Home ஆய்வுகள் மலையக கல்விச் சவால்கள்-  துரைசாமி நடராஜா

மலையக கல்விச் சவால்கள்-  துரைசாமி நடராஜா

இணையவழி கற்கையால் பாதிப்பை எதிர்நோக்கும் ஆசிரியர்கள் - மாணவர்கள் |  Virakesari.lk

இலங்கை இப்போது பல துறைகளிலும் சவால்களை சந்தித்து வரும் நிலையில் இதனால் ஏற்படும் தாக்க விளைவுகள் அதிகமாகியுள்ளன. இவற்றுள் கல்வித்துறை மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது.

கல்வித்துறையின் பின்னடைவுகள் பாதிப்புகள் பலவற்றுக்கும  அத்திபாரமாக அமையும் நிலையில் “கல்வியால் மட்டுமே மேலெழும்ப முடியும்” என்ற நிலையினைக் கொண்ட சமூகங்கள் இதனால் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.இந்த வரிசையில் மலையக சமூகமும் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றது.மலையக சமூகத்தின் கல்வி நிலைமைகள் ஏற்கனவே பின்தங்கிய வெளிப்பாடுகளைக் கொண்டுள்ள நிலையில் சமகால மற்றும் கொரோனா நிலைமைகள்  மேலும் அதிகளவான அழுத்தத்தை மலையகக் கல்வியில் பதித்துள்ளன.

கல்வி என்பது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகும்.அதனை உலகையே மாற்றுவதற்குப் பயன்படுத்தலாம் என்கிறார் நெல்சன் மண்டேலா.கல்வி என்பது பிழைப்புக்கு வருவாய் தேடும் ஒரு வழிமுறை அல்லது செல்வம் ஈட்டும் ஒரு சாதனம் மட்டுமன்று.அது ஓர் ஆன்மீக வாழ்வுக்கு ஆற்றுப்படுத்தும் ஒரு கற்கை முறை.

மெய்மையைத் தேடுவதற்கும் அறநெறியைப் பயில்வதற்கும் மனித ஆன்மாவுக்கு பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறை என்கிறார் விஜயலட்சுமி பண்டிட். இவ்வாறாக கல்வி குறித்து பல்வேறு விளக்கங்கள் காணப்படுகின்றன.

தனி மனித அபிவிருத்தியாயினும் சரி, சமூக மற்றும் நாட்டின் அபிவிருத்தியாயினும் சரி கல்வி என்பது  மிகவும் இன்றியமையாத ஒரு விடயமாகவே விளங்குகின்றது. எனினும் பூரணமான கல்வியினைப் பெறுவதில் பல்வேறு இடையூறுகள் காணப் படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த வகையில் நோக்குகின்றபோது மலையக சமூகத்தின் கல்வி நிலைமைகள் தொடர்பாக நாம் சற்று அதிகமாகவே பேசவேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது.மலையக சமூகம் இந்நாட்டில் இருநூறு வருடகால வரலாற்றினைக் கொண்டுள்ள போதும் இம்மக்களின் வரலாற்றுக்கும் எழுச்சிக்கும் இடையே பாரிய விரிசல்நிலை காணப்படுவதாக புத்திஜீவிகள் வலியுறுத்துகின்றனர்.

1948 ம் ஆண்டு இந்திய வம்சாவளி மக்களின் பிரசாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.இது குறித்து அரசியல் விமர்சகர் தயான் ஜயதிலக்க பின்வருமாறு கூறுகின்றார்.” இது பல முகங்களைக் கொண்ட ஒரு பாவச் செயலாகும்.அதீத தேசியவாதிகளான நம்மில் பலர் எமது மண்ணைப் பறித்து அதில் இம்மக்களைக் குடியேற்றிய காலனித்துவ அடக்குமுறையாளர்களுடன் நட்பு பாராட்டுகின்றோம். ஆனால் பலியாக்கப்பட்ட இம்மக்களை வெறுக்கின்றோம்.பின்னர் அவர்களது குடியுரிமையைப் பறித்து அவர்களை இரண்டாந்தர பிரஜைகளாக்கினோம்.எனினும் அவர்களது உழைப்பில் தான் நாம் எல்லோரும் வாழ்ந்தோம். இந்தப் பாவத்துக்கு ஒரு பெயர் உண்டு.அதுதான் இனவாதம்”  என்கிறார் ஜயதிலக்க.

அரசியல் அநாதைகளான மலையக மக்கள் சுதந்திரத்தின் பின்னர் புறந்தள்ளப்பட்ட வரலாறு மிகவும் கசப்பானதாகும்.இந்த வரிசையில் மலையக மக்கள் தொடர்ச்சியாகவே கல்வியில் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாகவே இருந்து வந்துள்ளதும் தெரிந்ததேயாகும். ஏனைய மக்களுக்கு இந்நாட்டில் வழங்கப்பட்ட கல்வி வாய்ப்புக்கள் இச்சமூகத்தினருக்கு வழங்கப்படாது மறுதலிக்கப்பட்டு வந்துள்ளன.

 கல்வி சமத்துவமின்மை

“இலங்கை அரசின் கொள்கைகள் பால்,வகுப்பு, இனம் என்பவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டவில்லை.ஆனால் இதற்கு ஒரேயொரு புறநடை உண்டு.அதாவது தென்னிந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு பெருந்தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் கல்வி காலனித்துவவாதிகளின் தேவைகளுக்கு அடிபணிந்திருந்தது. சுதந்திரத்திற்குப் பின்னரான சமூக அபிவிருத்திக் கொள்கைகளும் கூட அவர்களை கவனத்திற் கொள்ளவில்லை” என்று பேராசிரியர் சுவர்ணா ஜயவீர கூறுவதிலிருந்து மலையக மக்கள் மீதான கல்விப் பாகுபாட்டினை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் படித்துவிடக்கூடாது என்பதிலே தோட்ட நிர்வாகிகள் மிகவும் கவனமாக இருந்தனர்.தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கு தோட்ட முகாமையாளரே பொறுப்பு. ஆனால் இலாபத்தை உச்சப்படுத்துவதையே பிரதான நோக்கமாக கொண்டிருந்த தோட்ட முகாமையாளரோ தமது இலாபங்களைப் பாதிக்கும் எல்லாவித செலவினங்களையும் இயன்றளவு குறைப்பதற்கு முயன்றார்.இதனால் தொழிலாளரது பிள்ளைகளின் கல்வியில் செலவிடுவதற்கு, அவர்கள் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அளித்த அதேயளவு முக்கியத்துவத்தை அளிக்கவில்லை.இப்பிள்ளைகள் கல்வியறிவு பெற்றால் தோட்ட வேலையில் அவர்களது ஆர்வம் குன்றிவிடக்கூடும் என்ற ஐயமும் அவர்களிடம் காணப்பட்டது என்பதும் புத்திஜீவிகளின் கருத்தாகும்.

இந்நிலையில் 1973 இல் 51.7 வீதமான தோட்ட மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாத நிலையில் 40.6 வீதமானோர் மட்டுமே ஆரம்பக்கல்வியை பெற்றிருந்தனர்.இரண்டாம் நிலைக் கல்வியை 6.7 வீதமானோரும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றோர் 1.3 வீதமாகவும் காணப்பட்டனர்.1995 இல் 21.9 வீதமான பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாதிருந்தனர்.26.9 வீதமானோர் ஒன்பதாம் வகுப்பிற்கு குறைந்த கல்வியையும், 21.6 வீதமானோர் மட்டுமே க.பொ.த.சாதாரணதரம்  அல்லது அதற்கு மேற்பட்ட கல்வியைப் பெற்றிருந்ததாக புள்ளிவிவரங்கள் வலியுறுத்துகின்றன.

2012/13 ம் ஆண்டுகளில் 12.2 வீதமான பிள்ளைகள் பெருந்தோட்டத்தில் பாடசாலைக்கு செல்லாதிருந்தனர்.இந்த ஆண்டுகளில் நகரத்தில் இந்த வீதம் 2.2 ஆகவும், கிராமத்தில் 3.5 ஆகவும் காணப்பட்டதோடு தேசியளவில் 3.7 ஆக  பாடசாலைக்கு செல்லாதோர் வீதம் காணப்பட்டது.

மலையக பெருந்தோட்ட கல்வி நிலை இவ்வாறாக பின்னடைவு கண்டு வந்த நிலையில் இந்நிலையிலிருந்தும் மீட்டெடுப்பதற்கு சீடா உள்ளிட்ட நிறுவனங்களும் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வந்துள்ளதையும் இங்கு நினைவூட்டுவது மிகவும் பொருத்தமாகும். ஏற்கனவே பின்னடைவு கண்டுள்ள மலையகக் கல்வியை கொரோனா புரட்டிப்போட்டிருந்தது. கொரோனாவின்  உக்கிரத்தால் பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் அது தொடர்கல்விக்கு இடையூறினை ஏற்படுத்தியது.

பாடசாலைக்கல்வி கேள்விக்குறியானதோடு மாணவர்களின் கற்கும் ஆர்வமும் குன்றியது. சில மாணவர்கள் கற்பதை விடுத்து நகர்ப்புறத்தில் உள்ள பல்வேறு தொழிற்றுறைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.ஆசிரியர்களின் கற்பித்தல் நடவடிக்கைகளும் கேள்விக்குறியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போதும் கொரோனா தீவிரமாக நாட்டில் பரவி வருவதாகவும் இதனால் பொதுப் போக்குவரத்து,உள்ளக மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறும் கடுமையாக சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனிடையே எதிர்காலத்தில் கொரோனா பாடசாலை நடவடிக்கைகளை மீண்டும் முடக்கிவிடுமோ என்ற அச்சமும் இப்போது மேலெழுந்திருக்கின்றது.

 வாய்ப்புகள் மறுப்பு

இது ஒரு புறமிருக்க எரிபொருள் பிரச்சினை தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது.இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் பாடசாலையை மூடவேண்டிய சூழல் மேலெழுந்தது. இதுவும் மாணவர்களின் கல்விக்கு ஆப்பு வைத்தது.

இதேவேளை தற்போது பாடசாலையின் நடவடிக்கைகள் வாரத்திற்கு மூன்று நாட்கள் என்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளபோதும் கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேசங்களில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த பஸ் வண்டிகள்  எரிபொருள் உள்ளிட்ட பல பிரச்சினைகளையும் காரணங்காட்டி  உரிய சேவையினை வழங்காமையின் காரணமாக ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்வதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் ஓரிரு ஆசிரியர்களை மட்டுமே கொண்டு சில பாடசாலைகள் இயங்க வேண்டிய இக்கட்டான சூழல் மேலெழுந்துள்ளது.எனவே பாடசாலைகள் வாரத்தில் மூன்று நாட்கள் திறக்கப்பட்டபோதும் மாணவர்கள் உரிய கல்வி வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளாது சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர்களிடையே தற்போது வறுமை நிலை அதிகரித்து வரும் நிலையில் அது கல்வி அபிவிருத்திக்கு பெரும் தடையாகவுள்ளது. மூன்று வேளை உணவு, நிறையுணவு இவையெல்லாம் கேள்விக்குறியாகி வரும் நிலையில் கல்வி உள்ளிட்ட இதர நடவடிக்கைகளுக்கு பணத்தை முதலிடுவதில் பெருந்தோட்ட மக்கள் இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

கற்றலுக்கான வளங்களை தமது பிள்ளைகளூக்கு பெற்றுக் கொடுக்க முடியாது பல பெற்றோர் அல்லல்படுவதனை கண்கூடாகவே காணமுடிகின்றது.இத்தகைய நிலைமைகளாலும் மலையகக் கல்வி பின்னடைவு கண்டு வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே மலையகப் பகுதிகளில் காணப்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை, துறைசார் ஆசிரியரின்மை, போக்குவரத்து பிரச்சினைகள், பாடசாலைக்கும் வீட்டிற்கும் இடையேயான தூரம், வளப்பகிர்வில் நியாயமின்மை, பிள்ளைகள் எதிர்கொண்ட  பலவிதமான நோய்கள் எனப்பலவும்  கல்வியில் இடையூறு ஏற்படுவதற்கு உந்துசக்தியாகி இருந்ததையும் குறிப்பிட்டாதல் வேண்டும்.

 ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு கல்வி அடித்தளமாகி இருக்கின்றது.எனினும் முதலாளித்துவ சமுதாயத்தில் கல்வி, கலை, இலக்கியம் அனைத்தையும் சுரண்டும் வர்க்கம் ஏகபோக உரிமையாக்கிக் கொண்டுள்ளது.எனவே உழைக்கும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாக உள்ளது என்ற கருத்துக்களும் ஓங்கி ஒலித்து வருகின்றன.எவ்வாறெனினும்ஒரு சமூகம் மேலெழும்புதற்கு கல்வியே. பெரிதும் கை கொடுக்கும் என்பதனை மறுப்பதற்கில்லை.

கல்வி அபிவிருத்தி காரணமாக  உலகளாவிய ரீதியில் பின்னிலை சமூகங்கள் பலவும் முன்னிலைக்கு வந்துள்ளன என்பதும் யாவரும் அறிந்த ஒரு விடயமாகும்.இந்த வகையில் மலையக சமூகம் மேலெழும்புவதற்கும் கல்வியே கை கொடுக்கும் என்ற நிலையில் சமகால சறுக்கல்களால் மலையகக் கல்வி மென்மேலும் பாதிப்பிற்குள்ளாகும் நிலைமைகளே அதிகமுள்ளன.

இவற்றிலிருந்தும் மீட்டெடுத்து மலையகக் கல்வியை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

Exit mobile version