Home செய்திகள் நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகளில் மாற்றம்

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகளில் மாற்றம்

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான தனிமைப்படுத்தல்
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக அவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்காக ஹோட்டல்களில் தங்கவேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.

நாட்டுக்கு வருகை தரும் இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் அவர்களுக்குக் கொரோனாத் தொற்று இல்லையென்றால், அவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய நடைமுறையானது அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்குப் பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெறும் வரையில் அவர்கள் ஹோட்டல்களில் தங்கவைக்கப்படும் நடைமுறையே தற்போது உள்ளது.

இவ்வாறு தங்க வைக்கப்படும் ஹோட்டல்களில் அதிக கட்டணம் அறவிடும் மோசடியான செயற்பாடு தொடர்பில் செய்திகள் வெளியாகி இருந்தன.

குறித்த தனிமைப்படுத்தல் ஹோட்டல்களில் இடம்பெறும் இவ்வாறான மோசடி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச அவதானம் செலுத்தியதுடன், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

அதற்கமைய, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு சில மணித்தியாலங்களுக்குள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசு தீர்மானித்துள்ளது என சுகாதார அமைச்சர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version