எது மக்களுக்கான அரசியல் ;செயலில் காட்டிய ஆப்பிரிக்க ஷே குவேரா- தமிழில் ஜெயந்திரன்

“மேல் வோல்ற்றா” என அழைக்கப்பட்ட தனது நாட்டுக்கு, “புர்க்கீனா பாசோ”என்ற புதிய பெயரைச் சூட்டி, அதிகாரத்தில் அமர்ந்த தோமஸ் சங்காரா, நான்கே நான்கு ஆண்டுகளில் (1983 –  1987) தனது நாட்டில் சாதித்த விடயங்கள் பிரமிப்புக்குரியவை.

தோமஸ் இசிதோர் நோயெல் சங்காரா (21 டிசம்பர் 1949 – 15 ஒக்ரோபர் 1987) புர்க்கீனாபே மக்களின் இராணுவத் தலைவன்,காள் மார்க்ஸின் கொள்கைகளைப் பின்பற்றும் ஒரு புரட்சியாளன்.

ஆபிரிக்க மக்கள் அனைவரும் இணைய வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டவர் என்பவற்றுடன் 1983 இலிருந்து 1987 வரை புர்க்கீனா பாசோவின் அதிபராக விளங்கியவர். அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஆளுமையைக் கொண்டவரும் புரட்சியின் அடையாளமாகவும் விளங்கியவருமான சங்காரா,ஆபிரிக்காவின் “ஷே குவேரா” என அழைக்கப்படுகிறார்.

மூளைக்காய்ச்சல்,மஞ்சட் காய்ச்சல்,தட்டம்மை போன்ற நோய்களுக்கு எதிரான தடுப்பு மருந்தை 25 இலட்சம் பிள்ளைகளுக்கு ஒரு சில வாரங்களில் வழங்கியவர்.

எழுத, வாசிப்பதற்கான பரப்புரையை நாடளாவிய வகையில் மேற்கொண்டு, 1983 – 1987ம் ஆண்டுகளுக்கிடையில் எழுத வாசிக்கும் வீதத்தை 13 இலிருந்து 73 ஆக உயர்த்தியவர்.

நிலம் வரண்டு பாலைவனமாவதைத் தடுப்பதற்காக, ஒரு கோடிக்கு மேலான மரங்களை நட்டவர்.

தனது நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைப்பதற்காக, வெளிநாட்டு உதவிகள் எதுவுமின்றிவீதிகளையும் தொடர்வண்டிப் பாதைகளையும் நிர்மாணித்தவர்.

பெண்களை அரசின் உயர் பதவிகளில் அமர்த்தியவர்,அவர்களை வேலை செய்ய ஊக்குவித்தவர்,இராணுவத்தில் அவர்களை இணைத்தவர். கல்வி கற்கும் போது பிரசவ கால விடுமுறையை வழங்கியவர்.

பெண் உரிமையைப் பேணுவதற்காக, பெண் பிறப்புறுப்புச் சிதைவு,கட்டாயத் திருமணம்,பலதாரத் திருமணம் போன்றவற்றைத் தடைசெய்தவர்.

அரசிடம் அந்த நேரத்தில் இருந்த மிகவும் விலையுயர்ந்த “மேர்சிடஸ்” வகையைச் சார்ந்த அனைத்து மகிழுந்துகளையும் விற்று,புர்க்கீனா பாசோவில் அப்போது மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட்ட “றெனோ 5” வகை மகிழுந்துகளை அமைச்சர்களுக்கான உத்தியோக பூர்வ மகிழுந்தாக்கியவர்.

front எது மக்களுக்கான அரசியல் ;செயலில் காட்டிய ஆப்பிரிக்க ஷே குவேரா- தமிழில் ஜெயந்திரன்

தனது வேதனம் உட்பட அனைத்து அரச ஊழியர்களதும் வேதனங்களையும் குறைத்ததோடு விமானத்தில் முதல் வகுப்பில் பயணஞ்செய்யும் சலுகையையும் அரச சாரதி வேலையையும் தடைசெய்தவர்.

நிலப்பிரபுக்கள் கையிலிருந்து நிலங்களை மீட்டெடுத்து அவற்றை சாதாரண மக்களுக்குப் பகிர்ந்தளித்தவர், இவ்வாறு கோதுமை உற்பத்தியை மூன்று வருடங்களில் ஒரு ஹெக்டேயருக்கு 1700 கிலோ கிராம் என்ற நிலையிலிருந்து 3800 கிலோ கிராமுக்கு உயர்த்தி,நாட்டை உணவில் தன்னிறைவைக் காண வழிவகுத்தவர்.

“உங்களுக்கு உணவைக் கொடுப்பவரே பின்னாளில் உங்களைக் கட்டுப்படுத்துகிறவராக மாறுகின்றார்” என்று கூறி, வெளிநாட்டு நிதியுதவிக்கு எதிர்ப்பை வெளியிட்டவர்.

மேற்கத்தைய வணிகம்,நிதியுதவி என்பவற்றூடாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் நவகாலனித்துவ கொள்கைக்கு எதிராக, “ஆபிரிக்க ஒன்றிணைவுக்கான அமைப்பு” போன்ற தளங்களில் குரலெழுப்பியவர்.வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்துவதை நிராகரிப்பதற்காக,ஆபிரிக்க நாடுகள் தமக்கிடையே ஒன்றுபடவேண்டும் என அழைப்பு விடுத்தவர்.

ஏழைகளும் சுரண்டப்பட்டவர்களும் செல்வந்தர்களுக்கும் சுரண்டுபவர்களுக்கும் கடனை மீளச் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனத்தெரிவித்தவர்.

நாட்டின் தலைநகரமான “குவாகாடூகுவில்”அமைந்திருந்த இராணுவத்தினருக்கான உணவுப்பொருள் வழங்கும் களஞ்சியத்தை,அனைவருக்கும் பொதுவான பல்பொருள் அங்காடியாக மாற்றியமைத்தவர்.

அரச ஊழியர்கள் தங்கள் ஒரு மாதச் சம்பளத்தை அரச திட்டங்களுக்குக் கொடுக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியவர்.D0qZORNX4AEY2RS எது மக்களுக்கான அரசியல் ;செயலில் காட்டிய ஆப்பிரிக்க ஷே குவேரா- தமிழில் ஜெயந்திரன்

குளிரூட்டலுக்கான வசதிகள், ஒரு சில புர்க்கீனா வாசிகளுக்கே இருக்கின்றன என்று சொல்லி தனது பணிமனையிலிருந்த குளிரூட்டும் சாதனத்தை உபயோகிக்க மறுத்தவர்.

தனது வேதனத்தை 450 டொலர்களாகக் குறைத்ததுடன், ஒரு மகிழுந்து, நான்கு உந்துருளிகள், மூன்று கிற்றார்கள் என தனது உடைமைகளை மட்டுப்படுத்தியவர்.

உந்துருளிப் பிரியரான அவர்,தனது பாதுகாப்புக்காக முற்றுமுழுதாகப் பெண்களை உள்ளடக்கிய உந்துருளிப் படையை உருவாக்கியவர்.

உள்ளுர் உற்பத்தியையும் உள்ளுர் அடையாளத்தையும் ஊக்குவிப்பதற்காக புர்க்கினாபே பருத்தியைக் கொண்டு,புர்க்கீனா தொழிலாளிகளினால் நெய்யப்பட்ட பாரம்பரிய ஆடையை அரச உத்தியோகத்தர்கள் அணிய வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியவர்.

ஏனைய ஆபிரிக்க தலைவர்களைப் போல் பகிரங்கமான இடங்களில் தனது உருவப்படத்தை வைப்பதற்கு ஏன் விரும்பவில்லை என்று கேட்கப்பட்ட போது,எழுபது இலட்சம் தோமஸ் சங்காராக்கள் நாட்டிலே இருக்கின்றார்கள் எனப் பதிலிறுத்தவர்.

கிற்றார் வாத்திய விற்பன்னரான சங்காரா,புதிய தேசிய கீதத்தை தானே தன்கைப்பட எழுதியவர்.

எது மக்களுக்கான அரசியல் ;செயலில் காட்டிய ஆப்பிரிக்க ஷே குவேரா- தமிழில் ஜெயந்திரன்

ஊழலையும, முன்னைய காலனித்துவ சக்தியான பிரெஞ்சு அரசின் அதிகாரத்தையும் இல்லாதொழிப்பதற்காக, நாட்டு மக்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் 1983ம் ஆண்டு,தனது 33வது வயதில் சங்காரா ஆட்சியைப் பிடித்தார்.

ஆபிரிக்க கண்டத்தில் முன்னெப்பொழுதுமே முன்னெடுக்கப்படாத சமூக மற்றும் பொருண்மிய மாற்றங்களுக்கான மிகவும் பாரிய திட்டங்களை,தான் பதவியேற்ற தருணத்திலிருந்தே ஆரம்பித்தார் சங்காரா.

இப்புதுப்பிறப்பையும் புதிய தன்னாட்சியையும் அடையாள ரீதியாக வெளிக்கொணர்வதற்காக ‘’மேல் வோல்ற்றா’’ என அழைக்கப்பட்ட தனது நாட்டின் பெயரை ‘’மாண்புமிக்க மனிதர் வாழும் நாடு’’ எனப் பொருள்படும் ‘’புர்க்கீனா பாசோ’’ என்று மாற்றினார்.

சங்காராவின் வெளிநாட்டுக்கொள்கைகள் ஏகாதிபத்திய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டவை. அவரது அரசு, அனைத்து வெளிநாட்டு நிதியுதவியையும் தவிர்த்ததுடன் பாரிய கடன் குறைப்பை வலியுறுத்தியது.SANKAEA FEDAL எது மக்களுக்கான அரசியல் ;செயலில் காட்டிய ஆப்பிரிக்க ஷே குவேரா- தமிழில் ஜெயந்திரன்

அனைத்து நிலங்களும் கனிம வளங்களும் அரச உடைமையாக்கப்பட்டதுடன் பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய நிறுவனங்களின் செல்வாக்கை தவிர்க்கத்தொடங்கியது.

பட்டினியைப் போக்குவது, விவசாயத்தில் தன்னிறைவு, நிலக்கொள்கைச் சீரமைப்பு, கல்வியறிவை ஊக்குவித்தல் போன்ற அணுகுமுறைகளை அவரது உள்நாட்டுக்கொள்கைகள் கொண்டிருந்தன.

மிகவும் அடிப்படையான இந்த மாற்றத்தை சமூகத்தில் தோற்றுவிப்பதற்காக, நாட்டின் மீது தனது ஆட்சியதிகாரத்தை சங்காரா இறுக்கியதுடன் தனது திட்டங்களைச் செயற்படுத்த தடையாக இருக்கின்றன எனத் தான் கருதிய தொழிற்சங்கங்களையும் சுதந்திர ஊடகங்களையும் தடைசெய்தார்.

நகரங்களிலும் தொழிற்தளங்களிலும் தனக்கு எதிராக உருவாகும் எதிர்ப்புக்களைச் முறியடிப்பதற்காக ‘’புரட்சிக்கு எதிரானவர்களையும்’’ மற்றும் ‘’சோம்பேறித் தொழிலாளர்களையும்’’ பகிரங்கமாக புரட்சி நீதிமன்றுகளில் நிறுத்தத் தொடங்கினார்.

மேலதிகமாக பீடெல் காஸ்ற்றோவின்  கியூபா  நாட்டுப் புரட்சியின் அபிமானி என்ற வகையில் புரட்சியைப் பாதுகாப்பதற்காக  கியூபா வடிவிலான குழுக்களை ஏற்படுத்தினார்.

ஆபிரிக்காவை தனது சொந்தக் காலில் நிற்க வைப்பதற்கான சங்காராவின் புரட்சிச் செயற்றிட்டங்கள்,  ஆபிரிக்காவின் ஏழை மக்கள் போற்றுகின்ற ஓர் தலைவனாக அவரை அடையாளங் காட்டின.

அந்த ஏழை மக்கள் நடுவில் சங்காரா மிகவும் பிரபல்யமான ஒருவராகத் திகழ்ந்தார். இவை எவ்வாறு இருப்பினும்  அவரது கொள்கைகள், தங்கள் சொந்த நலன்களில் அக்கறைகொண்டிருந்த பலவிதமான குழுக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கத் தொடங்கின.

சிறிதாக இருந்தாலும் பலம் வாய்ந்தாக இருந்த,புர்க்கினாவே நடுத்தர வர்க்கத்தினரதும் மற்றும் கட்டாய வேலை வாங்கும் உரிமை பறிக்கப்ட்ட பழங்குடித்தலைவர்கள், பிரான்சு நாடு, அயல் நாடான ஐவறி கோஸ்ட் போன்றவற்றின் எதிர்ப்பையும் சம்பாதிக்கும் நிலைக்கு சங்காரா தள்ளப்பட்டார்.

இந்த எதிர்ப்புகளின் காரணமாக, 1987ம் ஆண்டு, ஒக்ரோபர் 15ம் திகதி அவரது முன்னாள் நண்பராக இருந்த ‘’பிளேஸ் கொம்பவுரே’’ என்பவரால் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் சங்காரா கொலைசெய்யப்பட்டார். HERO எது மக்களுக்கான அரசியல் ;செயலில் காட்டிய ஆப்பிரிக்க ஷே குவேரா- தமிழில் ஜெயந்திரன்

(இந்த படுகொலையின் பின்னணியில் பிரான்ஸ் தேசம் இருந்தது என்பது பெரிதும் பேசப்படாத உண்மையாக இருக்கிறது என்கிறார்கள் நோக்கர்கள். – மொ-ர்)

தனிநபர்கள் என்ற வகையில் புரட்சியாளர்களைக் கொல்லமுடியுமே ஒழிய,அவர்களது எண்ணங்களை ஒருபோதுமே கொல்ல முடியாது”

என்று கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முதல் தோமஸ் சங்காரா தெரிவித்திருந்தார்.

 

நன்றி – அல்ஜசீரா