Tamil News
Home உலகச் செய்திகள் பொது நபர் உட்பட மூவரை விண்வெளிக்கு அனுப்பியது சீனா

பொது நபர் உட்பட மூவரை விண்வெளிக்கு அனுப்பியது சீனா

பொது நபர் ஒருவர் உட்பட மூவரை சீனா (30) இன்று வெற்றிகரமாக விண் வெளிக்கு அனுப்பியுள்ளது. சிவிலியன் ஒருவரை சீனா விண்வெளிக்கு அனுப்பியமை இதுவே முதல் தடவையாகும்.

ஷெங்ஸோ -16 பயணத்திட்டத்தின் மூலம், ஸெங்ஸோ விண்கலத்தில், சீனாவின் தியான்கோங் விண்வெளி நிலையத்தை நோக்கி இவர்கள் அனுப்பப்பட்டனர்.

சீனாவின் வடமேற்குப் பிராந்தியத்திலுள்ள ஜியூகுவான் செய்மதி ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.31 மணிக்கு இவர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.

ஜிங் ஹெய்பெங்  தலைமையிலான இக்குழுவில், பொறியியலாளர் ஸு யாங்ஸு, மற்றும் சீனாவின் முதல் சிவில் விண்வெளியாளராக  பேராசிரியர் குய் ஹெய்சாவோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களை விண்வெளிக்கு ஏவும் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் விண்வெளியாளர்கள் அனைவரும் சிறந்த நிலையில் உள்ளனர் எனவும், மேற்படி ஏவுதளத்தின் பணிப்பாளர்  கூறினார்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சீனாவின் 4 ஆவது பயணம் இதுவாகும். ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்ததாக சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய 3 ஆவது நாடு சீனா ஆகும்.

இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கு சீனா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version