இலங்கையின் தென் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வரும் சீனாவின் பிரசன்னத்தினால் தமிழகத்தில் நிகழும் தீமைகள் – பாஸ்கர்

இலங்கையிலும், இந்தியப் பெருங் கடலைச் சார்ந்தும் சீனாவின் ஆதிக்கம் கடந்த பத்து ஆண்டு களுக்கும் மேலாக ஓங்கி வருவது நமக்குத் தெரிந்ததே. குறிப்பாக 2009ஆம் ஆண்டு ஆயுதப் போரிற்குப் பின் தமிழர்களின் இருப்பிடமும், அவர்களின் அரசியல் மற்றும் அதிகாரமும் சிங்கள அரசாங்கத்தின் முழுமையான கட்டுப் பாட்டுக்குள் வந்தது. அதனையடுத்து  சீனா, தன்னுடைய ஆதிக்கத்தைப் பொருளாதார ரீதியாகவும், கட்டுமானப் பணிகள் ஊடாகவும் தனது நகர்வுகளை இலங்கையில் முன்னெடுத்து உள்ளது. அதன் அடிப்படையில் தான் அம்பாந்தோட்டைத்  துறை முகம், கொழும்புத் துறைமுக நகரம், வடக்கில் உல்லாச விடுதிகள் கட்டுமானப் பணிகளை மேற் கொண்டுள்ளது. அத்தோடு இலங்கையின் வடக்கிற்கும், இந்தியாவின் தமிழகத்திற்கும்  அருகாமையில் எரிசக்தி எண்ணெய் கிணறுகள் சார்ந்த முதலீடுகள் என பல வகையான பொருளாதாரக் கட்டுமான, இராணுவ நடவடிக்கைகளை சீனா மேற் கொண்டுள்ளது.

இந் நிலையில், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம், தமிழகத் திற்கும், இந்தியா வுக்கும் எத்தகைய அச்சுறுத்தல்களை உருவாக்கலாம் என்பது தொடர்பான விளக்கம் ஒன்றைப் பெறுவதற்காக சென்னை பொதுமையர் பரப்புரை மன்றத்தைச் சேர்ந்த  பாஸ்கர் அவர்களிடம் ‘இலக்கு’ ஊடகத்தினர் நேர்காணல் ஒன்றைப் பெற்றிருந்தனர்.

கேள்வி- இலங்கையின் தென் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வரும் சீனாவின் பிரசன்னத் தினால் தமிழகத்தில் நிகழும் தீமைகள் என்ன?

பதில்- சீனாவானது இலங்கையில் வடக்குப் பகுதிக்கு  நகர்வதால், இந்திய ஆளும் வர்க்கத்தின் கண்ணோட் டத்தோடு ஒத்துப்போகும், இந்திய விரிவாதிக்க ஆதரவு – ஈழ ஆர்வலர்கள் மேலும் கூடுதலாக சீன எதிர்பபை முழங்குவார்கள்.

இது தமிழ் நாட்டுக்கும், ஈழத்துக்கும் பாதகமானது. சொல்லப் போனால் இத்தகைய ஈழ ஆர்வலர்கள், ஈழச் சிக்கலை இந்திய ஆளும் வர்க்கத்திடமே ஒப்படைப் பார்கள். 1980களில் ஈழச் சிக்கலை இந்திய விரிவாதிக் கத்திடம் ஒப்படைத்து, ஈழத்தை பலி கொடுத்ததைப் போலவே சீனாவின் இப்புதிய நகர்வை காட்டி அவ்வாறே செய்வார்கள்.

இந்திய விரிவாதிக்க ஆளும் வர்க்கமோ, இப்போது ஆளும் இந்திய ஆட்சியாளர்களோ ‘அகண்ட பாரத’ ஆட்சியாளர்களே. இவர்கள் இந்திய விரிவாதிக்க காங்கிரஸ் ஆட்சியாளர்களைக் காட்டிலும் அபாயகர மானவர்களே.

இவர்கள் சீனப் பூச்சாண்டியை பூதாகரமாக்கி, தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் இராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையில் ஜனநாயக உரிமைகளைப் பறித்து, அரச பயங்கர வாதத்தைக் கட்டவிழ்த்து விடுவார்கள்.

இம்மாவட்டங்களில் தான் இந்திய இராணு வத்துக்கான அணு மின் நிலையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) பல நிலையங்கள், கப்பற் படையின் நிலைகள் போன்றவற்றை ‘பாதுகாப்பது’ எனும் பெயரில் இந்த அரச பயங்கர வாதத்தைக் கட்ட விழ்த்து விட்டு தமிழ் நாட்டு மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் பெயரளவிலான ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்படும்.

இந்திய ஆட்சி யாளர்களின் அகண்ட பாரத நோக்கங்களின் எத்தனிப்புகளுக்கு எதிரான எதிர்வினையாய் எழக்கூடிய பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ‘கற்பனையான’ ஏவுகணைத் தாக்குதலைக் காரணமாக்கித் தான் இந்தியாவின் தென் கோடியில் மேற்காண் இராணுவ முக்கியத்துவம் நிறைந்த வற்றை அமைத்தார்கள்.

இப்பொழுதோ ‘அக் கற்பனையான’ ஏவுகணைத் தாக்குதல்களை உண்மையென்று காட்டுவதற்கு சீனாவின் நகர்வு நன்கு பயன்படும்.

மேலும் தமிழ் நாட்டில் ‘இராணுவ வழித்தடம்'(defence corridor) எனும் பெயரில் முக்கிய தொழில் நகரங்களில் இராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்படும் சூழலில் சீனாவின் நகர்வினால் இந்திய ஒன்றிய அரசின் கண்காணிப்பும், அடக்கு முறையும் அதிகரிக்கும்.

தமிழ் நாட்டில் ஒன்றிய அரசு/பாஜக எதிர்ப்பிலான உணர்வு அதிகமாக உள்ள சூழலில், சீனாவின் நகர்வானது ‘இந்திய தேசிய வெறி’யை கிளப்பவும் மிகவும் வாய்ப்பான சூழலை வழங்குகிறது.

இது தமிழ் நாட்டுக்கும், ஈழத்துக்கும் பாதகமானது. இந்தியாவின் ஆட்சியாளர்கள் தமிழ் நாட்டில் இல்லாத செல்வாக்கைப் பெறுவதற்கு சீனாவைக் காட்டி ஒரு வேளை ஈழத்திற்கு சாதகமாக ஏதாவது செய்வதற்கு ‘காட்டிக் கொண்டால்’ அது ஈழத்தை சீர் குலைக்கவே செய்யும்.

ஈழப் போராட் டத்தால் உந்துதலில் உள்ள தமிழ் நாடு விடுதலைக் கோரிக்கையும் சீர்குலைக்கப் படும். ஏனெனில் தமிழ் நாட்டில் ஏகப் பெரும்பான்மையான ஈழ ஆர்வலர்கள், தமிழ் நாட்டின் விடுதலைக்கான ஆர்வலர்களே.

1980களில் ஈழத்துக்காய் இந்தியா தலையிடுமாறு கோரியதைப் பயன் படுத்தி, இந்திய அமைதிப் படை அங்கு அனுப்பப் பட்டு, ஈழம் நசுக்கப் பட்டது. மோடியை வளர்த் தெடுத்த அத்வானி இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்த போது தான் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற விடாமல் இந்தியக் கப்பற்படை அக்கடற் பகுதியை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் 2008/2009இல் சீனாவைக் காட்டித் தான் இராஜபக்சே கும்பலோடு கூட்டுச் சேர்ந்து முள்ளிவாய்க்காலை உருவாக்கி னார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.

இப்பொழுதோ ஈழத்தில் சீனாவின் நகர்வானது, நீண்ட காலத்திற்கு நிலை கொள்ளப் போகும் நிலையில், இந்திய ஆட்சியாளர்கள் தமது கொல்லைப் புறமான (backyarb) இலங்கை / ஈழத்தையும் இந்துமா கடலையும் தமது பிடிக்குள் வைத்துக் கொள்வதற்கு அமெரிக்காவுடன் இணைந்து இந்துமா கடலை இராணுவ மண்டலமாக மேலும் சூடேற்று வார்கள்.

இந்நிலையில், சீனாவின் வட இலங்கை நோக்கிய நகர்வானது, தமிழ் நாட்டின் மக்களுடைய ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதற்கும், இந்திய தேசிய வெறியை ஊட்டு வதற்குமே   பயன்படும்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 இலங்கையின் தென் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வரும் சீனாவின் பிரசன்னத்தினால் தமிழகத்தில் நிகழும் தீமைகள் - பாஸ்கர்