பருவநிலை மாற்றம் மனித குலத்துக்கு அபாய சங்கு – ஐபிசிசி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

உலக அளவிலான சராசரியை விட ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டத்தின் உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்பு நூறு ஆண்டு காலத்தில் கடலில் காணப்பட்ட இந்த நீட்மட்ட உயர்வு, 2050க்குள் ஆறு முதல் ஒன்பது ஆண்டுகளில் ஏற்படலாம் என்று இந்த அறிக்கை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்த இந்திய வெப்ப மண்டல வானிலை விஞ்ஞானி ஸ்வப்னா பனிக்கல் கூறியுள்ளார்.

இந்த கடல் மட்ட உயர்வு, இந்திய பெருங்கடலில் அதிகமாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 2006 முதல் 2018ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 3.7 மில்லி மீட்டர் அளவுக்கு இந்திய பெருங்கடல் மட்டம் உயர்ந்தது.

ஐபிசிசியின் இந்த ஆய்வறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை 195 உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டன. இந்த நாடுகள்தான் பருவநிலை மாற்றத்தின் இயல்பு மற்றும் புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்கள் எவ்வாறு காரணமாகிறார்கள் என்பதை ஆராய்ந்து வருகின்றன.

வரும் நவம்பர் மாதம், கிளாஸ்கோவில் பருவநிலை மாற்றம் தொடர்பான COP26 என்ற உலக தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு முன்பாக இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

அந்த கூட்டத்தில் பங்கேற்கும் நாடுகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக, நவீன கால பருவநிலை மாற்ற அறிவியல் அணுகுமுறை ஆலோசனைகளை தமது அறிக்கையில் இந்த குழு உலக நாடுகளுக்கு வழங்கியிருக்கிறது.

பருவநிலை மாற்றம் மீது மனிதர்கள் விளைவித்த மோசமான இந்த தாக்கம், யதார்த்தமான உண்மை என்று ஐபிசிசி குழுவின் இணை தலைவர் வெலரீ மெஸ்ஸன் டெல்மோட் கூறியிருக்கிறார்.

பசுங்குடில் வாயு வெளியேற்றம் காரணமாக, பூமி 1.5 டிகிரி வெப்பமாக உயரும்போது கடலின் வெப்பம் ஒரு டிகிரி கூடுதலாக அதிகரிக்கும் என்றும் 42 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் முடிவுக்குள்ளாக பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு 2 டிகிரியாகலாம் என்ற கூற்றை ஒதுக்கி விட முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அதே சமயம் பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்ற அளவை குறைக்கும் முயற்சிகளை கடுமையாக பின்பற்றினால், பூமியின் வெப்பநிலை மேலும் உயராமல் நிலையாக இருக்கலாம் என்ற புதிய நம்பிக்கையையும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

119870099 ipcc berkeley earth land and ocean 2x640 nc  பருவநிலை மாற்றம் மனித குலத்துக்கு அபாய சங்கு - ஐபிசிசி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

அறிக்கையில் இடம்பெற்ற 5 எதிர்கால பாதிப்புகள்

அனைத்து உமிழ்வு சூழ்நிலைகளிலும் 2040க்குள் வெப்பநிலை 1850-1900 நிலைகளுக்கு மேல் 1.5C ஐ எட்டும்

ஆர்டிக் பெருங்கடல் 2050க்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் ஒரு முறையாவது பனி இல்லாத நிலையை அடையும்.

1.5 டிகிரி வெப்பமயமாதல் நிலைமை நிலவும்போதும், “வரலாற்றில் இதுவரை ஏற்படாத வகையில், சில தீவிர பருவநிலை நிகழ்வுகள் அதிகரிக்கும்.

கடந்த காலங்களில் நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்ந்த தீவிர கடல் மட்ட நிகழ்வுகள் 2100ஐ உலகம் எட்டும்போது, குறைந்தபட்சம் அதிக அலை சீற்றத்தை அளவிடும் இடங்களில் பாதியளவை எட்டும்.

பல பகுதிகளில் காட்டுத்தீ உள்ளிட்ட மோசமான வானிலை நிகழ்வுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

119870101 ipcc temp rises since 1850 2x640 nc  பருவநிலை மாற்றம் மனித குலத்துக்கு அபாய சங்கு - ஐபிசிசி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

ஐபிசிசி அறிக்கை: துரிதமாக அறிய வேண்டிய குறிப்புகள்

பூமியின் தட்பவெப்பம், 1850-1900க்கு இடைப்பட்ட 50 ஆண்டுகளில் இருந்ததை விட 2011-2020க்கு இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் 1.09 டிகிரி உயர்ந்துள்ளது.

1850ஆம் ஆண்டு முதல் இல்லாத வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பூமி மிகவும் வெப்பமாக உள்ளது.

1901 முதல் 1971ஆம் ஆண்டுகளில் இருந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது சமீபத்திய கடல் மட்டத்தின் உயரம் சுமார் மும்மடங்கு உயர்ந்திருக்கிறது.

1990களில் இருந்த நிலையை விட ஆர்டிக் பனிக்கடல் உருகுவதற்கும் உலக அளவில் பனிச்சிகரங்கள் உருகுவதற்கும் மனிதர்களின் தாக்கமே மிக அதிக வாய்ப்பாக கருதப்படுகிறது.

அனல் காற்று உள்பட வெப்பமயத்துடன் தொடர்புடைய பல கடுமையான சூழ்நிலைகள், 1950களில் இருந்ததை விட அதிகமாகி இருப்பது போல, குளுமையான பருவநிலை குறைவதும் அதன் மூலம் ஏற்படும் கடுமையும் குறைவாக பதிவாவதும் நிதர்சனம்.

இந்த ஆரம்பநிலை அறிக்கையைத் தொடர்ந்து, அடுத்து வரும் மாதங்களில் தொடர்ச்சியாக பல்வேறு பருவநிலை விளைவுகளை விவரிக்கும் அறிக்கைகள் வெளியாகவிருக்கின்றன.

119870099 ipcc berkeley earth land and ocean 2x640 nc 1  பருவநிலை மாற்றம் மனித குலத்துக்கு அபாய சங்கு - ஐபிசிசி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

அந்த வகையில், 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு பருவநிலை மாற்ற அறிவியல் முயற்சிகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முதன்மையான முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

119870105 heat1  பருவநிலை மாற்றம் மனித குலத்துக்கு அபாய சங்கு - ஐபிசிசி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ், “ஐபிசிசி இன்று வெளியிட்டுள்ள செயல் திட்டக்குழுவின் முதலாவது அறிக்கை மனிதகுலத்துக்கு ஓர் அபாய சமிக்ஞை,” என்று கூறியிருக்கிறார்.

“அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்தால், நம்மால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவை தவிர்க்க இயலும். ஆனால், அந்த முயற்சியை எவ்வித தாமதமோ, எவ்வித காரணங்களுக்கோ இடம் கொடுக்காமல் உடனடியாக செய்தாக வேண்டும். எதிர்வரும் COP26 மாநாடு வெற்றிகரமாக அமைவதை, அனைத்து தலைவர்களும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களும் உறுதிப்படுத்த வேண்டும்,” என்றும் அன்டோனியோ கூட்டரெஷ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தங்களுடைய ஆய்வு ஆவணத்தில், “வளிமண்டலம், பெருங்கடல்கள், நிலப்பகுதி ஆகியவற்றின் வெப்பநிலை உயர்ந்ததில் மனிதர்களின் தாக்கம் அதிகம்,” என்று ஐபிசிசி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள ரீடிங் பல்கலைக்கழக பேராசிரியரும், ஐபிசிசி அறிக்கை தயாரிப்புப் பணியில் இடம்பெற்றவருமான பேராசிரியர் எட் ஹாக்கின்ஸ், “இது ஒரு யதார்த்தமான உண்மை. இந்த பூமியின் வெப்பம் அதிகரிப்பதற்கு, விவாதத்துக்கும் சந்தேதக்கத்துக்கும் இடமின்றி மனிதர்களே காரணம் என கூற முடியும். இதை விட அதிகமாக இந்த உண்மையை உறுதிப்படுத்த முடியாது,” என்று கூறினார்.

உலக வானிலை நிறுவனத்தின் செகரட்டரி ஜெனரல் பட்டேரி தாலஸ், “விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் சொல்லாடலின்படி, “இந்த வளிமண்டலம் போதைப் பயன்பாட்டுக்கு ஆளாகியுள்ளது என்றுதான் கூற வேண்டும்,” என்றார்.

அதாவது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மனிதர்கள் புவி வெப்பமயமாதலுக்கு காரணமாகி வருகிறார்கள் என்று பொருள்.

பூமியின் வெப்பம் உயர்ந்து வருவதற்கு இது மட்டுமின்றி வேறு பல காரணங்களும் உள்ளன. இந்த ஆய்வறிக்கையை வழங்கிய விஞ்ஞானிகள், கடந்த 2000 ஆண்டுகளில், கடைசி 50 ஆண்டுகளைப் போல வேறு 50 ஆண்டுகால பருவத்தில் இது போன்ற அளவில் உலகம் வெப்பம் அடையவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த அசாத்தியமான வெப்பநிலை, பல பருவநிலைகளையும் தீவிர பருவ நிலைகளையும் ஆண்டுதோறும் எதிர்கொண்டு வருகிறது. கிரீஸ் மற்றும் மேற்கு வட அமெரிக்கா சமீபத்தில் எதிர்கொண்ட அனல் காற்று ஆகட்டும் அல்லது ஜெர்மனி, சீனா எதிர்கொண்ட கடும் வெள்ளம் ஆகட்டும், கடந்த 10 ஆண்டுகளில் மனித குலம் மீது வலுவான தாக்கத்தை இந்த பருவநிலை மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது.

விஞ்ஞானிகளின் புதிய அறிக்கையில், மனிதர்கள் இதுநாள் வரை அனுபவித்து வரும் வெப்பமயமாதல் நிலைமை, நூற்றாண்டுகளில் இருந்து புத்தாயிரம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் கூட மாற்றம் அடையாத நமது பூமிக்கு ஆதாரமாக விளங்கும் சக்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறியுள்ளனர்.

பெருங்கடல்கள் தொடர்ந்து வெப்பமடைந்து மேலும் அமிலமாக மாறும் என்றும், மலைப்பகுதிகள் மற்றும் துருவ பனிப்பாறைகள் பல தசாப்தங்களுக்கோ பல நூற்றாண்டுகளுக்கோ கூட தொடர்ந்து உருகத் தொடங்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதை, “ஒவ்வொரு வெப்பமயமாதலுக்கும் விளைவுகள் தொடர்ந்து மோசமாகிக் கொண்டே இருக்கும்” என்று பேராசிரியர் ஹாக்கின்ஸ் கூறுகிறார்.

“இதில் பல விளைவுகள், திரும்பவும் பழைய நிலைமைக்கு செல்ல முடியாதவை,” என்பதும் அவரது கணிப்பு.

கடல் மட்ட உயர்வு என வரும்போது, அதற்கு சாத்தியமிக்க பல நிலை உமிழ்வு வரம்பை விஞ்ஞானிகள் நிர்ணயித்துள்ளனர்.

இருப்பினும், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் சுமார் 2 மீட்டர் அளவுக்கும் 2150ஆம் ஆண்டில் 5 மீட்டர் அளவுக்கும் கடல் மட்டம் உயரும் என்பதை ஒதுக்கி விட முடியாது என்று விஞ்ஞானிகள் அஞ்சுகிறார்கள்.

அத்தகைய விளைவுகள் ஏற்பட்டால், அது 2100ஆம் ஆண்டில் கடலோர பகுதிகளில் வாழும் பல லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கே அச்சுறுத்தலாக அமையும்.

விஞ்ஞானிகளின் அறிக்கையின் ஒரு முக்கிய அம்சமாக, எதிர்பார்த்த வெப்பநிலை உயர்வும் அது மனிதகுலத்தின் பாதுகாப்பு விஷயத்தில் என்ன பங்காற்றும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

பூமியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாடும் 2015ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை உச்சிமாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

119841801 ab9a82ed 37f0 462a 9bfc 8995f240fb0f 1  பருவநிலை மாற்றம் மனித குலத்துக்கு அபாய சங்கு - ஐபிசிசி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

அந்த உடன்படிக்கையின்படி, இந்த நூற்றாண்டில் புவி வெப்பமயமாதலை 2 டிரிக்கும் குறைவாக வைத்திருப்பதை உலக நாடுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும், அந்த அளவை 1.5 டிகிரிக்கும் கீழ் வைத்திருப்பதற்கான முயற்சிகளை உலக நாடுகள் தொடர வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், கரிம வெளியேற்றத்தை மிகப்பெரிய அளவில் குறைக்காதவரை அனைத்து வித உமிழ்வுகளையும் வெளியேற்ற விஞ்ஞானிகளால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை, இந்த நூற்றாண்டில் எட்டவே முடியாது என்று ஐபிசிசி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தயாரித்த விஞ்ஞானிகள் அனைத்து சூழ்நிலைகளிலும் 2040க்குள் பூமி 1.5 டிகிரி வெப்பநிலையை எட்டி விடும் என்று நம்புகிறார்கள். பூமியில் இருந்து வெளியேற்றப்படும் உமிழ்வுகள் அடுத்த சில ஆண்டுகளில் குறைக்கப்படாவிட்டால், பூமியின் வெப்பம் அதிகமாவது முன்பே கூட நடக்கலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

2018ஆம் ஆண்டில் இதேபோன்ற ஐபிசிசியின் அறிக்கையில் இப்படிப்பட்ட நிலைமை ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த கணிப்பை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

“ஒவ்வொரு வருடமாக முன்னேறி வெப்பத்தை அதிகரிக்கும் நிலையை முன்கூட்டியே எட்டுவோம். ஏற்கெனவே 2016ல் அத்தகைய எல் நினோ விளைவை இரண்டே மாதங்களில் நாம் எட்டி விட்டோம் என்று ஐபிபிசி குழுவில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் மால்டே மெய்ன்ஷாசென் கூறினார்.

“எல் நினோ” என்பது புவி வெப்பமாதலின் காரணமாகப் புவியின் கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலில் ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவது. இதை எல் நினோ விளைவு என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

ஐபிசிசி என்றால் என்ன?

1988ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பருவநிலை மாற்றம் பற்றிய மதிப்பீட்டை, அதன் தாக்கத்தை, தீர்வுகளைப் பற்றி 6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசுகளுக்கு அறிக்கை அளிப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் மற்றும் அதன் ஆபத்துகள் குறித்த ஆதாரங்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த அமைப்பின் அறிக்கைகள் கடுமையாக மாறின.

1950ல் இருந்து புவி வெப்பமடைவதற்கு மனிதர்களே முக்கியக் காரணம் என்று 2013ல் வெளியிடப்பட்ட இந்த அமைப்பின் அறிக்கை கூறியது முக்கியத்துவம் பெற்றது. 2015ம் ஆண்டு பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஏற்படுவதற்கும் இதுவே அடிப்படையாக அமைந்தது.

6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்கும் வழக்கமான அறிக்கைகள் தவிர பருவநிலை மாற்றம் தொடர்பான குறிப்பான அறிவியல் கேள்விகளைப் பற்றி சிறப்பு அறிக்கைகளையும் இந்த அமைப்பு வழங்கியது.

தொழிற் புரட்சிக்கு முந்திய காலத்தை ஒப்பிட புவியின் வெப்ப நிலை 1.5 டிகிரிக்கு மேல் உயரக்கூடாது என்ற மிக முக்கியமான அறிக்கையை 2018ல் வெளியிட்டது ஐபிசிசி. அரசியல் தலைவர்கள் பருவநிலை மாற்றத்துக்கு உரிய முறையில் முகம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உலகம் முழுவதும் இளைஞர்கள் வீதிக்கு வருவதற்கு இந்த அறிக்கை மிகமுக்கியமான உந்துவிசையாக இருந்தது.

காரணம், இந்த அறிக்கை எல்லோரைம் ஆச்சரியப்படுத்தி, சிந்திக்கவைத்தது. இது எதிர்காலப் பிரச்னை அல்ல. இப்போதைய பிரச்னை என்ற எண்ணத்தை இந்த அறிக்கை தந்தது” என்கிறார் ஐபிசிசி துணைத் தலைவரும் அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவருமான கோ பாரெட்.

நன்றி – பிபிசி ilakku-weekly-epaper-141-august-01-2021