செஞ்சோலைப் படுகொலை: நீதியுமில்லை நியாயமுமில்லை நெடுந்துயராகவே தொடரும்…- பி.மாணிக்கவாசகம்

Sencholai செஞ்சோலைப் படுகொலை: நீதியுமில்லை நியாயமுமில்லை நெடுந்துயராகவே தொடரும்...- பி.மாணிக்கவாசகம்

அன்று, 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி. ஒரு திங்கட்கிழமை. காலை ஏழரை மணியிருக்கும். முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தை இலக்கு வைத்து, விமானப்படையினருடைய தாக்குதல் விமானங்கள் குறி தவறாமல் செஞ்சோலை மீது குண்டுகளை வீசித் தாக்கின.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நேரடி கவனத்தின் கீழ் செஞ்சோலையில் சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். அங்கு ஒருபோதும் இராணுவ ரீதியிலான செயற்பாடுகள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது, அங்கு பாடசாலை மாணவிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகளின் நூற்றுக்கும் மேற்பட்ட உயர்தர வகுப்பு மாணவிகள் அந்த பத்து நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்த மாணவிகளுக்கான பயிற்சிகளை வழங்கிய வளவாளராகிய ஆசிரியை ஒருவர் வீரச்சாவடைந்திருந்ததனால், அன்றைய தினம் வழமைபோல காலையிலேயே பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்வில்லை. மாணவிகளும் சிறுவர் இல்லப் பிள்ளைகளும் அநேகமானோர் கட்டிடத்தின் உள்ளேயே இருந்தனர். இல்லையானால் உயிர்ச்சேதம் மிக அதிகமாக இருந்திருக்கும் என்று இந்தத் தாக்குதலில் இருந்து படு காயங்களுடன் உயிர்தப்பிய சிவநேசன் மிருணாளினி தெரிவித்தார்.

இரைச்சலுடன் வானில் விரைந்து வந்த குண்டுத் தாக்குதல் விமானங்களின் வருகையை உணர்ந்த மாணவிகளும் பிள்ளைகளும் எச்சரிக்கை அடைந்தனர். ஆயினும் அடுத்தடுத்து இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் எல்லாமாக அந்த இல்லத்தின் பணியாளர்களாகிய இருவர் உட்பட 61 பேர் மாண்டு போயினர். 130க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அதையும்விட சிலர் சிறுகாயங்களுக்கும் ஆளாகினர். பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் 16 தொடக்கம் 18 வயதுடையவர்கள். சம்பவ இடத்திலேயே 52 பேர் துடிதுடித்து மரணமானார்கள் என்பது மிக சோகமானது.

இந்தத் தாக்குதலையடுத்து, சிறுவர்களின் நலன்களுக்கான ஐநா மன்ற அமைப்பாகிய யுனிசெவ், அப்போது யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நொர்வேயின் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் மற்றும் செஞ்சிலுவைக் குழு போன்ற சர்வதேச அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகள் சம்பவ இடத்தை உடனடியாகச் சென்று பார்வையிட்டு நிலைமைகளை மதிப்பிட்டிருந்தனர்.

இவர்களில் எவருமே செஞ்சோலை ஓர் இராணுவ இலக்காக அடையாளம் காணவில்விலை. மாறாக அந்தத் தளம் ஒரு சிவிலியன் இலக்கு என்றும் உண்மையிலேயே அங்கு தலைமைத்துப் பயிற்சிக்காக வருகை தந்திருந்த பாடசாலை மாணவிகளே இரக்கமற்ற நிலையில் படையினரின் வான் தாக்குதல்களுக்கு இலக்காகியிருந்தனர் என உறுதிப்படுத்தி இருந்தனர்.

ஆனாலும் அரசாங்கம் அந்த உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளவில்லை. அரச பேச்சாளராக இருந்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, நான்கு வருடங்களாக அந்த இடத்தைத் தாங்கள் கண்காணித்து வந்ததாகவும் அது விடுதலைப்புலிகளின் இராணுவப் பயிற்சித் தளமாக இயங்கி வந்ததாகவும், அந்தப் பயிற்சித் தளத்தின் மீதே  விமானப்படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, அங்கு விரைந்த யுனிசெவ் நிறுவனப் பிரதிநிதிகள் காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்வதற்கான எரிபொருள் மற்றும் வைத்தியசாலைகளுக்குத் தேவையான அவசர மருந்துகள் மற்றம் உபகரணங்கள் என்பவற்றை வழங்கி உதவியிருந்தனர்.

செஞ்சோலை மீதான தாக்குதல் அரசாங்கம் கூறியதைப் போன்ற திட்டமிட்ட ஒரு தாக்குதலாகவே நடத்தப்பட்டிருந்தது, அது தற்செயலாக இலக்குத் தவறிய ஒர் இராணுவ தாக்குதலாக நடைபெறவில்லை என்பதை அரசாங்கமே உறுதிப்படுத்தி இருந்தது. இதனால் இந்தத் தாக்குதல் இளம் சந்ததியினர் மீதான இன அழிப்பு நோக்கத்திலான தாக்குதல் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் – பயங்கரவாதத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கை என்ற ரீதியில் விடுதலைப்புலிகள் மீது ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்களில் தமிழ் மக்களை எந்த அளவுக்கு அழிக்க முடியுமோ அந்த அளவுக்கு அழித்துவிட வேண்டும் என்ற குரூரம் இழையோடி இருந்ததை இதன் மூலம் உணர முடிகின்றது.

செஞ்சோலை மீதான தாக்குதல் அப்பட்டமாக ஒரு மனிதாபிமானம் அற்ற மனுக்குலத்திற்கு எதிரான தாக்குதல் என்று உள்ளுரிலும் சர்வதேச அளவிலும் பலரும் கண்டித்திருந்தனர். இந்தக் கண்டனங்கள், அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான ,யுத்தம் என்ற யுத்தத்திற்கான நியாயம் வலுவிழந்து போனது. தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அழித்துவிட வேண்டும் என்ற ஆட்சியாளர்களினதும், அரச படைகளினதும் மறைநிலை நிகழ்ச்சி நிரலின் அப்பட்டமான வெளிப்பாடாகவே செஞ்சோலைப் படுகொலைத் தாக்குதல் அமைந்திருந்தது. அமைந்திருக்கின்றது.

பொறுப்பற்ற முறையில் சிவிலியன் இலக்காகிய பாடசாலை மாணவிகள் மீது செஞ்சோலையில் நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக அப்போதைய அரசாங்கமும், அரச படையினரும் தரம் தாழ்ந்த நிலையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். செஞ்சோலைப் படுகொலைத் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லைத்தீவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று மாணவிகளை மேற்சிகிச்சையின் தவிர்க்க முடியாத அவசரத்தின் அடிப்படையில் அங்கிருந்த வைத்தியர்கள் கண்டி மருத்துவமனைக்கு இடம் மாற்றம் செய்திருந்தனர்.

ஆனால் கண்டியில் இனந்தெரியாத காரணங்களுக்காக அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. சில நாட்களில் வவுனியா மருத்துவமனையின் ஊடாக அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்காக அந்த மூவரும் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். வவுனியாவுக்குக் கொண்டு வரப்பட்டவர்களில் தம்பிமுத்து தயாளினி என்ற மாணவி வவுனியா மருத்துவமனையில் மரணமானார். அவருடைய மரணம் தொடர்பிலான மருத்துவ பரிசோதனையில் வவுனியாவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தினாலேயே அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த மாணவியின் மரணத்தையடுத்து, ஏனைய இரண்டு மாணவிகளையும் புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்று கண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் அத்துடன் அந்த இருவரையும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விடவில்லை. அவர்களை கொழும்புக்கும் மற்றும் தங்களுக்குத் தேவையான இடங்களுக்கும் கொண்டு சென்று அசாங்கத்திற்கு சார்பான முறையில் அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றதுடன், அரச தொலைக்காட்சியில் அவர்களைக் காட்டி விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களையும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையிலான கருத்துக்களையும் அவர்களிடம் இருந்து வெளிப்படச் செய்திருந்தனர்.

எதிர்பாராத வகையில் பேரதிர்ச்சி அளிக்கும் விதத்திலான விமானக் .குண்டுத் தாக்குதலில் காயமடைந்த இந்த பதின்பராயத்தினரை மனித நேயத்திற்கு மாறான வகையில் தமது அரசியல் மற்றும் போரியல் பிரசாரத்திற்காக அரசாங்கமும், அரச புலனாய்வாளர்களும் பயன்படுத்தி இருந்தனர்.

அது மட்டுமல்லாமல் விமானக்குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த அவர்களைக் கைது செய்து இரக்கமின்றி தடுத்து வைத்திருந்தனர். இவர்களின் இருப்பிடங்களை அவர்களது பெற்றோர்கள் அறிந்து கொள்ள முடியாத வகையில் அவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலைமை இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்தது, அக்காலப் பகுதியில் அடையாளம் தெரியாத இடங்களுக்கு அந்த மாணவிகளின் பெற்றோர்கள் சில தடவைகள் அழைத்துச் செல்லப்பட்டு காட்டப்பட்டிருந்தனர். இதனை, செஞ்சோலை மீது மேற்கொண்ட படுகொலைத் தாக்குதலிலும் பார்க்க ஒரு படி மேலான கொடூரம் என்றே கூற வேண்டும்.

செஞ்சோலைப் படுகொலை நடைபெற்று பதினாறு வருடங்கள் கடந்துவிட்டன. வருடந்தோறும் அந்த சம்பவம் தமிழ் மக்களால் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் துடிக்கும் இதங்களுடன் நினைவுகூரப்பட்டு வருகின்றது. இந்தப் படுகொலைச் சம்பவம் உலக அளவில் பெரும் கண்டனத்;துக்கு உள்ளாகியிருந்த போதிலும், அந்த அநியாயத்திற்கு இதுவரையில் நியாயம் கிடைக்கவில்லை. அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இதனால் செஞ்சோலைப் படுகொலைகள் காலம் காலமாக தமிழ் மக்களின் மனங்களில் அழியாத சோகச் சுவடாகவே பதிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.