சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு கூரப்பட்டது குறித்து விசாரணை

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் கடந்த 09-09-2021அன்று அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எதிராக காவல்துறை விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மட்டக்களப்பு தலைமையக காவல்துறைக்கு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான த.கௌரி மற்றும் துரைசிங்கம் மதன் ஆகியோர் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

என்ன நோக்கத்திற்காக குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டீர்கள்  என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாகவும்   மதன் தெரிவித்துள்ளார்.

சத்துருக் கொண்டான் படுகொலை தொடர்பில் ஆதாரங்களுடன் சாட்சியங்கள் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், விளக்கேற்றியமை குறித்து விசாரணைகள் நடாத்தப்படுவது இந்த நாட்டின் சட்ட நிலைமையினை கேள்விக் குட்படுத்தியுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த விசாரணைக்குட்படுத்தப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் த.கௌரி,

கடந்த 09.09.1990 அன்று மட்டக்களப்பு சத்துருகொண்டான் பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் மாலை வேளையில் அப்பாவி பொதுமக்களை ஒன்று கூடல் என்ற பெயரின் சத்துருகொண்டான் காவல்துறை முகாமிற்கு அழைத்துச் சென்று அவர்களை படுகொலை செய்யபட்டதாக கூறப்படுகிறது .

இது தொடர்பாக பல ஆதாரங்கள் வெளி வந்தும் இதற்கான நீதி கிடைக்கவில்லை என்று வருடா வருடம் கண்ணீருடன் இறந்த 186உயிர்களின் உறவுகள் இறந்தவர்களின் நினைவு நாளில் சத்துருங்கொண்டான் சந்தியில் அமைந்துள்ள தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவது வழமை.

அந்தவகையில் கடந்த 09.09.2021 அன்று தற்போதைய சூழ்நிலை அறிந்து மிக குறைவான மக்கள் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி விளக்கேற்றினர்.
பனிச்சையடி கிராமத்தில் பிறந்தவள். இறந்தவர்களின் இழப்புகள் சோக கதைகள் கேட்டே நான் எனது ஊரில் வளர்ந்தவள். அந்தவகையில் 2002 ம் ஆண்டு இந்த தூபியானது அமைக்கபட்ட நாளில் இருந்து இந்த நிகழ்விற்கு உரிய நேரத்தில் நான் செல்வேன் இது புதிய விடையம் அல்ல.

குறிப்பாக உள்ளூராட்சி தேர்தலில் மட்டு மாநகரசபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக உறுப்பினராக  தெரிவானேன். ஆனால் எனது வட்டார மக்களின் வாக்குகள் கிடைத்தே எனக்கான அடையாளம் கிடைத்தது . அந்தவகையில் மக்களின் நலன்கள் பொதுவான விடையங்களில் பங்கேற்பது தவறான விடையம் அல்ல.

ஆகவே தற்போதும் நான் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது நான் இந்த தூபியை கடக்காமல் செல்ல முடியாது,இந்த தூபியானது 4கிராமத்தில் உயிரிழந்த உறவுகளின் அடையாள கல்லறை மட்டுமே தவிர வேறு எந்த தவறான விடையமும் இல்லை. பிறந்த மண்ணில் எனது கடமையை செய்தேன் என்பதை வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு கூரப்பட்டது குறித்து விசாரணை