Home ஆய்வுகள் சீனத் தூதுவரின் யாழ் விஜயம்: பின்னணியும் எதிர்பார்ப்புகளும் – பி.மாணிக்கவாசகம்

சீனத் தூதுவரின் யாழ் விஜயம்: பின்னணியும் எதிர்பார்ப்புகளும் – பி.மாணிக்கவாசகம்

சீனத் தூதுவரின் யாழ் விஜயம்

பி.மாணிக்கவாசகம்

சீனத் தூதுவரின் யாழ் விஜயம்: இலங்கைக்கான சீனத் தூதுவர் இந்த வருடத்தின் (2021) இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட 3 நாள் விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த வருடத்தில் பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள போதிலும், இந்த யாழ்ப்பாண விஜயம் அதி முக்கியத்துவம் மிக்கதாகவும், இலங்கையின் போக்கில் பல்வேறு திருப்பங்களுக்குப் பிள்ளையார் சுழி இட்டிருப்பதாகவும் அமைகின்றது.

சீனாவின் எந்தவொரு நடவடிக்கையும் தன்னலம் மிகுந்ததாகவும் தனது வல்லரசுப் போக்கை நிரந்தரமாக நிலை நிறுத்து தற்காகவுமே அமைந்திருக்கும். சீனாவின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பவர் களுக்கு அதன் இந்தப் போக்கை இலகுவில் இனம் கண்டுகொள்ள முடியும்.

சீனா தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு வல்லரசாகத் திகழ்கின்றது. அது உலகப் பந்தில் தன்னை தன்னிகரற்ற ஒரு வல்லரசாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நன்கு திட்டமிட்ட வகையில் அரங்கேற்றி வருகின்றது. அதன் ஓர் அம்சமாகத் தனது பொருளாதார வல்லமையை அதிகரித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் இந்த வல்லரசுப் போக்கிற்கு உலக நாடுகளையே சிப்பிலி ஆட்டித் தடுமாற வைத்துள்ள கொரோனா நோய்த் தொற்றுப் பேரிடர் சிறந்த வாய்ப்பாக அமைந்து விட்டது. இந்த வைரஸை சீனாவே உருவாக்கி ஓர் உயிரியல் ஆயுதமாக உலக நாடுகள் மத்தியில் பரவச் செய்திருக்கின்றது என்ற சந்தேகம் ஏற்கனவே சர்வதேச அளவில் எழுந்திருந்தமையும் கவனத்திற்குரியது.

கொரோனா நோய்ப் பேரிடரினால் பெரும் உயிரிழப்புகள் மட்டுமல்லாமல், உலக நாடுகள் தமது பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியையும், பாரிய பின்னடைவையும் கண்டிருக்கின்றன. ஆனால் சீனாவோ உலக நாடுகளின் இந்தப் பொதுவான போக்கில் இருந்து விலகி, பொருளாதாரத்தில் மேலும் வலுவுடையதாக மாறியிருப்பதைக் காண முடியும். அதேவேளை தவிச்ச முயலை அடிப்பதைப் போன்று பொருளாதாரச் சிக்கலில் சிக்கியுள்ள நாடுகளுக்கு கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியைத் தயாரித்து அதனை விநியோகம் செய்வதில் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அனுகூலங்களைப் பெற்று முன்னேறியிருக்கின்றது.

இத்தகைய பின்னணியில் சீனா தனது பட்டுப்பாதைத் திட்டத்தின் கீழ் இலங்கையையும் மாலைதீவையும் வளைத்துப் போட்டு இந்தியாவுக்குத் தொல்லை கொடுப்பதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்ட வகையில் அரங்கேற்றி வருகின்றது. அதன் ஓர் அம்சமாகவே இலங்கைக்கான சீனத் தூதுவரின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை நோக்க வேண்டியிருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. யுத்தத்தினாலும் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிப்பினாலும் பேரிழப்புக்கும், பெரும் துன்பங்களுக்கும் ஆளாகிய வடபகுதி மீனவர்களின் துயர நிலைமை இதுகால வரையிலும் சீனாவின் கண்களுக்குப் புலப்படவில்லை.

பன்னிரண்டு ஆண்டுகளின் பின்னர் 2021 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில்தான் சீனாவுக்கு வடபகுதி மீனவர்களின் நிலைமை குறித்த ஞானோதயம் பிறந்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒடோடிச் சென்றுள்ளது. அதற்காகத் தனது இலங்கைக்கான தூதுவரைத் தமிழர்களின் கலசாரப்படி வேட்டியணிந்து வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலயத்திற்குள் மேற்சட்டையின்றி வெறும் மேலுடன் பிரவேசித்து பக்தி கொண்டாடுவதற்கும் அதனைத் தொடர்ந்து வடபகுதி மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அனுப்பி வைத்துள்ளது.

வடபகுதி மீனவர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியினால் குறிப்பாக மடிவலைகளைப் பயன்படுத்தி ட்ரோலர் படகுகளில் மின்பிடிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய வடமாகாண மாவட்டங்களைச் சேர்ந்த வடபகுதி மீனவர்கள் அனைவருமே இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்திய மீனவர்களின் வருகையை இவர்கள் அனைவருமே ஒன்றிணைந்து கண்டித்திருக்கின்றார்கள். அவர்களின் வருகையைத் தடை செய்ய வேண்டும் தாங்கள் தங்களுடைய கடலில் எந்தவித இடையூறுமின்றித் தொழில் செய்ய வேண்டும் என்பதே அந்த மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

அது மட்டுமல்லாமல் ட்ரோலர் மீன்டிபிடியின் மூலம் கடலின் அடிமட்டம் வரையில் மீன்களையும் மீன் குஞ்சுகளையும் அவற்றின் முட்டைகளையும் வழித்தெடுத்துச் செல்கின்ற இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளினால் தமது கடல் வளம் தங்களுடைய கண்களின் முன்னால் அழிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. இந்திய மீனவர்களின் இந்த நடவடிக்கையினால் தமிழகத்தின் கடல் வளம் ஏற்கனவே அழிக்கப்பட்டு அந்தக் கடல் மலடாகிப் போயிருக்கின்றது. அதனையடுத்தே கடல் வளம் மிகுந்த இலங்கையின் கடற்பரப்பினுள் கரையோரம் வரையிலும் கட்டுப்பாடற்ற நிலையில் தமிழக மீனவர்கள் வந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இந்த வகையில் வடபகுதியின் பல பிரதேசங்களிலும் மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் மீனவர்களின் பரிதாப நிலைமை மட்டுமே சீனாவின் கண்களை உறுத்தியிருக்கின்றது. அதனால்தான் அந்த இரண்டு மாவட்ட மீனவர்களுக்கு மட்டுமே சீனா நிவாரணங்களை வழங்கியுள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கை உண்மையிலேயே வடபகுதி மீனவர்கள் மீது மனிதாபிமான ரீதியில் அனுதாபம் கொண்ட ஒரு நடவடிக்கையல்ல. அதேவேளை, சீனாவிடம் வடபகுதி மீனவர்களோ அவர்களுக்காகச் செயற்படுகின்ற அமைப்புக்களோ உதவி செய்யுமாறு கோரவும் இல்லை. இந்த நிலையில் அது தனது பிராந்திய வலிமையை மேம்படுத்திக் கொள்வதற்கான தன்னலம் கொண்ட நோக்கத்துடனேயே யாழ்ப்பாணம், மன்னார் மீனவர்கள் மீது அனுதாபம் காட்டிச் செயற்பட்டிருக்கின்றது.

இந்தச் செயற்பாட்டின் முக்கிய அம்சமாக, இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள வடமராட்சிப் பிரதேசத்தின் பருத்தித்துறை மற்றும் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் ஆகிய கடற்கரைகளில் சீனத் தூதுவர் வடபகுதிக்கான தனது விஜயத்தின்போது, அதீத கவனம் செலுத்தியுள்ளார்.

பருத்தித்துறை கடலோரப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் அங்கிருந்து இந்தியா எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை விசாரித்து அறிந்து கொண்டுள்ளார். இந்தியாவுக்கும் பருத்தித்துறை கடற்கரைக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை அறிவியல் தொழில்நுட்பத்தில் நன்கு வளர்ச்சியடைந்துள்ள சீனாவின் தூதுவர் பருத்தித்துறைக்குச் சென்றுதான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. அல்லது அந்த விடயத்தை அவர் அறிந்திருக்கமாட்டார் என்று கூறுவதற்குமில்லை.

ஆனால் அப்பாவித்தனமாக இந்தியாவுக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான தூரத்தை ஓர் உல்லாசப் பயணியின் ஆர்வ நிலையில் அறிந்து கொள்ள முயன்றதைப் போன்று இந்தக் கேள்வியை அவர் அங்கு கேட்டு விபரமறிந்துள்ளார். அது மட்டுமல்லாமல் ட்ரோன் கமராவைப் பயன்படுத்தி பருத்தித்துறைக் கடலோரப் பகுதிகளை சீனக்குழுவினர் பதிவு செய்திருப்பதையும் ஒரு சாதாரணச் செயற்பாடாகக் கருத முடியாது.

அதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் தலைமன்னாருக்கும், தமிழகக் கடலோரத்திற்கும் இடையில் அமைந்துள்ள இராமர் அணை என்று குறிக்கப்படுகின்ற மணல் திட்டுக்கள் அமைந்துள்ள பிரதேசத்தையும் கடற்படையினருடைய வேகப்படகில் சென்று அவதானித்துள்ளார்.

அந்த மணற்திட்டுக்களில் மூன்றாவது திட்டைச் சென்றடைந்து அங்கிருந்து இந்தியா எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதையும் கணித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அந்த மணற்திட்டில் இறங்கி சுமார் அரை மணித்தியாலம் வரையிலான நேரத்தை அவர் செலவிட்டிருந்தார் என்றும் கூறப்படுகின்றது. பருத்தித்துறை கடலோரப்பகுதிகளை ட்ரோன் கமராவில் பதிவு செய்ததைப் போன்று தலைமன்னார் மணற்திட்டுப் பகுதிகளையும் சீனக்குழுவினர் பதிவு செய்திருக்கக் கூடும்.

மொத்தத்தில் வட திசையில் இலங்கை இந்தியக் கடலோரப் பிரதேசத்தைக் கண்காணிப்பதற்கும் அங்கு தனது செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்குமாகவே சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னார் கடலோரப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருக்கின்றார் என்று ஊகிக்க முடிகின்றது.

இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் எல்லை தாண்டிய மீன்பிடியினால் எழுந்துள்ள முரண்பாடானது, சாதாரணத் தொழில் ரீதியான முரண்பாடல்ல. அது இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் மிக்கதோர் அரசியல் பிரச்சினையாகப் பரிணமித்துள்ளது. இந்த நிலையில் அந்தப் பிரச்சினையின் நிலைக்களனாக உள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவரின் நகர்வை சீன இந்திய வல்லரசுப் போட்டியுடன் தொடர்புப்படுத்தி நோக்கச் செய்திருக்கின்றது.

இலங்கை அரசுக்கும் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடாகிய இனப்பிரச்சினையில் இந்தியா இந்த வகையிலேயே தலையீடு செய்தது. இதனை மறக்கவும் முடியாது. மறக்கவும் முடியாது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பாடாமையினால் தமிழ்த் தலைவர்கள் தனிநாடு கோர நிரப்பந்திக்கப்பட்டார்கள். அதனையடுத்து, இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டுதல் ஏற்பட்டது.

இந்த கந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய இந்தியா இலங்கை விவகாரத்தில் அந்நிய சக்திகள் வெளியில் இருந்து தலையீடு செய்வதற்கான வாய்ப்பை அடையாளம் கண்டு கொண்டது. அத்தகைய நிலைமையொன்று உருவாகினால் தனது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ஊகித்திருந்தது. அதற்கு இடமளிக்காத வகையில் செயற்பட வேண்டும் என்று இந்தியா தீர்மானித்தது, அதன் விளைவாகவே இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தமிழ் இளைஞர்களைத் தம் வசப்படுத்தி அவர்களுக்கான ஆயுதப் பயிற்சிகளை வழங்கி பல தமிழ் ஆயுதக் குழுக்களை உருவாக்கினார். அந்த உருவாக்கத்தின் விளைவாக இலங்கைப் படைகளுக்கும் தமிழ் இளைஞர்களுக்கும் ஆயுத மோதல்கள் தீவிரமாகியது.

அதனை அடக்கி ஒடுக்குவதற்காக இலங்கை அரசு மேற்கொண்ட வலிமையான இராணுவ நடவடிக்கையாகிய ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்திய யாழ் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி தலையீடு செய்தது. அதன் தொடர்ச்சியாகவே இலங்கை இந்திய ஒப்பந்தம் நிறைவேறியது.

அந்த ஒப்பந்தத்தில் ஆயுத முரண்பாட்டில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட தரப்புக்களிடையே ஒப்பந்தம் செய்வதற்குப் பதிலாக தமிழர்களின் சார்பில் இந்தியாவே அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தன்னை பங்காளியாக்கிக் கொண்டது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்குக் குறைந்த அளவிலான அதிகாரப் பகிர்வுக்கு இந்த ஒப்பந்தம் வழியேற்படுத்தி இருந்தது. தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையாகிய வடக்கு கிழக்கு இணைப்பையும் தற்காலிக இணைப்பாகவே இந்திய அரசின் இனப்பிரச்சினைத் தீர்வில் உள்ளடக்கியது. அந்தத் தற்காலிக இணைப்பை நிரந்தரமாக்க விடாமல் இலங்கை அரசு தடுத்து விட்டது. அது மட்டுமல்லாமல் ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வடக்கையும் கிழக்கையும் தனித்தனி மாகாணங்களாக நிரந்தரமாகப் பிரித்துவிட்டது.

இற்த நிலையில் இனப்பிரச்சினையை இழுபறி நிலைக்குத் தள்ளியுள்ள இலங்கை அரசு சீனாவை வடமாகாணத்திற்குள்ளே பிரவேசித்து அந்த மாகாண மக்களுக்கிடையில் ஊடுருவுவதற்கான வாய்ப்பையும் சீனத் தூதுவரது யாழ் விஜயத்தின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்டபோது அதனைத் தமிழ் மக்கள் வரவேற்றிருந்தார்கள். இலங்கை அரசு அதனை விரும்பாத போதிலும், இந்தியாவின் அழுத்தத்திற்கு அடிபணிய வேண்டியதாயிற்று.

ஆனால் சீனாவின் விடயத்தில் தமிழ் மக்கள் விரும்பாத போதிலும் இலங்கை அராசங்கம் அதற்கு ஆதரவளித்திருக்கின்றது. இலங்கை அரசினதும், சீனாவினதும் அழுத்தத்திற்குத் தமிழ் மக்கள் ஈடு கொடுக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

வடபகுதி மீனவர்கள் நிவாரணமாக மீன்பிடி வலைகளையும், உணவுப் பொதிகளையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் வருகையை நிறுத்த வேண்டும். இறைமையுடன் கூடிய அதிகாரத்துடனும் சுதந்திரத்துடனும் தங்கள் கடலில் தாங்கள் மீனிபிடிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பாகும். அவர்களுடைய எதிர்பார்ப்பை இலங்கை அரசோ அல்லது சீனாவோ நிறைவேற்றப் போவதில்லை. மாறாக இந்தியாவக்கு எதிரான சீனாவின் நகர்வுகளுக்கு இடமளித்து சோரம் போகின்ற நிலைமைக்கே வடபகுதி மீனவர்களும், தமிழ் மக்களும் ஆளாக நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.

அத்தகைய நிலைமையானது இந்தியாவுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் அதனையொட்டிய சீன இந்திய முறுகல் நிலைமைகள் மேலும் தீவிரமடையச் செய்கின்ற ஒரு சூழ்நிலையையே உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

Exit mobile version