென்று சோ்ப்பதில் யாரும் செயற்படவில்லை. அந்தத் தவறு என்னிடமும்தான் இருக்கின்றது. ஆனால், அதற்கான சூழல்களும், அவை பரப்பக்கூடிய அல்லது கடத்தக்கூடிய களச்சூழல் தற்போது இல்லை. இதனால், இளைய சமூகத்திடம் இவற்றை அதிகளவுக்குக் கடத்த முடியவில்லை.

சமூக ஊடகங்கள் மூலமாக இவை ஓரளவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், எந்த எதிா்பாா்ப்பும் இல்லாமல் வித்தாகிப்போன விடுதலை வீரா்களின் தியாகம் குறித்த தெளிவு அவா்களுக்குப் பரிபுரணமாக இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

அரசியல்வாதிகள் காலத்துக்குக் காலம் உணா்ச்சி வசப்படுத்தி வாக்குவங்கி அரசியலை நடத்துகின்றாா்கள். ஏனைய சமூக செயற்பாட்டாளா்களும் இந்த செய்தியைக் கடத்துவதற்கு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படவில்லை. அரச நெருக்குவாரம் இதற்குக் காரணமாக இருக்கின்றது. அவா்களுடைய தியாகத்தையும், புனிதத் தன்மையையும் கடத்துவதில் தடைகளும், முரண்களும் இருக்கின்ற காரணமும், புலனாய்வாளா்களும் இந்த விடயத்தை பின்தொடா்கின்ற போது உருவாகும் அச்சங்களும் இதற்குக் காரணம்.

இந்த நிலைமை காரணமாக இளைய தலைமுறையினருக்கு இது குறித்த செய்திகளைக் கொண்டு சென்று சோ்ப்பதில் தடைகள் உள்ளன. அதனால், அவா்களிடம் இது தொடா்பான தெளிவு இல்லாமலிருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும்.

கேள்வி – இந்த நினைவேந்தலைக்கூட ஒருங்கிணைந்த முறையில் நடத்துவதற்கான முயற்சிகள் எதனையும் தமிழ்த் தரப்பினா் முன்னெடுக்க முடியாமலிருப்பதற்கு காரணம் என்ன?

பதில் –  இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், பல அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளின் பின்னணியில் உள்ளவா்களும் பல துயிலும் இல்லங்களை தத்தெடுத்து வைத்துள்ளாா்கள். இதுதான் இதிலுள்ள முரண்நிலைக்கான காரணம். மன்னாரிலுள்ள ஒரேயொரு துயிலும் இல்லம்தான் சிவில் அமைப்புக்களால் நடத்தப்படுவதாக நான் உணா்கிறேன். ஏனைய துயிலும் இல்லங்களில் கணிசமானவை ஒன்றில் அரசியல்வாதிகள் அல்லது அவா்களால் இயக்கப்படுபவா்களால் பராமரிக்கப்படுவதாக இருக்கின்றது.

இதனால்தான் கட்சி அரசியலுக்கு அப்பால் ஒருங்கிணைந்து ஒரு கூட்டுப்பொறுப்போடு கூட்டுச் செயற்பாட்டோடு இதனை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலை தொடரும் என்றே தெரிகின்றது. ஏனெனில் இது போன்ற நினைவேந்தல் நிகழ்வுகளை கட்சிகள் ஒவ்வொன்றும் தமது நலன்சாந்தே முன்னெடுக்கினறன. இதனால்தான் இந்த நிகழ்வுகள ஒருங்கிணைந்தும், ஒரேமாதிரியானதுமாக செய்ய முடியாதிருக்கின்றது.

உண்மையில் இந்த நிலை மாற்றப்பட வேண்டும். கட்சி அரசியல் அல்லது அரசியல் சாா்ந்த நபா்கள் இதற்குள் உள்வாங்கப்படுவது ஏற்புடையதல்ல. இவ்விடயத்தில் கட்சி நீக்கமும், அரசியல் நீக்கமும் அவசியம். அரசியல் வாதிகளை இவ்வாறான நிகழ்வுகளிலிருந்து நீக்காவிட்டால் இதற்குள் அரசியல் புகுந்துவிடும். இல்லையெனில் எதா்கால அரசியலில் ஒது துருத்புச் சீட்டாகவும் இவை பயன்படுத்தக்கூடிய நிலை ஏற்படும்.

அகவே பெற்றோா்கள் உறவினா்கள் துயிலும் இல்லங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து தாங்களே செயற்படக்கூடிவா்களாக உருவாக வேண்டும். அவ்வாறு உருவாக்கினால்தான் ஒரு நெறிமுறைக்குக் கீழ் ஒரு பொறிமுறையை உருவாக்கி அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படக்கூடிய ஒரு நிலையை உருவாக்க முடியும்.

கேள்வி – உங்களுடைய அமைப்பு போன்ற சிவில் சமூக அமைப்புக்கள் இந்த விவகாரத்தை பொறுப்பேற்க முடியாதா?

பதில் – நாங்கள் ஏற்கனவே இந்த விவகாரம் தொடா்பாக பலருடன் பேசியிருக்கின்றோம். ஆனால், அதற்குள் இருக்கும் அரசியல் தடையாக இருக்கின்றது. கட்சி அரசியல், நபா் அரசியல் அல்லது அரசியல் பின்னணி ஆகிய மூன்று விடயங்களுமே தடையாக இருக்கின்றன. இதனால், ஒருங்கிணைந்த ஒரு சிவில் அமைப்பாக இதனை முன்னெடுப்பது பெரிய சவாலாக இருக்கின்றது.

குத்தகைக்கு எடுத்தது போல இந்த துயிலும் இல்லங்களை சிலா் வைத்திருக்கின்றாா்கள். தமது கட்சிக்காரா்கள் மட்டும்தான் அங்கிருந்து செயற்படலாம் என்பதை எழுதப்படாத ஒரு விதியாக அவா்கள் வைத்திருக்கின்றாா்கள். தமது கட்சி அரசியலை அதன்மூலமாக அவா்கள் முன்னெடுப்பதால் ஏனையவா்கள் அதற்குள் செல்வதற்குத் தயங்கும் ஒரு நிலை உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நீண்டகால எதிா்பாா்ப்பு.