காலநிலை மாற்றத்தால் தாயகத்தில் ஏற்பட்ட மாற்றம் 2021 – நாகமுத்து பிரதீபராஜ்

தாயகத்தில் ஏற்பட்ட மாற்றம் 2021

நாகமுத்து பிரதீபராஜ்

காலநிலை மாற்றத்தால் தாயகத்தில் ஏற்பட்ட மாற்றம் 2021: 2021 ம் ஆண்டை பொறுத்தவரை பொதுவாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் சார்ந்து  தீவிரமான வானிலை நிகழ்வுகள் எமது தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவதானிக்கப்பட்டு இருக்கின்றன.

2021ஆம் ஆண்டை பொறுத்தவரை உலகம் முழுவதும் பல்வேறு தேசங்கள் தாெடர்ச்சியான  தீவிரமான வானிலை பாதிப்புக்களினால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் ஜேர்மனியில் நடந்த வெள்ளப்பெருக்கு ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப்பெரிய சூறாவளி, இந்தியாவின் கேரளா பகுதியை தாக்கிய கனமழை போன்றன உலகம் காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்றது என்பதற்கான ஆதாரங்களாகும். அது போல் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியான தாழமுக்கம் மற்றும்  பருவாக்காற்றின் தீவிர நிலைமையால் ஏற்பட்ட குறைந்த காலப்பகுதியில் கிடைத்த மிக செறிவான மழைவீழ்ச்சியும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

பொதுவாகவே இவ்வாண்டில் வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலுமே  சராசரியை விட கூடுதலான அளவிலேயே மழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்றுள்ளது.  அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் சராசரி மழைவீழ்ச்சி 1240 mm  ஆக கருதப்படுகின்றது. ஆனால் இவ்வாண்டு வடக்கு மாகாணம் 1684mm மழை வீழ்ச்சியை பெற்றுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 1963mm  மழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்றிருக்கின்றது. இது கடந்த 100 ஆண்டுகளில் கிடைத்த அதிகூடிய மழைவீழ்ச்சி ஆகும்.   ஆனால் இந்த மழைவீழ்ச்சியை பொறுத்தவரை இடம்சார்ந்த ரீதியில் ஒரேமாதிரியான தன்மை காணப்பட்டிருக்கவில்லை. இவ்வாண்டு மிகக் கூடுதலான மழைவீழ்ச்சியை வடக்கு மாகாணம் பெற்றிருந்தாலும் கூட சில இடங்களில் அதிகமான மழைவீழ்ச்சியும், சில இடங்களில் குறைவான மழைவீழ்ச்சியும் கிடைத்திருக்கின்றது. வடக்கு மாகாணத்தின் மத்திய பகுதிகளை பொறுத்தவரை மிக கூடுதலான மழைவீழ்ச்சி கிடைக்க, கிழக்கு மற்றும் மேற்கு கரையோர பகுதிகளில் குறைவான மழைவீழ்ச்சியே கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

ஒப்பீட்டு ரீதியில் வடக்கு மாகாணத்தின் மத்திய பகுதியில் அதாவது வடக்கு மாகாணத்தின் A-9 மற்றும் புகையிரத வீதியினை அண்மித்த பகுதிகளில் சற்று கூடுதலான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற கிழக்கு மற்றும் மேற்கு கரையோரப் பகுதியில் சற்று குறைவான மழைவீழ்ச்சியே கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

2021ஆம் ஆண்டை பொறுத்தவரை வடக்கு மாகாணத்தின் கிழக்கு பிராந்தியங்களில் சராசரி மழைவீழ்ச்சி 1600mm கூடுதலாகவும் மேற்கு பிராந்தியத்தை பொறுத்தவரை சராசரியாக 1725mm கூடுதலான மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெற்றிருக்கின்ற அதே சமயம் மத்திய பிராந்தியத்தை பொறுத்தவரை 1900mm கூடுதலான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

இந்த இடம் சார்ந்த ரீதியில் மழைவீழ்ச்சியினை பொறுத்தவரை ஏற்பட்டிருக்கின்ற  வேறுபாடு அந்த பிரதேசங்களில் காணப்படுகின்ற பருவகால ஆறுகளின் நீரேந்து பிரதேசங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தின் மிக பிரபலமான குளங்கள் பல முழு கொள்ளவையும் இன்னும் எட்டவில்லை.

download 22 காலநிலை மாற்றத்தால் தாயகத்தில் ஏற்பட்ட மாற்றம் 2021 - நாகமுத்து பிரதீபராஜ்குறிப்பாக இரணைமடு மட்டுமே முழு கொள்ளவை எட்டி அதனுடைய உபரிநீர் நான்கு மேலதிக நீர் வெளியேற்ற கதவுகளின் மூலம் திறந்து விடப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்தின் ஏனைய மிகப்பெரிய குளங்கள் என்று வர்ணிக்கப்படுகின்ற வவுனிக்குளம், முத்தையன் கட்டுக்குளம், உடையார்கட்டு, கணுக்கேணி, தண்ணி முறிப்பு, பாவற்குளம் போன்ற குளங்கள் எல்லாமே இந்த ஆண்டு இன்னமும் முழு கொள்ளவையும் எட்டாத நிலை காணப்படுகின்றது.

இந்த ஆண்டு மாகாணத்தின் சராசரி அளவை விட மிக கூடுதலான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றிருக்கின்ற அதே சமயம் மேற்பரப்பு நீர்நிலைகள் முழு கொள்ளளவையும் எட்டமுடியாத அளவிற்கு மழைவீழ்ச்சியினுடைய பரம்பல் காணப்பட்டிருக்கின்றது. அதாவது ஆண்டு முழுவதும் படிப்படியாக மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. இது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட முக்கியமான விளைவு ஆகும்.

download 1 6 காலநிலை மாற்றத்தால் தாயகத்தில் ஏற்பட்ட மாற்றம் 2021 - நாகமுத்து பிரதீபராஜ்மேற்பரப்பு நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை என்பதன் தொடர்ச்சியான விளைவு என்னவென்றால் மேற்பரப்பு நீர்நிலைகளை நம்பிய விவசாய நடவடிக்கைகள் குறிப்பாக நெற்செய்கையில் மிகக்கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும். மிக முக்கியமாக 2022 ம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையில் இது கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். ஏற்கெனவே இரசாயன உரத்தட்டுப்பாட்டினால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள வன்னிப் பிராந்திய விவசாயிகளுக்கு சிறுபோகத்துக்கான  நீர்ப் பற்றாக்குறை என்பது பனையால் விழுந்தவனை மாடேறி  மிதித்ததற்க்கு  ஒப்பாகும்.

ஆனால் அதே சமயம் 2022 ஆம் ஆண்டு தைமாதம் 26 ஆம் திகதி வரைக்கும் பருவபெயர்ச்சி மழையினுடைய செல்வாக்கு இருக்கும் என கருதப்படுவதால் அடுத்த ஆண்டு சிலசமயங்களில் அதாவது தை மாதத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சி மேற்பரப்பு நீர்நிலைகள் அவற்றின் முழுக் கொள்ளளவை எட்ட உதவக்கூடும்.

ஆயினும் கூட தற்போது நிலவுகின்ற மிக குளிரான வானிலையை பொறுத்தவரையில் இந்த ஆண்டு முடிவு வரைக்கும் அதாவது மார்கழி 30 வரைக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே காணப்படுகிறது.

வெப்பநிலையை பொறுத்தவரை மிக கூடுதலான வெப்பநிலை யூன், யூலை மாதங்களில் பதிவாகி இருக்கின்றது. இவ்விரண்டு மாதங்களுக்குமான வடக்கு மாகாண சராசரி வெப்பநிலையாக 33 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதேசமயம் வழமைபோன்று மிக குளிரான மாதம் என்று அழைக்கப்படும் மார்கழியில் இந்த ஆண்டும் மிக குளிரான நிலையே காணப்படுகிறது.

வளிமண்டல ஆய்வுகளை பொறுத்தவரை படிவு வீழ்ச்சியில் பல வகைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்று மழைவீழ்ச்சி. அதில் இன்னொரு வடிவமே பனி அல்லது அதனோடு சேர்ந்த விடயங்கள். ஆனால் இந்த ஆண்டு படிவு வீழ்ச்சியின் இன்னொரு வடிவம் என்று அழைக்கப்படும் பனிப்பொழிவு மிக அதிகமாக கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதனால் இழிவு வெப்பநிலை அளவில் சடுதியான வீழ்ச்சி காணப்படும் என்பதோடு உணரப்படும் வெப்பநிலை அளவிலும் மாற்றம் ஏற்படும். இன்னொரு வகையில் கூறுவதானால் வடக்கு மாகாண மக்கள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை முதல் நாள் மாலை தொடக்கம் மறுநாள் காலை வரை கடும் குளிரை அனுபவிப்பார்கள். இப்பனிப்பொழிவு விவசாய நடவடிக்கைகளிலும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும். மழைக்கு பதிலாக சில இடங்களில் கிடைக்கின்ற பனிப்பொழிவை பொறுத்தவரையில் மார்கழி மாதம் 18 ஆம் திகதியில் இருந்தே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகளிலும் ஆரம்பித்திருக்கின்றது .

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில், இக்காலப்பகுதியில் பகலில்  குறிப்பாக பகல் 11மணியிலிருந்து 3 மணிவரைக்கும் சற்று உயர்வான வெப்பநிலை கிடைக்கின்ற அதேசமயம் மாலை  3  மணிக்கு பின்னர் வெப்பநிலை சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டு இரவு மிக குளிரான நிலமை காணப்படும்.  இம்மாதம் (டிசம்பர்) 21,22,23 ம் திகதிகளை பொறுத்தவரை வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் சராசரி வெப்பநிலையாக 21பாகை செல்சியஸ் குறைவான வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் தாயகத்தில்இவ் வெப்பநிலை பதிவு செய்யப்படுவதென்பது வடக்கு மாகாணத்தின் அல்லது கிழக்கு மாகாணத்தின் காலநிலையை பொறுத்தவரை மிகவும் குளிரான நிலமையாகவே காணப்படும். இந்த பிரதேசத்தின் சராசரி வெப்பநிலை 27.8 பாகை செல்சியஸ் ஆக இருக்கின்ற அதேவேளை 6  அல்லது 7 பாகை செல்சியஸ் வீழ்ச்சி என்பது மிக குளிரான நிலமையாகவே காணப்படுகின்றது. ஆகவே இந்த ஆண்டை பொறுத்தவரை காலநிலை மாற்றத்தில் மிக கூடுதலான மழைவீழ்ச்சி  கிடைக்கப்பெற்றாலும் கூட  மேற்பரப்பு நீர்நிலைகள் நிரம்பவில்லை அதன் விளைவாக தொடர்ச்சியாக மேற்பரப்பு நீர் நிலைகளை நம்பிய பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பாதிக்கப்படும் வெப்பநிலையை பொறுத்தவரை வழமைபோன்று யூன், யூலை போன்ற மாதங்களில் 32பாகை செல்சியஸ் வெப்பநிலை சராசரியாக கிடைத்திருந்தாலும் கூட மார்கழியில்  சராசரி வெப்பநிலையில் 21பாகை செல்சியஸ் என்ற நிலையில் குறைந்திருக்கின்றது.

ஆகவே இந்த வெப்பநிலை  மற்றும் மழைவீழ்ச்சி மாற்றங்களை பொறுத்தவரை மனிதனுடைய சௌகரியமான காலநிலையில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது.  இந்த ஆண்டில் வழமைக்கு மாறாக வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டம் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு சாராசரியை விட மிக கூடுதலான மழைவீழ்ச்சியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே வடக்கு மாகாணத்தில் மிக குறைவான மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறுகின்ற பகுதியென்று அழைக்கப்படுகின்ற மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி போன்ற பிரதேச செயலக பிரிவுகளை  உள்ளடக்கிய பல பகுதிகளினுடைய ஆண்டு சராசரி மழைவீழ்ச்சி இந்த ஆண்டு வழமையைவிட 21% அதிகரித்து காணப்படுகின்றது. ஆகவே இதுவும் காலநிலை மாற்றத்தினுடைய விளைவாகவே 2021ல்  குறிப்பிடக்கூடிய விடயமாக காணப்படுகின்றது. வேறுபட்ட அளவிலான ஆறு தாழமுக்கங்கள் இதுவரை வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்றிருந்தாலும் கூட நேரடியாக  எமது பிரதேசத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தகூடிய எந்தவொரு பாரிய தாக்கங்களும் நிகழவில்லை. இருந்தாலும்கூட யாழ்ப்பாண மாவட்டத்தில் நவம்பர் மாத நடுப்பகுதியில்  கிடைக்கப்பெற்ற மிக கூடுதலான மழைவீழ்ச்சி பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கூட கணிசமான அளவு வெள்ள வடிகாலமைப்பு செயற்பாடுகளின் அபிவிருத்தியினூடாக வெள்ளம் தொடர்ச்சியாக தேங்கி நிற்காது குறுகிய காலத்திற்குள்ளே வெள்ள நீர் வடிந்தோடி பாதிப்பிலிருந்து  மக்கள் உடனடியாக மீளெள கூடிய வகையில் முன்னாயத்த செயற்பாடுகள் காணப்பட்டுள்ளன.

இவ்வாண்டு பரவலாக குறிப்பிட்ட கால இடைவெளியில் மழை பெய்ததன் காரணமாக வெள்ள பாதிப்பு என்பது மிக அதிக அளவில்  இருக்கவில்லை.

இந்த 2021 ம் ஆண்டை பொறுத்தவரை வடக்கு மாகாணத்தில்  வடகீழ்ப் பருவபெயர்சி காலத்தில் கார்த்திகை, மார்கழி ஆகிய இரண்டு மாதங்களில் வடக்கு மாகாணத்தில்  இடிமின்னல் தாக்கத்தின் விளைவாக ஒன்பது பேர் மரணித்து இருக்கிறார்கள்.  அதேசமயம் இந்த ஆண்டை பொறுத்தவரை வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 19பேர் இடிமின்னல் தாக்கத்தினால்  மரணமடைந்துள்ளனர்.

தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற இடிமின்னல் நிகழ்வுகள் காரணமாக மக்களிடையே பாதிப்பு குறிப்பாக மனித உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டை பொறுத்தவரை வழமையான வானிலை நிகழ்வுகள் போன்றில்லாமல் சற்று வித்தியாசமாக வளிமண்டல அமைப்பு அல்லது வானிலை அமைப்பு காணப்பட்டிருக்கின்றது.

நூறு ஆண்டுகளுக்கு பின்னர் யாழ் மாவட்டத்தில் ஆண்டுச்சராசரி மழைவீழ்ச்சியில் மிக பெரிய அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. 1813 ஆம் ஆண்டு கிடைத்த மழைவீழ்ச்சிக்கு அடுத்ததாக  இந்த ஆண்டு அதாவது நூறு வருடங்கள் கழித்து யாழ்மாவட்டம் 1963mm என்ற மழைவீழ்ச்சியை பெற்றிருக்கின்றது. உண்மையில் 1900mm மழைவீழ்ச்சி என்பது யாழ்மாவட்டத்தை கபொறுத்தவரையில் மிக மிக கூடுதலான மழைவீழ்ச்சி.  ஆனாலும் கூட ஆண்டு முழுவதிலுமே படிப்படியாக கிடைத்த மழைவீழ்ச்சி என்பதனால் இதனுடைய பாதிப்பு குறைவாகவே காணப்படுகின்றது. ஆகவே இன்னொரு வகையில் இது நன்மையான விடயம் என்னவென்றால் இந்த ஆண்டு மிகக் கூடுதலான மழைவீழ்ச்சி கிடைத்திருந்தாலும் கூட இந்த மழைவீழ்ச்சி குறிப்பிட்ட கால இடைவெளியின்  கிடைத்ததன் காரணமாக வெள்ள அனர்த்தத்திலிருந்து எம்மை பாதுகாத்திருக்கின்றது.

காலநிலை மாற்ற நிகழ்வு என்பது சில சாதகமான, பாதகமான நிலமைகளை  இவ்வாண்டு எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. உலகின் பல பிரதேசங்களை போல நாமும் காலநிலை மாற்ற விளைவுகளை உணர தொடங்கியுள்ளோம். போதுமான தயார்ப்படுத்தல் மற்றும் முன்னேற்பாட்டு செயற்பாடுகளை செய்வதன் மூலம் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை இயலுமான வரையில் எம்மால் தணித்துக் கொள்ள முடியும். காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் எதிர்கொள்ள  எம்மை தயார்ப் படுத்தவில்லையாயின், மீள முடியாத துன்பங்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

Tamil News